Sunday, 14 February 2016

தலைமுறைகள் தாண்டிய பசுமைக் காதல் (கதை)

தலைமுறைகள் தாண்டிய பசுமைக் காதல்


தலைமுறைகள் தாண்டிய பசுமைக் காதல்
அரவிந்திற்கு எல்லாமே ஆச்சரியமாயிருந்தது. பூத்துக் குலுங்கிய முல்லைப் பந்தலுக்கு அடியில் குறுக்கும் நெடுக்குமாய் ஓடினான். கொத்து ரோஸைப் பார்த்து குதித்தான்மிளகாய்ச் செடிகளில், காய்த்துத் தொங்கிய குட்டி மிளகாய்களை ஏதோ பைசா நகர சாய்ந்த கோபுரத்தைச் சுற்றி வந்து பார்ப்பது போல் வளைந்தும் குனிந்தும் பார்த்துக் கொண்டிருந்தான்.
என்ன கருப்பையா தென்னைக்கு உரம் வச்சு முடிச்சிட்டியா?” என்று கேட்டுக் கொண்டே நார்க்கட்டிலில் அமர்ந்தார் மாதவன் வாத்தியார்தாத்தாவைக் கண்டதும் ஓடி வந்தான் அரவிந்த்மடியில் அமர்ந்து கொண்ட பேரனை பாசத்துடன் கொஞ்சினார்.
உரமெல்லாம் நேத்தே வச்சிட்டேங்கய்யாநெற்றி வேர்வையை துண்டால் துடைத்துக் கொண்டே சொன்ன கருப்பையா, “அய்யா, பேரப்பிள்ளை உங்க கிட்ட நல்லா ஒட்டிக்குதே!” என்று ஆச்சரியமாய் கேட்டார்.
வாத்தியாருக்கோ பெருமை பிடிபடவில்லை. பேரனை கட்டித் தழுவிக் கொண்டே சொன்னார். “இருக்காதா பின்னே? எனக்கும் ஒரே பையன்என் பையனுக்கும் இவன் ஒரே மகன்ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு கடவுள் குடுத்த வாரிசு இல்லையா? என்னமோ இரத்த பாசம்தான்என்னையே சுத்தி சுத்தி வர்றான்”.
தாத்தா சொல்லி முடிக்கவும், அரவிந்த் அவர் நாடியைப் பிடித்துத் தடவினான்.  ”தாத்தா அந்த பூ எல்லாமே சூப்பரா இருக்கு!” என்று பிஞ்சு விரல்களை விரித்துக் காட்டி சொன்னான்.
தாத்தாவின் மனம் குளிர்ந்தது. மடியிலிருந்து இறங்கி மீண்டும் முல்லைப் பந்தலுக்கு அடியில் ஓடினான். அவன் ஓடுவதையும், ஆடுவதையும் கண்ட மாதவன் வாத்தியாருக்கும், கருப்பையாவுக்கும் வேடிக்கையாக இருந்தது.
கொய்யாப் பழத்தை அடம்பிடித்து பறிக்கச் சொல்லி சாப்பிட்டான்கனகாம்பரப்பூக்களின் மீது கை பரப்பி, முகம் வைத்து கொஞ்சினான்.
ஹை! தாத்தா, இந்த பூக்கள் மேல கன்னத்தை வச்சா சாஃப்டா பஞ்சு மாதிரி இருக்கு!” என்று சொல்லிக் கொண்டே வந்தவன் ஆடிக்கொண்டிருந்த மரப்பலகை ஊஞ்சலைப் பார்த்துவிட்டான்அவ்வளவுதான் பாய்ந்தான் ஊஞ்சலை நோக்கி. மிகப்பெரிய மாமரத்தில் வலுவான கயிற்றில் மரப்பலகை ஒன்று கட்டி விடப்பட்டிருந்தது
அரவிந்த் ஊஞ்சலில் ஏற முயற்சித்தான்எட்டவில்லைபரிதாபமாய் தாத்தாவைப் பார்த்தான்சிரித்துக் கொண்டே இருவரும் அவனைத் தூக்கி பலகையில் உட்கார வைத்தனர்மெதுவாய் ஊஞ்சலை ஆட்டினர்தோட்டத்தின் இயற்கைக் காற்றும், ஊஞ்சலின் அசைவும் அரவிந்தை கிறங்கச் செய்தனஅப்படியே தூங்கிவிட்டான்மெள்ள ஊஞ்சலை நிறுத்தினார் கருப்பையாவாத்தியார் பேரனை அலுங்காமல் குலுங்காமல் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தார்.
