ஷீரடி - மகான் பாபாவின் புண்ணிய பூமி. பாபாவின் பாதம் பதிந்திட்ட பெருமை பெற்ற புனித பூமி. பாபாவின் மகிமையை அனுபவித்து உணர்ந்த அவர்தம் பக்தர்களுக்கு ஷீரடி பயணம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மீகப் பயணமாகும்.
ஒரு முறை ஷீரடியில் பாதம் பதித்தால் மறுமுறை நம்மை அழைக்கும் திவ்ய பூமி.
சென்னை விமான நிலையத்தில் சோதனைகளை முடித்துவிட்டு விமானத்திற்காக காத்திருந்தோம். சரியாக 8.15 மணிக்கு ஏர் இண்டிகோ விமானம் எங்களை ஏற்றிக்கொண்டது. உள்ளே தீட்டிய புருவங்களும், லிப்ஸ்டிக் நிரம்பிய உதடுகளுமாய் ஏர்ஹோஸ்டஸ் பணிப்பெண்கள் விமானப் பயணத்திற்கான பாதுகாப்புக் குறிப்புகளை எடுத்துக் கூறினர்.
விமானம் எங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு ரன்வேயிலிருந்து கிளம்ப ஆரம்பித்திருந்தது. விமானம் ரன்வேயில் படிப்படியாக வேகத்தைக் கூட்டி மேலே எழும்புவதை ஜன்னல் வழியாகப் பார்த்தேன். ஏதோ வீர சாகசம் புரிந்துவிட்ட திருப்தியில் திரும்பினேன்.
உள்ளே ஏர்ஹோஸ்டஸ் திடீரென்று விமானம் விபத்துக்குள்ளானால் எப்படி தப்பிப்பது என்று பாடம் நடத்திக் கொண்டிருந்தாள். வயிறு பத்து கிலோ புளியைக் கரைத்தது. கடவுளே!!!!..... என்று முனகிவிட்டு அப்போதுதான் பாடம் நடத்திய பெண்ணை உற்று கவனித்தேன். அவளது பாப் தலை கருகருவென்று காட்சியளித்தது. அவள் முடியைக் கவனித்ததில் அவள் சொன்ன அறிவுரைகள் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டேன். பயம் போயே….. போச்சு……
விமானம் மேகங்களுக்கு நடுவே பயணிக்க ஆரம்பித்தது. அழகழகான விமான பணிப்பெண்கள் அவ்வப்போது தலைகாட்டி, உதடு சிரித்து குசலம் விசாரித்தனர். விமானம் முப்பதாயிரம் அடி உயரத்தில் பறப்பதாக அறிவிக்கப்பட்டது. அது ஒரு அதிசயமான ஆனந்த அனுபவம். மேகங்களைத் தொட்டு சிலிர்க்கப் போவது போன்ற பூரிப்பு. மொத்தத்தில் இனிமையான விமானப் பயணமாக இருந்தது.
சரியாக ஒன்றரை மணி நேரத்தில் புனே விமான நிலையத்தை வந்தடைந்தது ஏர் இண்டிகோ விமானம். பைலட் முகத்திலும் அதே மாறாத புன்னகை. பத்திரமாக கொண்டு வந்து இறக்கிவிட்ட அவருக்கு மனதில் நன்றி சொல்லிவிட்டு இறங்கினோம்.
புனே - பாபாவை நெருங்கிவிட்டோம் என்ற உணர்வை எங்களுக்குத் தந்தது. புனே விமான நிலையத்திலிருந்து கார் மூலம் ஷீரடி நோக்கி புறப்பட்டோம். பசி வயிற்றைக் கிள்ளியது. சப்பாத்தி தேசத்தில் தோசை தேடி அலைந்தோம். சிறுகுடல் பெருங்குடலை விழுங்கத் தயாரானபோது தோசை தந்து ரட்சித்தது ஷிக்ராபூர் ஹோட்டல். தோசையை உள்ளே தள்ளியவுடன் ஒரு வழியாய் வயிறு அமைதியடைந்தது.
Mahaganapathi at Ranjangaon |
முதலில் ரஞ்சன்கான் என்ற கிராமத்தை அடைந்தோம். இங்கு அஷ்ட விநாயகர் கோவில்களில் ஒன்றான மகாகணபதி ஆலயம் உள்ளது. வரிசையில் அரை மணி நேரம் நின்றிருப்போம். உள்ளே பெரிய பெரிய உண்டியல்கள். அழகான வேலைப்பாடுகள் உள்ள வெள்ளி மற்றும் வெண்கலத்தாலான பெரிய யானை சிலைகள் அணிவகுத்திருந்தன. விநாயகர் நமது விநாயகரிலிருந்து மாறுபட்டிருக்கிறார். சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். நிதானமாக அவர் முன்பு விழுந்து வழிபடவும், அமரவும் அனுமதிக்கின்றனர்.
