Saturday, 4 April 2015

மலாயாவில் தமிழினம்

                                                             


                                                                          மலாயாவில் தமிழினம்

          இன்று மலேசியா என்று வழங்கப்படும் நாடு 1963ம் ஆண்டுக்கு முன் ‘மலாயா” என்றே வழங்கப்பட்டு வந்தது. இந்நாட்டில் மலாய்காரர், சீனர், இந்தியர் இன்னும் பலதரப்பட்ட மக்கள் வாழ்கின்றனர்.

          கிழக்கு, மேற்கு என இரு பிரிவுகளைக் கொண்ட மலேசியாவில் மேற்குப் பகுதியில்தான் தமிழர்கள் மிகுதியாக வாழ்கின்றனர். தமிழர் புலம் பெயர்ந்து வாழத்தொடங்கியது இங்கேதான்.

          இந்தியா, இலங்கை, மலாயா நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த ஆங்கிலேயர்கள் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோட்டத் தொழிலுக்காக தென்னிந்தியர்களை, குறிப்பாகத் தமிழர்களை வலுக்கட்டாயமாக மலாயாவில் குடியேற்றினர். 

          ஆங்கிலேயர் ஆட்சி மட்டுமல்ல, இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஜப்பானிய அரசும், மலேசிய வாழ் இந்தியர்களை கடுமையான சித்திரவதைக்குள்ளாக்கியது. 

          மலாயாவின் விடுதலைக்குப் பின்பே மலேசிய இந்தியர் காங்கிரஸ் அமைப்பு வலுப்பெறத் துவங்கியது. இந்த அமைப்பு மலேசிய இந்தியர் - தமிழர் கல்வி, சமுதாய மேம்பாட்டிற்காக சில அமைப்புகளையும், துணை குழுக்களையும் ஏற்படுத்தியுள்ளது.

          அந்த அடிப்படையில் உருவானது ‘மாஜீ கல்வி மேம்பாட்டுக் கழகம்”. பள்ளிக் கல்வி, தேர்வுகள், பயிலரங்குகள், கல்விக் கடனுதவி என அதன் பணிகள் விரிவடைந்து கொண்டே போகிறது.

          கல்வியிலும், தொழில்நுட்பத்திலும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது ‘டேப்” (TAFE) கல்லூரி. இக்கல்லூரி ஆஸ்திரேலியாவோடு யுனைட்டட் கிங்டம் (United Kingdom) நாடுகளில் உள்ள உயர்நிலைக் கல்வி மையங்களோடு இணைந்து பயிற்சிகளை வழங்கி வருகிறது. 

          தொழிலாளர் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது ‘தொழிலாளர் தொழில்நுட்பக் கல்லூரி” (WTI). இந்திய மாணவர்கள் தங்கள் கல்விக்காக உள்நாட்டு பல்கலைக்கழகங்களைத் தவிர்த்து இதர கல்லூரிகளை நாட வேண்டியுள்ளது. உயர் கல்வி கற்ற மாணவர்களுக்கு அதிக வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது ‘ஏய்ம்ஸ்ட்” (AIMST) பல்கலைக்கழகம். மணிப்பால் - மலாக்கா மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் இயங்கும் இம் மருத்துவக் கல்லூரி இந்தியாவின் மணிப்பால் கல்லூரியோடு இணைந்து மருத்துவர்களை உருவாக்கி வருகிறது. 

          பல போராட்டங்களுக்குப் பிறகு கடுமையான முயற்சிகளின் விளைவாக தமிழ் பள்ளிகள் நிறுவப்பட்டன. படிப்படியாக உயர்நிலைப் பள்ளிகளில் தமிழையும் ஒரு பாடமாக எடுக்கக்கூடிய வாய்ப்பு மாணவர்களுக்குத் தரப்படுகிறது. 

          மலேசியாவில் மூத்த பல்கலைக்கழகம் ‘மலாயா பல்கலைக்கழகம்”. இதில் 1956ல் இந்திய ஆய்வியல் துறை நிறுவப்பட்டது. அடுத்ததாக தமிழாய்வியல் துறை உருவாக்கப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘தமிழ்முரசு” நாளிதழின் ஆசிரியரான கோ. சாரங்கபாணியின் பெருமுயற்சியால் தமிழ் பயிற்று மொழியாக அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதோடு மட்டுமல்லாமல் மலாயா பல்கலைக்கழகத்தில் மிகப் பெரிய தமிழ் நூலகம் அமைக்கும் முயற்சியிலும் அவர் வெற்றி கண்டார். 

          மலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறையில் தற்காலத்தில் தமிழ் இலக்கியம், பக்தி இலக்கியம், இலக்கணம் ஆகியவை கற்பிக்கப்படுவதோடு, தேசிய மொழியிலும் தமிழ் இலக்கியத்தைப் பற்றியும், தமிழர் பண்பாடு, நாகரிகம் பற்றியும் கற்பிக்கப்படுகின்றன. இங்கு இந்திய ஆய்வியல் துறையில் முதுகலை, முனைவர் பட்டங்கள் பெறவும் வாய்ப்புள்ளது. 

          1966ம் ஆண்டு இப்பல்கலைக்கழகத்தில் முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

          ‘இந்திய பிரதிநிதித்துவ சபை” என்னும் ஒரு அமைப்பின் வழியாக தமிழ் - இந்திய மாணவர்கள் ஒன்று கூடி இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வமைப்பு மாணவர்களுக்கு சிறுகதை, கவிதைப் போட்டிகள் நடத்தி தேர்வு பெறும் படைப்புகளை நூலாக்கி வெளியிட்டு வருகிறது. 

          கொத்தடிமைகளாக குடியேற்றப்பட்டவர்கள், வியாபாரம், தொழில் ரீதியாக மலாயாவிற்குச் சென்றவர்கள் என அனைத்து வகையான இந்தியர் - தமிழர் இனம் பல இன்னல்களைக் கடந்து, நல்லுள்ளம் கொண்ட தலைவர்களின் போராட்டங்களாலும், முயற்சிகளாலும் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது.

No comments:

Post a Comment

.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}