கொய்யாப்பழம் சூப்பர் தாத்தா. ஹையா ஹையாஎன்று தூக்கத்திலேயே கத்திய அரவிந்தைப் பார்த்து டென்ஷனின் உச்சிக்கே போனாள் ரமாபியூட்டி பார்லருக்கும், பீட்ஸா ஹட்டிற்கும் ரெகுலர் அட்டென்டன்ஸ் போடுபவள் தான் ரமா, மாதவன் வத்தியாரின் மருமகள். இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் அரவிந்தின் அம்மா.
எத்தனை ஸ்டார் ஹோட்டல்களுக்கு கூட்டிட்டு போயிருப்போம்சிங்கப்பூர், மலேசியான்னு எவ்வளவு வோர்ல்ட் டூர் போயிருப்போம்? பார்க், பீச்னு இவன் பார்க்காத இடம் இல்லைஅப்போல்லாம் வராத எக்ஸைட்மென்ட் இந்த பட்டிக்காட்டில, அழுக்கு மண்ணுல உருண்டு புரண்ட உடனே உங்க மகனுக்கு வந்துடுச்சா?” என்று சீறினாள் கணவனிடம்.
சின்னப் பையன் தானே…. விடு…” என்று தூக்கக் கலக்கத்தில் சொல்லிவிட்டு திரும்பிப்படுத்தான், ரகு.
எப்படி விட முடியும்? எப்பவுமே அவன் இப்படித்தான். ஒரு ஹைஜீனிக்கான ப்ளேஸ், டீஸன்ட் அட்மாஸ்ஃபியர் எதுவுமே அவனுக்கு பிடிக்காது. அங்கே போனா உம்முன்னு உட்கார்ந்திருப்பான்ஹைசொஸைட்டி குழந்தைகளோட மிங்கிளாகவே மாட்டான்இப்போ ரெண்டு நாளா தலைகால் புரியலை. ஆடுறதும்ஓடுறதும்…. எனக்கு எரிச்சலா வருது”.
ப்ச். இப்ப என்ன வேணும் உனக்கு?” தூங்க விடாமல் நச்சரிக்கிற மனைவியிடம் கேட்டான் அரவிந்தின் அப்பா.
சீக்கிரமா சென்னைக்கு போகணும்”.
நாம வந்ததே ஒன் வீக் லீவில்தான்டூ டேய்ஸ் முடிஞ்சிடுச்சுஇன்னும் நாலஞ்சு நாள் தானேவெயிட் பண்ணுஅப்பாட்ட ஒரு வாரம் இருப்போம்னு சொல்லியிருக்கேன்திடீர்னு கௌம்பினா நல்லாயிருக்காதுமோர் ஓவர் எனக்கும் கொஞ்சம் ரெஸ்ட் தேவைப்படுதுஎன்று சொன்னதுதான் தாமதம்,
அதுதானே பார்த்தேன். உங்களுக்கே இங்க இருக்கணும்னு ஆசைஅப்புறம் உங்க பையன் எப்படி இருப்பான்? எல்லாம் பட்டிக்காட்டு ஜீன் தானே வேலை செய்யுது?”
ரகு படுக்கையிலிருந்து வேகமாய் எழுந்தான்.  “இப்போ எதுக்கு தேவையில்லாம ஜீன் அது இதுன்றே?”
ஆமா, எங்கப்பா சென்னையிலேயே லீடிங் லாயர். அவரை பார்க்கிறதுக்கே அப்பாயின்ட்மெண்ட் இருந்தாத்தான் முடியும்எங்க வீட்டில் இல்லாத லானா? அங்கே ஊஞ்சல் இல்லையா? உங்க பையன் ரசனை அழுக்கு மண்ணில, கதர் வேட்டி கட்டி, நார்க்கட்டில்ல தூங்குற உங்கப்பாவோடது மாதிரி இருக்கே?”
