Monday, 22 August 2016

அழகியல் ஆயிரம் (கவிதை)

                                 அழகியல் ஆயிரம்



வான் அழகு
வானை முத்தமிடும்
வெண்மேகம் அழகோ அழகு

பனித்துளி அழகு
பனித்துளி முத்தமிடும்
புல்வெளி அழகோ அழகு

மழைத்துளி அழகு
மழைத்துளி முத்தமிடும்
மண்வாசம் அழகோ அழகு

கதிரவன் அழகு
கதிரவன் முத்தமிடும்
காலைப்பொழுது அழகோ அழகு

நிலா அழகு
நிலவை முத்தமிடும்
நீலவான் அழகோ அழகு

பூமி அழகு
பூமியை முத்தமிடும்
பசுமை அழகோ அழகு

விண்வெளி அழகு
விண்வெளியை முத்தமிடும்
விண்மீன்கள் அழகோ அழகு

அலைகள் அழகு
அலைகள் முத்தமிடும்
அலைகடல் அழகோ அழகு

மலர்கின்ற மலர் அழகு
மலரை முத்தமிடும்
மகரந்தவாசம் அழகோ அழகு

மழலை மொழி அழகு
மொழியை முத்தமிடும்
மழலை அழகோ அழகு

காதல் அழகு
காதலை முத்தமிடும்
கவிதைகள் அழகோ அழகு

கண்கள்தோறும் அழகு
காட்சிகள்தோறும் அழகு
ஆர்வமிருப்பின்
ஆசையிருப்பின்
அழகியல் ஆயிரமுண்டு
அகிலத்தில்.

இரா. சைலஜா சக்தி



Thursday, 11 August 2016

ஆடிப்பூர ஆண்டாள் தேரோட்டம்(கவிதை)

                                        ஆடிப்பூர ஆண்டாள் தேரோட்டம்






     வாரணம் ஆயிரம் சூழ
    நாரணன்நம்பி கைத்தலம் பற்றியவள்
    பாவை பாடிய பாவை
    பரந்தாமன் மாலைசூடிய பூவை

    கடவுளை காதலனாக்கி
    கவிபாடிய பைங்கிளி
    அரங்கனை மணக்க
    ஆடிப்பூரத்தில் அவதரித்த
    அலைமகள் அவள்

    பவித்திர காதலால்
    பக்தி காதலால்
    பள்ளி கொண்ட
    பரந்தாமனுடன் கலந்தவள்

    பெரியாழ்வார் பெண்மகளாகி
    ஆழ்வார்கள் அன்பை
    அகிலம் அறிய செய்தவள்

    ஆண்டாள் அவதரித்த பூமி
    அலங்கரித்து நின்றது
    அவள் தேருக்காக
  
    வானையும் வளைக்கும் போலும்
    தெய்வ ஆண்டாளின் திருத்தேர்


    தேர் நகர நகர
    அலங்கரிப்புகள் அசைய அசைய
    அதுவரை அசைந்த மனம்
    அசையாது நிற்கிறது

    தேரில்
    கொலுவீற்று இருக்கிறாள்
    கோதையவள் கோவிந்தனுடன்

    தேரின் முன்னே
    கோவிந்த கோஷங்கள்
    கோலாட்ட வைபவங்கள்
    பக்தி பாசுரங்கள்

    கலைகள் முன்னே செல்ல
    கவிதாயினி கம்பீரமாய்
    பின்னே வருகிறாள்
    வடம் பிடித்தவர்க்கு
    வாழ்வு அளிக்க
    கை கூப்பியவர்க்கு
    காட்சி கொடுக்க
    பக்தி செய்பவர்க்கு
    பரிவு காட்ட
    பாவை நோன்பிருந்தவள்
    பாரில் வலம் வருகிறாள்

    தேரின் பின்னே
    சேவைக்கு மருத்துவ குழுக்கள்
    தேவைக்கு விரைவு ஊர்திகள்
    அணிவகுக்க சொல்லி
    ஆண்டாள் ஆணை போலும்

    தேரின் அழகு ஆச்சரியம்
    தேரின் அழகு அதிசயம்
    தேரின் அழகு அபூர்வம்
    தேரின் அழகு ஆனந்தம்

  
    காதலின் மறுபெயர் அன்பு
    அன்பின் மறுபெயர் ஆண்டாள்
    அன்று காதலில் ஆண்டவள்
    இன்று அன்பில் ஆளுகிறாள்