Silver Elephant Statue |
பிரசாதத்துடன் வெளியே வந்தபோது மனதில் அமைதி தவழ்வதை உணர முடிந்தது. பிரதான வாயிலில் இரண்டு பிரம்மாண்ட யானை சிலைகள் எங்களை வழியனுப்பின. கருப்பு உடலும், சிவப்பு வண்ண அலங்காரங்களுமாக காட்சியளித்த கல் யானைகளின் கலை வேலைப்பாடுகள் பிரமிக்க வைத்தது. பிறகென்ன வளைத்து வளைத்து போட்டோ எடுத்துக் கொண்டோம்.
அஷ்ட விநாயகர் கோவிலில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் எங்களை வரவேற்றது சனிசிக்னாபூர். இங்கு முற்காலத்தில் வீடுகளுக்கு கதவுகள் இருந்திருக்கவில்லை. அதாவது திருட்டு பயமே இல்லை. எனவே கதவுகளுக்கான அவசியமும் அவர்களுக்கு இருக்கவில்லை. இது சனி பகவானின் அருளாக கருதப்படுகிறது. கால மாற்றத்தில் இப்போது கட்டப்படும் வீடுகள் மட்டுமே கதவுகளுடன் அமைக்கப்படுகின்றது. இரண்டு விதமான வீடுகளையும் பார்த்துக்கொண்டே சென்றோம்.
சனிசிக்னாபூரில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சனைஷ்வரர் கோவில். இங்கு மூலவர் சனீஸ்வரர். கருங்கல்லில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். இருபுறமும் கடைவீதிகள். ஜே ஜே என்று கூட்டம். நம்மூர் திருநள்ளாறு போன்று இவர்களுக்கு இந்த சனைஷ்வரர் கோவில் என்பதை தெரிவித்தது அங்கிருந்த மக்கள் வெள்ளம். தீவிர கண்காணிப்பில் ஆண்களும், பெண்களும் தனித்தனி வரிசைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் தாம் வாங்கிச் சென்ற எண்ணெயை துளைகளுடன் கூடிய தொட்டியில் ஊற்றுகிறார்கள். எண்ணெய் துளைகள் வழியே கீழிறங்கி குழாய்கள் வழியாக வந்து நேரே சனீஸ்வரர் சிரசின் மீது விழுந்து கொண்டேயிருக்கிறது.
சனீஸ்வரரை தரிசித்து விட்டு வெளியே வந்தோம். சுற்றிலும் நம்மை நெருங்கி வரவேற்றார்கள் யாசகர்கள். அவர்கள் பன்மொழித் திறமையுடன் முடிந்தவரை நம்மைப் பின்தொடர்கிறார்கள். ஒருவழியாக காரில் ஏறினோம். மதியமாகிவிட்டதை நினைவுபடுத்தியது வயிறு. ரொட்டியும், நாணும் எங்கள் பசியைப் போக்கின. மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம்.
ஒரு மணி நேரத்தில் கார் ஷீரடியைத் தொட்டது. பாபா வாழ்ந்த பூமி எங்களை மழையுடன் வரவேற்றது. மனதெங்கும் பரவசம் ததும்பி வழிந்தது. சுமார் 20 ஏக்கர் பரப்பில் பக்தர்களுக்கென அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட ”சாய் பக்தநிவாஸ்” தங்கும் விடுதிக்கு சென்றோம். வியாபார நோக்கில்லாமல் பக்தர்களுக்காக நடத்தப்படும் இந்த விடுதி குறைவான கட்டணத்தில் மிகத் தரமான நவீன வசதிகளோடு அமைந்துள்ளது. குறைந்த விலையில் பக்தர்களுக்கு உணவையும் விநியோகம் செய்கிறது.
Sri Sai Bhaktaniwas |
மழை சற்று ஓய்வெடுத்தது. நாங்களும் நிம்மதியாக பாபாவின் ஆலயம் நோக்கி விரைந்தோம். ஷீரடி – பாபா எத்தனையோ அற்புதங்களை தினம் தினம் நிகழ்த்திய பூமி அல்லவா? பாபாவை தரிசிக்கும் ஆர்வத்தில் ஆலயத்திற்குள் நுழைந்தோம்.
Sai Temple Entrance |
நீண்ட வரிசை என்றாலும் நிற்காமல் நகர்ந்து கொண்டிருந்தது மிகப்பெரிய சந்தோஷம். குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள், கர்ப்பிணிகள் என அனைவரும் வயது வித்தியாசமின்றி பாபாவை தரிசிக்க உற்சாகத்துடன் நகர்ந்து சென்று கொண்டிருந்தனர். ஆரத்தி துவங்கியது. ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பெரிய மானிட்டர்கள் பாபாவின் ஆரத்தியை ஒளிபரப்பின. பக்தர்கள் அதைப் பார்த்தபடியே வரிசையில் சென்று கொண்டிருந்தார்கள்.
