திருமணம் என்னும் மதுவை
திருமணம் - மனித வாழ்வில் இன்றியமையாத, இனிமையான நிகழ்வு. இந்நிகழ்வு சடங்கு, சம்பிரதாயங்களைத் தாண்டி குடும்ப கௌரவம், அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பொதுவாக திருமண நிகழ்வுகள் நாடு, இனம், மொழி, கலாச்சாரம் இவற்றின் அடிப்படையில் வேறுபடும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் பழங்குடி இன மக்களின் திருமணம், வாழ்க்கை முறை படித்த நாகரிகம் சார்ந்த மக்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது.
1) படகர்கள்
நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடி இன மக்களில் படகர்கள் பிரசித்தி பெற்றவர்கள். ஊர் மணியக்காரர் அனுமதியுடன் பெரியவர்களே திருமணம் பேசி முடிக்கின்றனர். அதை பெண்ணோ, பையனோ நிராகரிப்பதில்லை.
மாப்பிள்ளை வீட்டார் உரிய மரியாதைகளுடன் பெண்ணையும் அவள் வீட்டாரையும் அழைத்து வந்து விருந்து படைக்கின்றனர்.
பின் மணமக்களுக்கு தனிக்குடித்தனம் அனுமதிக்கப்படுகிறது. பெண்; கருவுற்ற பின்பே சீதன விஷயம், பரிசம், முகூர்த்தம் எல்லாம் பேசி முடிக்கப்படுகிறது. இவர்கள் திருமணத்தை ‘மதுவை” என்று அழைக்கின்றனர்.
2) தோடர்கள்
நீலகிரியில் வாழ்ந்து வரும் ‘தோடர்” இனப் பழங்குடியினர் திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்துகின்றனர்.
மணமகன் மணமகளுக்கு ‘கேஞ்ஸ்” செடியை அளிப்பான். அதைப் பெற்றுக் கொண்டு குடிசைக்கு முன்னால் நிற்பார்கள். பெரியவர்கள் தண்ணீரும், பூவும் வைத்திருப்பார்கள். அதை எடுத்துக் கொண்டு மணமக்கள் இருவரும் குடிசைக்குள் நுழைவார்கள். அதைத் தொடர்ந்து விருந்தும், நடனமும் நடைபெறும்.
இதையடுத்து பெண் கர்ப்பம் தரித்த ஏழாவது மாதம் ‘வில்லம்பு” சடங்கு விமரிசையாக நடத்தப்படுகிறது. இச்சடங்கில் வில் அளிக்கிறவனே அப்பெண்ணுக்கு மரபுப்படி கணவனாகிறான். அமாவாசையன்று இச்சடங்கு நடைபெறுகின்றது. அன்று தோடர்கள் அனைவரும் நாவல் மரத்திற்கருகில் கூடுகிறார்கள். வில் சடங்கின்றி பிறக்கும் குழந்தைகள் அவமானச் சின்னங்களாக கருதப்படுகின்றனர்.
இவர்களிடையே இரு பெருங்கால் வழிகள் உண்டு. ஒரு பெருங்கால் வழியைச் சார்ந்தவர்கள் மற்றொரு பெருங்கால் வழியில் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்.
3) செஞ்சு பழங்குடியினர்
ஆந்திர மாநிலத்தில் உள்ள நல்ல மலைப்பகுதி கர்நூல், குண்டுர், நெல்லூர், பங்கனப்பள்ளி ஆகிய இடங்களில் வாழும் ‘செஞ்சு” பழங்குடி மக்கள் தெலுங்கு மொழி பேசுபவர்களாவர்.
ஆண், பெண் இருபாலரும் பருவமடைந்த பின்னரே திருமணம் செய்கின்றனர். மாமன் அல்லது அத்தை மகளையே பெரும்பாலும் திருமணம் செய்கின்றனர். ஒரு பெண்ணை உண்மையாக விரும்பினால், பெற்றோர் ஒப்புதலுடன் திருமணம் நடைபெறுகிறது. மணமகளுக்கு சேலை இரவிக்கையும், அத்தைக்கு ஓர் இரவிக்கையும் மணமகன் கொடுக்க வேண்டும். பின் திருமண நாள் நிச்சயிக்கப்படுகிறது.
மாப்பிள்ளை வீட்டார் அரிசி, நறுமணப் பொருட்கள் மற்றும் மது வகைகளுடன் பெண் வீட்டிற்கு செல்வர். மணமக்கள் பாயில் அமர்வர். அவர்களின் விருப்பத்தை ‘பெத்தமனுஷி” என அழைக்கப்படும் சிற்றூரின் தலைவர் வினவுவார். பின்பு பெண் சேலையை, மாப்பிள்ளை துணியுடன் முடிச்சு போடுவார். தலைவரும், உறவினரும் அரிசியைத் தூவி வாழ்த்துவார்கள். அதன் பிறகு மதுவும், நடனமும் இடம்பெறும்.