    காண கண்கோடி வேண்டும்
    ஆடிப்பூர ஆண்டாளை
    ஆடிப்பூர ஆண்டாள் தேரை

    காண கண்கோடி வேண்டும்
    காண கண்கோடி வேண்டும்
  
          --  இரா.சைலஜா சக்தி

Sunday, 7 August 2016

நட்பதிகாரம் - 2 (கவிதை)

நட்பதிகாரம் - 2 (கவிதை)




மக்களை ஆட்சி செய்தவன்
மனதை ஆட்சி செய்தது – தமிழ்ப்புலமை
கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

பகவத் கீதை நாயகனை
பாசத்தால் பிணைத்து போட்டது – வில்வித்தை
கிருஷ்ணன் – அர்ஜுனன் நட்பு

வஞ்சகம் நிறைந்தவனின்
வாழ்வுக்காக மாண்டது – வள்ளல்தன்மை
துரியோதனன் – கர்ணன் நட்பு

பிடிஅவலில் பசிபோக்கி
வறுமை நீக்கியது – குருகுல அன்பு
கிருஷ்ணன் – குசேலன் நட்பு

தான்வாழ கிடைத்த நெல்லிக்கனியை
தமிழ்வாழ தானமளித்தது – அரசனின் அன்பு
அதியமான் – அவ்வை நட்பு

தமிழ்ப்புலவனுக்கு தலையை
தயங்காமல் தந்தது – கொடைத்தன்மை
குமணன் – பெருஞ்சித்திரனார் நட்பு

உடலுக்குள் உயிர்போல்வதாம் நட்பு
இடுக்கண் களைவதாம் நட்பு
இடுக்கண் வரின்
இன்னுயிர் துறப்பதுவும் நட்பே….
        

            -- இரா. சைலஜா சக்தி

நட்பதிகாரம் - 1 (கவிதை)

நட்பதிகாரம் - 1 (கவிதை)




அவன்
பால்ய வயதின்
பள்ளித் தோழன்

ஒரே வகுப்பில்
ஒரே பெஞ்சில்
ஒருவரில் ஒருவர்
ஒன்றானோம் நட்பால்

புரியாத பாடங்களை
புரிய வைத்தான்
பருவ தவறுகளை
பாசத்துடன் திருத்தினான்

புகை பகையென
பண்பாக தடுத்தான்
மாணவிகளை நகைப்பது
மாண்பல்ல என்றான்

காப்பியடித்து தோ்வெழுத
கண்டிப்போடு மறுத்தான்

வேலைதேடி திரிகையில்
வியாபாரம் தந்தான்

காதலித்த எங்களை
கணவன் மனைவியாக்கினான்
பிள்ளைகளின் படிப்புக்கு
பாதை காட்டினான்

வழிகாட்டியவன் வாழ்வில்
விபத்து விதிசெய்தது

உயிரான பிள்ளைகளை
மறந்துபோய் மனைவியோடு
மாண்டு விட்டான்

அன்பால் ஆகியவன்
அமரனாய் ஆகிவிட்டான்

அனாதையான எனக்கு
அப்பனும் ஆனான் உயிர்நண்பன்
தவிக்கின்ற அவன் பிள்ளைகட்கு
தகப்பனாய் ஆகின்றேன் நான்

நண்பன் காட்டிய பாதையில்
நம்பிக்கையுடன் பயணிக்கிறேன்
வெளிச்சமாய் வருவான் என்று

உயிர்நட்பு
மரணம் கடந்தும்
மரணிக்காமல் வாழும்
நிஜங்கள் கடந்தும்
நினைவுகளாய் நீளும்

நண்பர்கள் மறைந்தாலும்
நட்பு மறைவதில்லை…..
நட்பு மறைவதே இல்லை……   

           -- இரா. சைலஜா சக்தி


Thursday, 4 August 2016

சாதிகள் உள்ளதடி பாப்பா (கவிதை)

சாதிகள் உள்ளதடி பாப்பா


சாதியை நம்பி
நடைபெறும் தேர்தல்கள்

சாதியை நம்பி
நிற்கும் வேட்பாளா்கள்

சாதியை நம்பி
ஓட்டுப்போடும் ஜனங்கள்

சாதியை நம்பி
அரசியலுக்கு வரும் நடிகன்

சாதியை நம்பி
அரசியல் பண்ணும் கட்சிகள்

சாதியை நம்பி
சண்டையிடும் சாதிக்கட்சிகள்

சாதியை நம்பி
நடைபெறும் மாநாடுகள்

சாதியை நம்பி
எழுப்பும் கோஷங்கள்

சாதியை நம்பி
நிகழும் படுகொலைகள்

சாதியை மனிதன் நம்பும்வரை
சாதி மனிதனை நம்பும்வரை
சாதீயம் சாகாவரம் பெறும்
சாதிகள் சாபங்களாய் தொடரும்…..

