உ
சீன நாட்டின் சிவாலயம்
‘நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க”
- மாணிக்க வாசகர் உயிர் உருகி ஈசனிடம் கரைந்த வரிகள் இவை.
ஈசன் - சைவ சமயத்தின் முழு முதற்கடவுள். நாயன்மார்கள் அன்பிலும், பக்தியிலும் ஈசனிடம் இரண்டறக் கலந்தவர்கள். பதிகங்கள் இறைவனையும் நம்மையும் ஒரே நேர்கோட்டில் ஒன்றிணைத்து ஐக்கியப்படுத்துபவை.
தமிழகத்தில் ஒவ்வொரு சிவாலயமும் ஒவ்வொரு சிறப்பு கொண்டது. பாரம்பரியமும், பழமையும் கொண்ட ஆலயங்கள் நமது வாழ்வியல் மட்டுமல்ல, ஆன்மீக அறிவின் கம்பீரமான அடையாளங்களாக ஓங்கி உயர்ந்து நிற்கின்றன. இவைகளில் பாடல் பெற்ற தலங்கள் அதீத சிறப்புக்குறியவை.
தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமான சிவாலயங்கள் அனைத்துமே தனித்தனி சிறப்புடையவை.
ஈசன் புகழ் இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் பல நாடுகளுக்கும் பரவியிருக்கிறது என்பதற்கு உதாரணமாய்த் திகழ்கிறது ‘திருக்கதாலீசுவரம்” என்னும் சிவாலயம். சீன நாட்டின் துறைமுக நகரான சூவன்லிசௌவில் சகயுகம் சித்ரா பவுர்ணமி அன்று குப்லாய்கான் என்ற சீன சக்கரவர்த்தியால் இந்த சிவாலயம் நிர்மாணிக்கப்பட்டது.
குப்லாய்கான் மங்கோலிய சக்கரவர்த்தி செங்கிஸ்கானின் பேரன் ஆவார். யுவான் அரச மரபைத் தொடங்கியவரும் இவரே. இவருடைய உடல் நலமடையும் பொருட்டே இவ்வாலயம் நிர்மாணிக்கப்பட்டது. ‘திருக்கதாலீசுவரன் உதயநாயனார்” என்பதே இறைவனின் பெயராகும்.
தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பவரே மன்னனின் ஆணையை ஏற்று ஆலயத்ததை நிர்மாணித்தார். கோவிலில் சோழர் கால சிற்பங்கள் காணப்படுவது குறிப்பிடத்தகுந்தது.
இக்கோவிலில் காணப்படும் தமிழ்க் கல்வெட்டு மிகவும் முக்கியமானது. அக்கல்வெட்டில் குப்லாய்கான் காலத்தில் தமிழகத்தில் பாண்டியப் பேரரசு ஆட்சி புரிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவ்விரு நாடுகளுக்குமிடையே தூதர்கள் போக்குவரத்து மற்றும் வணிக பரிமாற்றம் நடைபெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு (இந்தியாவிற்கு) வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான இந்த தமிழ்க்கல்வெட்டு தமிழர்களின் பெருமைக்கு இன்னுமொரு சான்றாக விளங்குகிறது.
No comments:
Post a Comment