மறுநாள் மாப்பிள்ளை வீட்டில் விருந்து, கேளிக்கைகள் முடிந்த பின்னரே தம்பதிகள் கணவன் மனைவியாக வாழத் தொடங்குவர். கற்பு நிலையில் ஆண், பெண் இருவருக்கும் சம உரிமை தரப்படுகிறது. முதல் திருமணம் தோல்வி அடைகிற பெண்ணுக்கு, அடுத்த வாழ்க்கைக்கு அனுமதி தரப்படுகிறது.
4) தொதவர்
தொதவர் இன மக்களின் திருமண முறைகள் மாறுபட்டவை.
ஆண், பெண் இருவருக்குமிடையே சுதந்திர வாழ்க்கை அனுமதிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை மணக்க விரும்புகிறவன் ஐந்து எருமைகளை பரிசம் தந்து திருமணம் செய்ய வேண்டும். மண முறிவு எனில் ஐந்து எருமைகளையும் பெண் வீட்டார் மணமகனுக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்.
இவர்களுக்குள்ளும் இரு பிரிவுகள் உண்டு. பிரிவு மாறி திருமணம் நிகழ்வதில்லை. ஆனால் ஓர் இளம் பெண் மற்றொரு இனத்தானை காதலனாக விரும்பி ஏற்கலாம்.
பெண்கள் ஐந்து, ஆறு முறை கூட மணமுறிவு செய்கின்றனர். ஒரு கணவனுக்கு பல மனைவிகள், ஒரு மனைவிக்கு பல கணவன் என்பது இங்கு அனுமதிக்கப்பட்ட ஒன்று. பெண்ணுக்கு கணவன் தவிர, அங்கீகரிக்கப்பட்ட காதலர்களும் உண்டு. பெண் பற்றாக்குறையால் இந்த முறை கையாளாப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
5) முதுவர்
முதுவர் என்னும் ஆதிவாசிகள் தமிழ்நாட்டின் ஆனைமலைக் குன்றுகளிலும், ஏலக்காய் மலைகளிலும், கேரளாவிலும் வாழ்கிறார்கள்.
மணமான பெண்கள் தலையில் கல்யாணச் சீப்பை வைத்துக் கொள்கிறார்கள். ஒரு பெண்ணைக் காதலிக்கத் தொடங்கியவுடனேயே முதுவ ஆதிவாசி ஆண் இத்தகைய சீப்பு செய்யும் பணியில் ஈடுபடுகிறான்.
இதற்காக பொன்னிறமான தங்க மூங்கிலைத் தேர்ந்தெடுத்து, பல வண்ண வேலைப்பாட்டுடன் செய்கின்றனர். இக் கல்யாணச் சீப்பே முதுவர்களுக்கு தாலி போன்றது.
பருவமடைந்த பின்னரே பெண்களுக்குத் திருமணம் செய்யப்படுகிறது. ஏலக்காய் மலையில் வாழும் முதுவர்கள் பெரும்பாலும் ஒரு தார மணத்தையே விரும்புகின்றனர். பெண் பிள்ளைகள் பிறப்பதை மிகவும் விரும்பி வரவேற்கின்றனர்.
பையன்கள் வாலிப வயதையடைந்தால் ‘தலைப்பாகை” கட்டும் வழக்கம் உள்ளது. ஒரு நல்ல நாளில் தாய்மாமன் அவனுக்கு தலைப்பாகை கட்டி விருந்தளிப்பார்.
திருமணங்கள் எல்லாம் பெரும்பாலும் அந்தி சாயும் நேரத்தில்தான் துவங்குகிறது. பையன் பெண்ணுக்கு ஆடை ஆபரணங்கள் கொடுக்க வேண்டும். தாரை, தம்பட்டம் முழங்க கோவிலில் வந்தவர்கள் முன்னிலையில் தானே தயாரித்த ‘கல்யாணச்சீப்பை” பெண்ணின் தலையில் மாப்பிள்ளை சூட்டியதும் திருமணம் நிறைவடைகிறது.
எல்லாத் திருமணங்களும் புதன்கிழமையன்றுதான் நடைபெறும்.
இன்னும் கோத்தர்கள், காடர்கள், ஏரவாளர்கள் உட்பட பல்வகைப்பட்ட பழங்குடியினர் வாழ்கின்றனர். இவர்கள் தங்கள் வாழ்வியல், திருமணம் போன்ற விஷயங்களில் சிற்சில மாறுபாடுகளுடன் வாழ்கின்றனர்.
No comments:
Post a Comment