சிலர் பாபாவின் நாமங்களை ஜெபித்துக் கொண்டே சென்றார்கள். வரிசை ஒவ்வொரு அறையாக கடந்தது. பாபாவை நெருங்கும் தருணத்தில் ஓரிடத்தில் அனைவருக்கும் தலா ஒரு பூந்தி பாக்கெட் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதோ பாபாவை நெருங்கிவிட்டோம். சற்று தொலைவில் பாபா தெரிகிறார். நெருங்க, நெருங்க பெரிய கோவில்களுக்கே உரிய நடைமுறை. இரண்டு பக்கத்திலிருந்தும் வருபவர்களை ஒன்றாக உள்ளே தள்ளும் முறை. இதுவரை ஆனந்தமாக வந்த எங்களுக்கு சிறிய அதிர்ச்சி. மக்கள் வெள்ளத்தில் மிதந்தே பாபாவை அடைந்தோம். நல்லவேளையாக பாபாவின் அருகே வந்தவுடன் மீண்டும் அதே அமைதி. அதே நிதானம். ஒருவர் பின் ஒருவராக அனுமதிக்கப்பட்டோம்.
Sri Sai Baba |
நிதானமாக பாபாவை அருகில் தரிசிக்கும் வாய்ப்பு தரப்பட்டது. கண் குளிர தரிசித்தோம். பட்டாடை பளபளக்க, மலர் மாலைகளுடன் தெய்வீகப் புன்னகை சிந்தும் பாபாவை மிக அருகில் பார்த்தவுடன் கண்கள் கலங்கின. ஒருவாறு நெகிழ்ச்சியை அடக்கியவாறே பாபாவின் பாதங்களை கண்ணீர் மல்க வணங்கினோம். மலர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
பாபாவின் அருகில் நின்ற ஒவ்வொரு நிமிடமும் வாழ்வில் மறக்க முடியாதது. இனம் புரியாத பரவசம் ஆன்மாவை, உடலை ஊடுருவிய கணம் அது. நினைக்குந்தோறும் உள்ளத்தில் நன்றி பெருக்கெடுக்கும் தருணமும் அதுவே. ஆம், தூரங்கள் பல கடந்து அவரை தரிசிக்க வந்த எங்களுக்கு அவர் அருகில் நிதானமாக நின்று அவர் அழகைக் கண்ணாரக் கண்டு உளமாற மகிழ வைத்த நிமிடம் அது. நன்றி பாபா!!!.
சந்தோஷமாக வெளியே வந்தோம். அன்றைய இரவு உணவு ஆலயத்தின் அருகிலேயே நாங்கள் விரும்பிய தென்னிந்திய உணவாய் அமைந்தது. மனமார, வயிறார உண்டோம். பாபாவை தரிசித்த மகிழ்ச்சியில் விடுதிக்குத் திரும்பினோம். இரவு நிம்மதியான உறக்கம்.
மறுநாள் காலையில் துவாரகாமாயியை அடைந்தோம். “துவாரகாமாயி”, பாபா 60 வருடங்களுக்கும் மேலாக தங்கிய மசூதியாகும். துவாரகாமாயிக்குள் பாபா ஏற்படுத்திய “துனி” என்னும் புனித நெருப்பு அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. துனியை தொட்டு வணங்கும் வாய்ப்பு கிடைத்தது. பாபா தங்கியிருந்த புனித துவாரகாமாயிக்குள் செல்லும் பாக்கியம் கிடைத்ததற்கு நன்றி கூறி வணங்கினோம்.
பாபா தனது கடைசி பத்தாண்டுகளில் இரவு நேரங்களில் ஓய்வெடுத்த இடம் “சாவடி” எனப்படுகிறது. அங்கு ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே சென்று வழிபட வசதி செய்துதரப்பட்டுள்ளது
Shree Chavadi |
பாபா அமர்ந்து அற்புதம் புரிந்த வேப்பமரத்தையும் வணங்கினோம். புனித சாம்பலான ”உதி” எங்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மிகுந்த மனநிறைவுடன் கடை வீதிகளில் ஷீரடி நினைவாக சில பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் விடுதி அடைந்தோம்.
மழை வெறித்து எங்கள் வழிபாட்டை மிகச் சுலபமாக்கியது. பாபாவின் அருளால் எங்கள் ஷீரடி பயணம் இனிமையான நினைவுகளைத் தந்தது. வார்த்தைகளால் விவரிக்க இயலாத பேரானந்தத்தோடு ஷீரடியிலிருந்து கிளம்பினோம் புனே விமான நிலையத்தை நோக்கி.
”ஜெய் சாய்ராம்! ஜெய் சாய்ராம்”