எங்கப்பாவும் ரிடையர்டு டீச்சர்மைன்ட் இட்எங்களுக்கும் ஏகப்பட்ட லேண்ட்ஸ் இருக்கு. உங்க அசெர்ட்ஸ், லைஃப் ஸ்டைல் எல்லாமே மார்டனா இருக்குஎங்களோடது டிரெடிஷனலா இருக்கும் அவ்வளவுதான். அப்படி மட்டமா இருந்தா தி கிரேட் லாயரான உங்கப்பா என்னைத் தேடி வந்து பொண்ணு கொடுத்திருக்கமாட்டார்என்று பொரிந்து தள்ளினான் ரகு.
ரமா பிரச்சனை முற்றுவதை உணர்ந்து மௌனமானாள். இருந்தும் ரகுவின் ஆவேசம் அடங்கவில்லை.
அதுமட்டுமில்லை மேடம்இவ்வளவு சின்ன வயசில சொந்தமா சாஃப்ட்வேர் கம்பெனியை சக்ஸஸ்புல்லா ரன் பண்ணுற மாப்பிள்ளை வேணும்னு வந்து நின்னது உங்கப்பாதான்ஞாபகம் வச்சுக்கோஸ்டேட்டஸ்க்கு குறைவில்லைன்றதை இங்க வந்து எங்க நிலபுலன்களைப் பார்த்து செக் பண்ணிட்டுதான் பொண்ணு கொடுத்தார். ஏன்னா, அவர் லாயர் இல்லையா? அதான்.”
அர்த்த ராத்திரியில் ரகு இவ்வளவு கோபப்படுவான் என ரமாவும் நினைக்கவில்லைஅவளுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான்ஊருக்கு போகிற வரைக்கும் வாய் திறக்கக்கூடாது என்று முடிவெடுத்தாள்.
இது எதுவும் தெரியாமல், அரவிந்த் பட்டப்பகலில் போட்ட ஆட்டத்தால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
பொழுது பொலபொலவென விடிய ஆரம்பித்தது. ஜன்னல் வழியே சூரியன் அரவிந்த் கன்னத்தை வருடினான். வெயில் பட்டதும் குழந்தை விழித்துக் கொண்டதுபரபரவென்று எழுந்தான்ஜன்னல் வழியே வெளியே பார்த்தான்கண்ணுக்கெட்டியவரை பசுமை அவனை ஈர்த்தது. விறு விறுவென மாடியிலிருந்து இறங்கி வந்தான்சுற்றுமுற்றும் அவன் கண்கள் தாத்தாவைத் தேடின.
மாதவன் வாத்தியார் காலையிலேயே வயலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்அரவிந்த் தாத்தாவைப் பிடித்துக் கொண்டான்வயலுக்கு வருவேன் என்று முரண்டு பண்ணினான்ரமா எரிச்சலை அடக்கிக் கொண்டாள்ரகு எதையுமே கண்டுகொள்ளாதவன் போல் லேப்டாப்பில் மூழ்கியிருந்தான்வாத்தியாருக்கும் உள்ளுக்குள் கொஞ்சம் பயம்தான். வேறு வழியில்லை, பேரனின் ஆசையை நிறைவேற்ற வேண்டுமே. அழைத்துச் சென்றார்.
வரப்புகள் அரவிந்திற்கு விந்தையாகத் தெரிந்தன. அவைகளின் மீது ஏறி நடப்பது அவனுக்கு சாதனையாக இருந்ததுகால் வலிக்குமளவு வரப்புகளில் அங்குமிங்கும் டிரெயின் ஓட்டிக்கொண்டிருந்தான்வாத்தியார் பேரனின் குதூகலத்தை ரசித்துக் கொண்டிருந்தார்.
அப்போது கருப்பையா வைரவனை அழைத்து வந்தார்அவன் உளிக்கலப்பையை எடுத்து வந்திருந்தான். அரவிந்த் அது ஏதோ கற்கால மனிதன் பயன்படுத்திய ஆயுதம் என்பது போல் கண்களை விரித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தான்
என்ன வைரவா? எல்லாம் தயாரா வச்சிருக்கிறாயா?” என்று வாத்தியார் கேட்க, அவனும்எல்லாம் இருக்குங்கஎன்று சொல்லிவிட்டு வேலையை ஆரம்பித்தான்.
