பாகுபலி
பாகுபலி இந்திய
சினிமாவின் மிகப்பெரிய தலைநிமிர்வு. பல ஹாலிவுட் திரைப்படங்களுடன் ஒப்பிட்டு
பாகுபலி, அவ்வளவு பெரிய சாதனை அல்ல என்று சுட்டிக்காட்டியவர்களுக்கு,
இதோ சில விஷயங்கள்.
ஹாலிவுட் திரைப்படங்களுடன் இந்தியத் திரைப்படங்களை ஒப்பீடு செய்வது என்பது எத்துணை ஆரோக்கியமான விமர்சனமாக இருக்க முடியும் என்பதுதான்
கேள்வி.
இந்தியத் திரைப்படங்கள்
ஒரு குறிப்பிட்ட இலக்கணத்துடன் தயாரிக்கப்படுபவை. பலதரப்பட்ட மக்களையும் திருப்திப்படுத்தினால்
மட்டுமே, இங்கு வெற்றி என்பது சாத்தியம். இதில் டெக்னாலஜியையும் பயன்படுத்தி,
அடுத்தகட்ட வளர்ச்சியையும் நோக்கி திறமையாகப் பயணிக்கும் ஒரு இயக்குநரே
தயாரிப்பாளரின் நம்பிக்கையாக இருக்க முடியும்.
அந்த வகையில் ராஜமவுலி, இந்திய
சினிமாவை வேறொரு தளத்திற்கு லாவகமாக, மிகத்திறமையாக நகர்த்தியிருக்கிறார்.
டெக்னாலஜி இங்கு
கிராபிக்ஸ்களாகத் தட்டுப்படவில்லை. காட்சிகளோடு, அவைகளின் ஓட்டங்களோடு பின்னிப்பிணைந்து
பிரம்மாண்டத்தின் மிகப்பெரிய தூணாக மாறியிருக்கிறது.
கேமிரா (சினிமேட்டோகிராபி)
கண்களுக்கு தரும் குளுமை உயிர்வரை உள்ளே சென்று சில்லிட வைக்கிறது. சில சமயங்களில் நாமும் அருவிக்கருகில்
இருப்பது போன்ற குளிர்வான உணர்வைத் தருவது நமது கலைஞர்களின் அசாத்திய திறமை.
ஒப்பனைகள் (மேக்கப்)
சரித்திர உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.பிரம்மாண்டமான அரண்மனை செட்கள்,
போர்க்களக் காட்சிகள் உட்பட அனைத்துமே இந்தியன், உலக சினிமாவோடு போட்டி போடத்தயாராகிவிட்டான் என்பதன் அறிவிப்பு.
சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன்
இருவரின் நடிப்பே அதிகம் சுட்டிக்காட்டப்பட்டது. அவர்கள் மட்டுமல்ல ஒவ்வொருவருமே தங்களுக்கு
கொடுக்கப்பட்ட வேலையை மிக அழகாகச் செய்திருக்கிறார்கள்.
நட்சத்திர தேர்வே
ஒரு இயக்குநரின் பாதி வெற்றி. அந்த வகையில் ராஜமவுலி முழு வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் தேர்ந்தெடுத்த பிரபாஸ்,
ராணா இருவருமே பாகுபலிக்கு உயர்ந்த கம்பீரத்தை வழங்கியிருக்கிறார்கள்.
குதிரையில் இரண்டு
கைகளிலும் ஆயுதம் சுழற்றி பாகுபலி வரும் காட்சி, பாகுபலியின்
பெயரைக் கேட்டதும் சோகங்கள் சந்தோஷங்களாகும் காட்சிமாற்றம், அருவியில்
ஏறி விழும் பிரபாஸிடம் லாஜிக்கை யோசிக்க விடாமல், அடுத்த காட்சிக்கு
நம்மை அழைத்துச் செல்லும் இயக்குநரின் சாமர்த்தியம், நீருக்கு
மேல் குழந்தையைத் தூக்கிச் செல்லும் ரம்யாகிருஷ்ணனின் கை போன்ற வித்தியாசமான காட்சியமைப்பு,
வண்ண வண்ண மலர்களின் மத்தியில் பிரபாஸ், தமன்னா
பாடல் காட்சி, ராணாவின் பார்வையில் தெறிக்கும் வில்லத்தனம் என
ரசிக்க வைக்கும், பிரம்மிக்க வைக்கும் காட்சிகள் ஏராளம்.
அக்கம்பக்கம் திரும்ப
விடாமல் சீட்டின் நுனிக்கு நம்மைக் கொண்டு வந்து, நம்மையறியாமல்
கைதட்ட வைத்து, முடிவையும் சொல்லாமல், வெற்றிக்கனியைத்
தட்டியிருப்பதுதான் திரைக்கதையின் சுவாரஸ்யம்.
ஹாலிவுட் படங்களுடன்
பாகுபலியை ஒப்பீடு செய்வது முற்றிலும் தவறு. கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டும் ஒரு தயாரிப்பாளரின் நலனை உத்தேசித்தே
ஒரு இயக்குநர் செயல்பட முடியும். இந்திய மக்களின் ரசனை,
எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய வேண்டிய நிர்பந்தமும் இயக்குநருக்கு மிக
அதிகமாகவே உண்டு.
இரண்டையும் கருத்தில்
கொண்டே பாகுபலி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்திய மண்ணின் தன்மை மாறாமல், அதன் உலகளாவிய
வளர்ச்சியை நோக்கி பாகுபலி, முதல் அடி எடுத்து வைத்திருக்கிறது. எனவே பாகுபலி வெற்றிப்படம் மட்டுமல்ல,
இந்தியனின் கவுரவமும் கூட.
---இரா. சைலஜா சக்தி
விமர்சனம் மிக அருமை. விமர்சன நடை superb,
ReplyDeleteஎஸ். சுப்பிரமணியன்,
சேலையூர், தாம்பரம்
நன்றி.
Delete