            -- இரா. சைலஜா சக்தி

Wednesday, 3 August 2016

பூமித்தாய் (கவிதை)

பூமித்தாய்







நிலம் -
மனிதன் உனக்கு வைத்த பெயா்

உன் மடியில்
ரோஜாவுக்கும் இடமுண்டு
கள்ளிக்கும் இடமுண்டு
மான்குட்டியும் துயில்கொள்ளும்
சிங்கக்குட்டியும் துயில்கொள்ளும்

உன் மடியில்
திருடனும் வாழ்வான்
தியாகியும் வாழ்வான்
மருந்துகளும் உண்டு
மரணங்களும் உண்டு

உன் மடியில்
காதலும் காவியமாகும்
கண்ணீரும் காவியமாகும்
கலைகளும் அரங்கேறும்
கொலைகளும் அரங்கேறும்

உன் மடியில்
வெற்றியும் முத்தமிடும்
தோல்வியும் முத்தமிடும்
யாகங்களும் நிகழும்
யுத்தங்களும் நிகழும்

உன் மடியில்
அரசியலும் வலம்வரும்
ஆன்மீகமும் வலம்வரும்
குடிசைகளும் உருவாகும்
கோபுரங்களும் உருவாகும்

உன் மடியில்
அணுமின்சாரமும் ஆற்றலாகும்
அணுகுண்டும் ஆற்றலாகும்
பூக்களும் உண்டு
பூகம்பங்களும் உண்டு

உன் மீது
அன்புகொண்டால் பூக்கள் பரிசு
அன்புகொன்றால் பூகம்பங்கள் பரிசு

உன்னை
புரிந்துகொண்டால் நீ விளைநிலம்
மறந்துபோனால் நீ தரிசுநிலம்

                  -- இரா. சைலஜா சக்தி

Friday, 24 June 2016

போர் ஆயுதம்..(கதை)

24.06.2016                                                            இரா.சைலஜா சக்தி                       