கலப்பையை வைத்து ஏறக்குறைய ஐம்பது சென்டிமீட்டர் ஆழத்திற்கு நிலம் உழப்பட்டதுதொழு உரமும், வைக்கோலும் இட்டு நிலத்தை உழுதான்மூவரும் தூரத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.


அரவிந்திற்கு ஒன்றுமே விளங்கவில்லை. “அந்த அங்கிள் என்ன பண்ணுறாங்க தாத்தா?” என்று தாத்தாவை துளைக்க ஆரம்பித்தான்.
அது ஒண்ணுமில்லப்பாஉனக்குப் புரியுற மாதிரி சொல்லனும்னா இந்த மண்ணு ரொம்ப ஹார்டாயிருச்சு. அதைக் கொஞ்சம் சாஃப்டாக ஆக்குறார். அவ்வளவுதான்
அப்படியா? ஏன் சாஃப்டாக்குறீங்க?”
அப்போதான் அதுல சில செடிகள் நட்டு வைக்க முடியும், நல்லாவும் வளரும்.”
ஓஹோ. என்ன செடி வைக்கப் போறீங்க தாத்தா?”
கருப்பையாவும், வாத்தியாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு லேசாக சிரித்துக் கொண்டனர். பின் கருப்பையாவே சொன்னார் நிலக்கடலையும், சூரியகாந்தியும் தான் தம்பி.
அரவிந்த் விழித்தான்மாதவன் வாத்தியாரோ கூடுதலாகவே சிரித்தார்.
அவனுக்கு புரியுற மாதிரி சொல்லணும் கருப்பையா. கிரவுன்ட் நட்டும், ஸன்ஃப்ளவரும் தான் இங்கே பயிர் பண்ணப் போறோம் அரவிந்த்”.
ஹையா! ஜாலி! ஸன்ஃப்ளவர் எனக்குத் தெரியும் தாத்தா. ஸ்கூல்ல படிச்சிருக்கேன். எல்லோ கலர் தானே. டிராவல் பண்ணும்போது நிறையப் பார்த்திருக்கிறேன். அழகாயிருக்கும்


கைதட்டி குதித்தான். அந்த பிஞ்சின் ஆர்வத்தைப் பார்த்து ரசிக்கவா அல்லது கவலைப்படவா என்று அவன் தாத்தா குழம்பிக் கொண்டிருந்தார். யோசித்துக் கொண்டிருக்கும்போதே வீல் என்று அலறினான் அரவிந்த்.
தாத்தா! பூச்சி! பூச்சிஎன்று ஓடிவந்து அவரைக் கட்டிக் கொண்டான். வாத்தியாருக்கு ஒன்றும் புரியவில்லை. கருப்பையாவோ கம்பை எடுக்க ஓடினார். அரவிந்தை ஒருவாறு தேற்றி அவன் கைகாட்டிய இடத்திற்கு சென்று பார்த்தார்.
அதற்குள் கருப்பையாவும் ஓடிவந்தார். இருவரும் கூர்ந்து பார்த்தனர். அந்த இடத்தில் ஒரு சிறிய மண்புழு நெளிந்து கொண்டிருந்தது.
கருப்பையா அரவிந்திடம் மண்புழுவைக் காட்டி கேட்டார்
இதையா பார்த்து பயந்தீங்க தம்பி?”
ஆமாஎன்று அழுதான்.
பெரியவர்கள் இருவருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. உரக்க சிரிக்கத் தொடங்கினர். அழுகையை நிறுத்திவிட்டு அரவிந்த் கேட்டான்.
