Monday, 28 December 2015

தலைமறைவாகும் நிர்பயாக்கள் (கவிதை)

தலைமறைவாகும் நிர்பயாக்கள்







பெண்
இந்த இரண்டெழுத்து வார்த்தை
இவளின் அடையாளம்

நிர்பயா
இந்த நான்கெழுத்து வார்த்தை
இவளின் அவலம்

புரிய வைக்கிறாள்
தானொரு குழந்தையென
தன் கடைசிக் கடிதத்தில்

கேட்கும் சப்தமெல்லாம்
பேருந்தின் ஓசையென ஓலமிடுகிறாள்

மிருகங்கள் கடித்துக் குதறியதாய் சொல்லி
உடல் கழுவ நீர் கேட்கிறாள்

அறைக்குள் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு
ஆணைக் கண்டும் அலறுகிறாள்

விடைபெற்று விட்டாள்
நிரந்தரமாய் நம்மிடமிருந்து

தண்டிக்கப்பட்டுவிட்டார்கள்
குற்றவாளிகள்

ஒரு சந்தேகம்

ஓடுகிற பேருந்தில் வேட்டையாடிய
மிருகங்கள் மட்டும்தான் குற்றவாளிகளா?

தேசிய பானமாகிவிட்ட மது
உள்ளே சென்றதும்
வெளியே தள்ளுகிறது
மனித மிருகத்தை
  
மீசை அரும்பும் முன்
அவன் ஆசைக்குள் போதையூற்றும்
இந்த மதுச்சமூகம்
முதல் குற்றவாளி

நாயகனின் இலக்கணம்
மதுவில் குளித்து
மங்கையில் திளைப்பதென
பாடம் நடத்தும் படைப்புகள்
இரண்டாம் குற்றவாளிகள்

உடல் அறிவியல் தெரியாமல்
ஆண் பலவீனம் புரியாமல்
அரைகுறை ஆடை
பெண்ணுரிமை எனப் பிதற்றும்
பெண் கூட்டம்
மூன்றாம் குற்றவாளிகள்

அங்கம் காட்டி
ஆணை மிருகமாக்குகிற
பெண்னே நீ தப்பித்துக் கொள்கிறாய்

நீ வெறியேற்றி அனுப்புகிற
அவன் கையில்
சிக்கி சின்னாபின்னமாவதோ
அப்பாவி நிர்பயாக்கள்தான்

நிர்பயாக்கள் பலியாவது
வக்கிர ஆண்களால்
ஆனால்
நிர்பயாக்கள் உருவாவது
பொறுப்பற்ற சமூகத்தால்

சமூகக் கடமை
ஆணுக்கு மட்டுமல்ல
சரிநிகர் சமானம் பேசும்
பெண்ணுக்கும்தான்

ஆகவே
சமூகம் தன்னைத்
திருத்திக் கொள்ளும்வரை
தலைமறைவாய் வாழுங்கள்
நிர்பயாக்களே!....
தப்பிப்பதற்காக……


   --- இரா. சைலஜா சக்தி.

Wednesday, 9 December 2015

மனிதம் என்ன விலை? (கவிதை)



                       னிதம் என்ன விலை?




ஒரு லிட்டர் பால்
ஒன்பது மடங்கு விலை உயர்வில்

குடிக்கிற தண்ணீரில்
கூடுமானவரை லாபம்

ஓட்டுக்காக ஓடிவந்து
தானமளிக்கும் கரை வேட்டிகள்

உன் தவறு! என் தவறு! என
அடித்துக் கொள்ளும் கட்சிகள்

ஏரிகளில் வீடு கட்டியது
யார் குற்றமென பஞ்சாயத்து

அனுமதியளித்தது அரசின் தவறாம்
இல்லை இல்லை
வீடுகட்டி விற்றவர் தவறாம்
இல்லை இல்லை
வாங்கிக் குடியேறியவர் தவறாம்

பஞ்சாயத்து முடிந்தபாடில்லை
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த
வானம் பொங்கியெழுந்து விட்டது

அந்நியன் ஸ்டைலில் அனைவருக்கும்
கருட புராணத் தண்டனை
விதிவிலக்கின்றி!...
ஆர்ப்பாட்டத்தின் முடிவில்
அடையாளம் காட்டியது மழை
அன்பான உள்ளங்களை

பேரழிவில் கூட
ஆதாயத்திற்கு அலையும் மனிதர்களே
மிச்சமிருப்பது பூமி மட்டும்தான்

பூமி தன் பொறுமை மீறுவதற்குள்
பொருள் தேடுங்கள் தமிழகராதியில்
மனிதம் என்ற வார்த்தைக்கு.
                 இரா. சைலஜா சக்தி

Wednesday, 2 December 2015

இயற்கையே கோபமா? (கவிதை)

 
                            இயற்கையே கோபமா?




மழையே என்ன கோபம் உனக்கு?

மக்களை மிதக்க வைக்கிறாய்.
ஆற்றங்கரைகளில் மணற்கொள்ளை செய்ததாலா?

வீடுகளை ஆக்கிரமிக்கிறாய்.
ஏரிகளை நாங்கள் ஆக்கிரமித்ததாலா?

உணவுக்காக தவிக்க வைக்கிறாய்.
பாலித்தீன் குப்பைகளை பூமிக்கு உணவளித்ததாலா?

நீருக்காக ஏங்க வைக்கிறாய்.
நிலத்தடி நீர்மட்டத்தை உறிஞ்சுவதாலா?

வாகனங்களை மூழ்கடிக்கிறாய்.
புகை கக்கி உன் வானப்பரப்பை பாழ்படுத்துவதாலா?

மின்சாரத்தை துண்டிக்கிறாய்.
குளிரூட்டும் ஏ.சிகள் ஓசோனை ஓட்டை போடுவதாலா?

வீடுகளை அழிக்கிறாய்.
நாங்கள் காடுகளை அழித்ததாலா?

மொத்தத்தில் பூமியை உனக்குள் அமிழ்த்துகிறாய்.
நாங்கள் பூமியை வெப்பமயமாக்கியதாலா?

நீ வற்றினால் மனித இனம் வற்றும்…
நீ முற்றினால் மனித இனம் அழியும்…


புரிந்து கொள்ள வேண்டியது
நீ அல்ல…. மனிதர்கள்தான்…

இயற்கை மனிதன் வாழ தன்னையே தாரை வார்க்கும்.
எல்லை மீறும் மனிதனை தனக்குள் தாரை வார்க்கும்…..

மனிதனே!... பூமி காத்து உன் சந்ததி காப்பாயா?
அல்லது பூமி சிதைத்து உன் வேரறுப்பாயா?

உன் பதிலை எதிர்பார்ப்பது…. நானல்ல….
பழிவாங்க காத்திருக்கும்
உன்னால் பாதிக்கப்பட்ட இயற்கை.

                       -இரா. சைலஜா சக்தி
.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}