                          போர் ஆயுதம்


ஒரு ஜென் துறவி தன் இளமைக்காலங்களில் மிகச் சிறந்த போர் வீரராக இருந்தார். படைகளுக்கு தலைமையேற்று பல போர்களில் வெற்றி கண்டார். பின் துறவு மேற்கொண்டார். அவரது இரு சீடர்கள், அவரின் கடந்த காலம் பற்றி விசாரித்தனர்.துறவியோ அமைதியும்,புத்திக்கூர்மையும் தான் உண்மையான ஆயுதங்கள் என உணர்ந்தேன். அதனால்தான் மற்ற ஆயுதங்களை கீழே போட்டு விட்டேன்என்று கூறி சென்று விட்டார்
சீடர்களால் நம்ப முடியவில்லை. மறுநாள் குருவை சோதித்துப் பார்ப்பதென முடிவு செய்தனர். குரு தியானத்தில் இருந்தார். சீடர்கள் இருவரும் கையில் ஆயுதங்களோடு அவரை தாக்க காத்திருந்தனர். குரு ஆழமான தியானத்திற்குள் சென்றதை அறிந்ததும் அவரை நோக்கிப் பாய்ந்தனர். குருவோ கண்களை திறக்காமல் கொஞ்சம் முன்னாடி நகர்ந்து கொண்டார். அவரைத் தாக்க பாய்ந்த சீடர்களோ தரையில் குப்புற விழுந்தனர். சீடர்கள் எழுந்து குருவைப் பார்த்தனர். அவர் அமைதியுடன் தியானத்தை தொடர்ந்திருந்தார்.
இங்கு குரு புத்திகூர்மையுடன் நகர்ந்ததால் தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். அவர் கண்களை திறக்கவோ, எதிர்தாக்குதல் புரியவோ இல்லை. அடிப்படையில் போர்வீரரான அவரால் சுலபமாக சண்டையிட்டு ஜெயித்திருக்க முடியும். சீடர்களின் எதிர்பார்ப்பும் அதுதான். ஆனால் குருவின் இலக்கோ தியானம் மட்டுமே. எனவே தனக்கு வந்த சின்ன இடையூறை அவரின் புத்திசாலித்தனத்தால் சமாளித்துவிட்டு மீண்டும் தியானத்தை தொடர்ந்தார். வீணாக சண்டையிட விரும்பவில்லை.
இது நம்மால் முடியுமா? புத்திகூர்மை நம் அனைவரிடமும் உள்ளது. ஆனால் புத்தி வேலை செய்வதற்குள், உணர்ச்சிகள் நம்மை ஜெயித்து விடும். அந்த குரு இடத்தில் நாம் இருந்தால் முதலில் சீடர்களை துவம்சம் செய்து விட்டுதான் மறுவேலை. விழுந்த அறையில் அவர்கள் ஆசிரமத்தை விட்டே ஓடி இருப்பார்கள். தேவையில்லாமல் தொந்தரவு செய்யும்போது உணர்ச்சிவசப்படுவதுதானே மனித இயல்பு?
இலக்கை நோக்கி பயணிப்பவன் இடையூறுகளை கண்டு அஞ்சமாட்டான். இடையூறுகளுக்கு செலவிடும் ஆற்றல் வெற்றிப்பாதையின் வேகத்தைக் குறைக்கும். இதை அறிந்ததால்தான் அந்த குரு அலட்டிக் கொள்ளவில்லை. காந்தியடிகள் அகிம்சையால் ஆங்கிலேயர்களை விரட்டியதும் இப்படித்தான். உடல்நோய் என்ற மாபெரும் இடையூறு தொடர்ந்த போதும் புகழ்பெற்ற பாஸ்கல் விதியை உருவாக்கினார் கணிதவியல் வல்லுநரான பாஸ்கல். வறுமை துரத்தியபோதும் கவிதை பாடிக் குவித்தார் பாரதி. இடையூறுகள் வாழ்வில் எந்த வடிவில் வந்தாலும் அதை தங்கள் அறிவால் உதறித்தள்ளுபவர்களே இறுதியில்  வெற்றி பெறுகிறார்கள்.
ஒரு கல்லூரியின் பெண்கள் விடுதிக்குள் மாணவர்கள் சென்று வருவது அக்கல்லூரி முதல்வரின் கவனத்துக்கு வந்தது. அவர் மாணவர்களை அழைத்தார். விடுதிக்குள் ஒருமுறை நுழைந்தால் அபராதம் ரூ500,இரண்டாம் முறை எனில் ரூ1000,மூன்றாம் முறை எனில் ரூ1500 என கட்டணம் வசூலிக்கப்படும் என்றார். அதைக்கேட்ட ஒரு மாணவன் எழுந்து “அப்போ சீசன் டிக்கெட் எவ்வளவு சார்?” என்றான். என்னே நமது மாணவனின் புத்திகூர்மை!!!.  


Thursday, 23 June 2016

மாலைப்பொழுதின் மயக்கத்திலே(கவிதை)

       



23.06.2016                                                    இரா.சைலஜா சக்தி

                  மாலைப்பொழுதின் மயக்கத்திலே


மயங்கும் மாலைப்பொழுது
பச்சை புல்வெளி மெத்தைகள்
அணிவகுப்பு நடத்தும் மரங்கள்
புன்னகை பூக்கும் மலர்கள்
கிளை விரித்த ஆலமரம்
மவுனத்தில் கல்யானைகள்
உச்சியில் ஏழுகலசம் தாங்கிய கோபுரம்
உள்ளே நுழைந்து பாரக்கிறேன்
காதலன் தோளில் தலைசாய்த்த காதலி
களைப்பில் உறங்கும் பிச்சைக்கார அன்பர்கள்
புதுமனைவியின் முந்தானைக்குள்
ஒளிந்துகொள்ள துடிக்கும் புதுமாப்பிள்ளை
நெட்டை காதலனின் உயரத்தை
தூணில்செதுக்கும் குட்டை காதலி
செல்ஃபி எடுக்கும் செல்லுலாய்ட் அழகிகள்
லேப்டாப் இளைஞர்களின் வட்டமேசைமாநாடு
அரட்டையடிக்கும் மாணவகண்மணிகள்
ஓய்வெடுக்கும் அயல்தேச அம்மணி
புளியோதரையை பகுத்துண்ணும் குடும்பம்
மாமியார்கொடுமை பேசும் மல்லிகைப்பூ பெண்கள்
ஆங்காங்கே கையேந்தும் டஸ்ட்பின்கள்
அனைவரையும் பார்த்து விட்டேன்
ஒருவரைத் தவிர
ஆமாம்
அவருக்குத்தான் வாசலில் நின்று
வழியனுப்பும் வேலை தரப்பட்டிருக்கிறதே??
கடமை ஆற்றுகிறார் தேசபிதா
இடம்
காந்தி மண்டபம், சென்னை
.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}