ஏன் சிரிக்கிறீங்க?“
இம்முறை கருப்பையாவே சொன்னார்  “தம்பிஅது மண்புழுஒண்ணுமே செய்யாது
ஆனாலும் பயமாயிருக்கு. அது நெளியுறதப் பார்த்தா எனக்கு பிடிக்கலை. கொன்னுடுங்க தாத்தா அதை
கூடாது அரவிந்த். அது மண்ணுக்கு நிறைய ஹெல்ப் பண்ணும். அது மண்ணோட ப்ஃரெண்ட்என்று கண்டிப்பாய் தாத்தா கூறியதைக் கேட்டு ஒருவாறு சமாதானமடைந்தான்.
பிறகு கரும்புத் தோட்டத்திற்குச் சென்றார்கள். கரும்பைக் கடித்து துப்பினான் அரவிந்த். “செம டேஸ்ட்டா இருக்கு தாத்தாஎன்று சொல்லியே கருப்பையா வெட்டிக் கொடுத்ததை ஒன்று விடாமல் சாப்பிட்டு முடித்தான். கிளம்புவதற்கு முன் அவன் கையால் ஒரு மஞ்சள் ரோஜாச் செடியை நட்டு வைக்க விரும்பினார் மாதவன் வாத்தியார்.
கேட்டதும் அரவிந்த் குஷியாகிவிட்டான். கருப்பையா பூத்துக் குலுங்கிய ரோஜாச் செடிகளுக்கு நடுவில் குழியை வெட்டினார். வாத்தியார் அரவிந்த் கையால் ரோஜாச் செடியை உள்ளே வைக்கச் சொன்னார்.  அவனும் அவ்வாறே செய்து ஆசையாய் தண்ணீர் ஊற்றினான். வேலை முடிந்தது. வீட்டிற்கு கிளம்பிவிட்டார்கள். வரும்போது அரவிந்த் கேட்டான்.
தாத்தா. நான் வச்ச ரோஜா செடிக்கு என்ன பெயர் வைக்கலாம்?”
ம்ம்அரவிந்த் ரோஜா செடின்னு வைப்போமா?” என்று தாத்தா கேட்டதும் அவனுக்கு பயங்கர சந்தோஷம்உற்சாகத்தோடு வீட்டிற்கு வந்தான்.
காரில் எல்லா லக்கேஜும் ஏற்றியாயிற்று. அரவிந்த் முகம் வாடியிருந்தது. மனசே இல்லாமல் கிளம்பியிருந்தான். ஆனால் ஒரே ஒரு சந்தோஷம் அவனுக்குள் இருந்தது. அவன் அழுது அடம்பிடித்ததால் மாதவன் வாத்தியாரும் சென்னை வர சம்மதித்திருந்தார்.
தாத்தா உடன் வருவதால் அவனுக்கு ஊரைவிட்டு போகிற வருத்தம் கொஞ்சம் குறைந்திருந்தது.
ரகு காரை ஓட்டிக் கொண்டே கேட்டான்.
அரவிந்த். ஆர் யூ ஹேப்பி?”
வெரிமச்  ஹேப்பிப்பா
தாத்தாவை உனக்கு அவ்வளவு பிடிக்குமா?”
ரகுவின் கேள்வி ரமா வயிற்றில் ஆஸிட் ஊற்றியது.
ரொம்ப பிடிக்கும்பாஅழுத்தி சொன்னான்
ரகுவின் மனம் பூரித்ததை அவன் முகம் காட்டிக் கொடுத்தது.
சென்னை வீட்டின் நவீனம் மாதவன் வாத்தியாருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அரவிந்த் பொம்மைபோல் இயங்குவதை அவரால் பார்க்க முடிந்தது. எந்திரங்களோடு, எந்திரங்களாய் ரகுவும், ரமாவும் ஓடிக்கொண்டிருந்தனர். அரவிந்திற்கு எல்லாமே கொடுக்கப்பட்டன. ரிச் புட், காஸ்ட்லி டாய்ஸ் எல்லாமே. அரவிந்த் பசிக்கு உண்கிறான். பொம்மைகளோடு பொழுதைப் போக்குகிறான் என்பதைப் புரிந்து கொண்டார்.
அவனோடு அமர்ந்து பேசவோ, அவன் ஆசைகளைக் கேட்கவோ யாருக்கும் நேரம் இல்லை. அரவிந்த் ஏன் வயலிலும், வரப்பிலும் ஓடினான் என்று அவரால் யூகிக்க முடிந்தது. இருந்தும் எதுவும் செய்ய இயலாதவராய் மனதை அடக்கிக் கொண்டார்.
அன்று இரவு குடிக்க தண்ணீர் எடுப்பதற்காக வந்த வாத்தியாரின் காதில் விழுந்தது பெட்ரூமிலிருந்து வந்த மருமகளின் குரல். ரமாவின் கேள்வி கணவனிடம்என்னங்க, உங்கப்பா வந்து நாலு நாள் ஆச்சு. அவருடைய ப்ளான் என்ன?”
லேப்டாப்பிலிருந்து வெளியே வந்தான் ரகு.
இப்ப என்ன? அவர் ஊருக்குப் போகணும் அவ்வளவுதானே?”
இல்ல. எனக்கு வேற ஒரு ஐடியா இருக்கு”.
என்ன ஐடியா?“
ஊருல இருக்குற உங்க லேண்ட்ஸ் எல்லாத்தையும் வித்துட்டோம்னா பெரிய அமௌண்ட் வரும். ஃப்யூச்சர்ல நம்மளோ யூ.எஸ் ல செட்டிலாகிற ஐடியால இருக்கிறோம். எப்படியும் நம்மளால லேண்ட்ஸ பார்த்துக்க முடியாது. அதுதான் கேட்கிறேன்.”
ரகுவின் முகம் இறுகியது.
அப்போ அப்பா என்ன செய்வார்?”.
அங்க அவர் தனியாத்தானே இருக்கிறார். இங்கே நம்ம ஹை சொஸைட்டி பீப்புள் நடத்துறோமே ஓல்ட் ஏஜ் பீப்புளுக்கான மார்டன் ஹோம்ஸ். அதுல எல்லா வசதியும் இருக்கு. உள்ளேயே லைப்ரரி, தியேட்டர், கோயில் எல்லாமே இருக்குஅதுபோக அவர் ஏஜ் பீப்புள்ஸை டெய்லி மீட் பண்ணலாம். பேசலாம். அவருக்கும் லோன்லினெஸ் இருக்காது. அவங்க எவ்வளவு பணம் கேட்டாலும் நாம கொடுத்து அவரை அங்க சந்தோஷமா வச்சுக்கலாம்
ரகு மௌனமாயிருந்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ரமா. இப்போது ரகு பேசினான்.
நீ சொல்றது கரெக்ட். இதனால நமக்கு பல்க் அமௌண்ட் வரும். அதைவிட முக்கியம் நாம கிராமத்துக்கு இனி போக வேண்டாம். அப்பாவை அந்த மாடர்ன் ஹோம்ல பணத்தைக் கட்டி தங்க வச்சோம்னா அரவிந்தையும் அப்பாவையும் பிரிச்சுறலாம். நாமளும் யு.எஸ். போயிடலாம். வெல் செட்
ரமாவிடம் பதிலில்லை.
அவனே தொடர்ந்தான்.
இந்த கம்பெனி, வேலை, டென்ஷன், லேப்டாப், பீட்ஸா வாழ்கை, எல்லாவற்றையும் பார்க்கும்போது என் அம்மா அப்பா கிராமத்தில் வாழ்ந்த வாழ்க்கை சொர்க்கமாத் தோணும். குறைந்தபட்சம் அந்த சொர்க்கம் என் அப்பாவுக்காவது நிரந்தரமாக இருக்கட்டும். இனி நீயோ, அரவிந்தோ ஊருக்கு வர வேண்டாம். நான் மட்டும் போயிட்டு வர்றேன். அப்பா காலம் வரைக்கும் அந்த லேண்ட்ஸ் அப்படியேதான் இருக்கும். விவரம் தெரிஞ்ச வயசுல நான் இழந்த சந்தோஷத்தை, விவரம் தெரியும் முன்னாடியே என் பையன் இழக்கிறான் அவ்வளவுதான். அப்பாவை நாளைக்கே ஊருக்குப் போகச் சொல்லிடுறேன்
பொழுது விடிந்தது. ரகு எழுந்து வந்ததும் அவன் கண்ணில்பட்டது மாதவன் வாத்தியாரின் கடிதம்.
வருத்தப்படாதப்பா. அப்பா காலையிலேயே வாட்ச்மேன் கிட்ட சொல்லிட்டு கிளம்புகிறேன். என்னைப் போகச் சொல்லுறதுக்கு என் பிள்ளை மனசு எந்த அளவுக்கு துடிக்கும்னு எனக்குத் தெரியும். உனக்கு சிரமம் வைக்க வேண்டாம்னுதான் கிளம்பிட்டேன். அப்பாவுக்கு அந்த சொர்க்கம் நிரந்தரமா இருக்கணும்னு சொன்னியே. இந்த வார்த்தைகள் எனக்குப் போதும்பா. என் ஆயுசுக்கும் நிம்மதியா இருப்பேன். உன்னை நினைச்சு பெருமைப்படுறேன். நீ என்னென்னைக்கும் நல்லா இருக்கணும். என் ஆசீர்வாதங்கள் உன் கூடவே வரும். பத்திரமா வீட்டிற்குப் போய் சேர்ந்ததும் உனக்கு ஃபோன் பண்ணுறேன். அரவிந்தை சமாதானப்படுத்துப்பா
கண்களில் வழிகிற நீரை ரகு துடைக்க விரும்பவில்லை.
மாதங்கள் கடந்தன. சூரியகாந்திப்பூக்கள் வாத்தியாரைப் பார்த்து சிரித்தன. அவரால் ரசிக்க முடியவில்லை. ஒவ்வொரு பூவும் அரவிந்தை நினைவுபடுத்தியது.
அருகில் காலடி ஓசை கேட்டு திரும்பினார். ரகு புன்னகையுடன் அங்கு நின்றிருந்தான். மகனைப் பார்த்ததும் மாதவன் வாத்தியாரின் கண்கள் கலங்கின. அப்பாவின் தோள்களை அன்புடன் பற்றி அவரை அமர வைத்தான். அவருக்கோ எதுவும் பேசத் தோன்றவில்லை.
ரகு சிரித்துக் கொண்டே கடிதமொன்றை அவரிடம் கொடுத்தான். பிரித்துப் படித்தார். அரவிந்த் எழுதியிருந்தான்.
தாத்தா!. எனக்குத் தமிழில் எழுதத்தெரியாது. ஸோ, நான் சொல்ல சொல்ல அப்பாதான் எழுதினாங்க. ஐ லவ் யூ தாத்தா. ஐ மிஸ் யூ. ஆனால் நான் ஹாப்பியாதான் இருக்கேன். டோண்ட் ஒர்ரி. நீங்களும் ஃபைன் தானே. தாத்தா நான் இன்னும் டென் இயர்ஸ்க்குள்ள பெரியவனாயிடுவேனாம் அப்பா சொன்னாங்க. அப்புறம் நான் கிராமத்துக்கு வந்துடுவேன். அப்பாகிட்ட பிராமிஸ் வாங்கிட்டேன். ஸன்ஃப்ளவர் பூத்திடுச்சா? ஃபோட்டோஸ்லயாவது அதைப் பார்க்கணும் தாத்தா. அப்புறம் கருப்பையா தாத்தா நல்லாயிருக்காங்களா? மண் புழு ஃப்ரெண்ட் இன்னும் அங்கேதான் இருக்குதா? அப்புறம் எனக்காக பத்து வருஷம் வெயிட் பண்ண சொல்லி அரவிந்த் ரோஜா செடிகிட்ட சொல்லிடுங்க.”
கடிதத்தை மூடும்போதே வாத்தியாரின் கண்ணீர் துளிகள் பூமியை முத்தமிட்டிருந்தன. அரவிந்த் நேசித்த மண்ணோடு அவை இரண்டறக் கலந்து கரைய ஆரம்பித்தன.
இங்கு மறக்கப்பட்டது முதுமையின் தலைமுறைக் காதல். மறுக்கப்பட்டது பிஞ்சு நெஞ்சின் பசுமைக் காதல்.
-- முற்றும்
-- இரா. சைலஜா சக்தி

2 comments:

  1. This Novel is very Interesting.Our Younger generations must read it atleast Once

    ReplyDelete

.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}