Friday, 24 June 2016

போர் ஆயுதம்..(கதை)

24.06.2016                                                            இரா.சைலஜா சக்தி                       

                          போர் ஆயுதம்


ஒரு ஜென் துறவி தன் இளமைக்காலங்களில் மிகச் சிறந்த போர் வீரராக இருந்தார். படைகளுக்கு தலைமையேற்று பல போர்களில் வெற்றி கண்டார். பின் துறவு மேற்கொண்டார். அவரது இரு சீடர்கள், அவரின் கடந்த காலம் பற்றி விசாரித்தனர்.துறவியோ அமைதியும்,புத்திக்கூர்மையும் தான் உண்மையான ஆயுதங்கள் என உணர்ந்தேன். அதனால்தான் மற்ற ஆயுதங்களை கீழே போட்டு விட்டேன்என்று கூறி சென்று விட்டார்
சீடர்களால் நம்ப முடியவில்லை. மறுநாள் குருவை சோதித்துப் பார்ப்பதென முடிவு செய்தனர். குரு தியானத்தில் இருந்தார். சீடர்கள் இருவரும் கையில் ஆயுதங்களோடு அவரை தாக்க காத்திருந்தனர். குரு ஆழமான தியானத்திற்குள் சென்றதை அறிந்ததும் அவரை நோக்கிப் பாய்ந்தனர். குருவோ கண்களை திறக்காமல் கொஞ்சம் முன்னாடி நகர்ந்து கொண்டார். அவரைத் தாக்க பாய்ந்த சீடர்களோ தரையில் குப்புற விழுந்தனர். சீடர்கள் எழுந்து குருவைப் பார்த்தனர். அவர் அமைதியுடன் தியானத்தை தொடர்ந்திருந்தார்.
இங்கு குரு புத்திகூர்மையுடன் நகர்ந்ததால் தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். அவர் கண்களை திறக்கவோ, எதிர்தாக்குதல் புரியவோ இல்லை. அடிப்படையில் போர்வீரரான அவரால் சுலபமாக சண்டையிட்டு ஜெயித்திருக்க முடியும். சீடர்களின் எதிர்பார்ப்பும் அதுதான். ஆனால் குருவின் இலக்கோ தியானம் மட்டுமே. எனவே தனக்கு வந்த சின்ன இடையூறை அவரின் புத்திசாலித்தனத்தால் சமாளித்துவிட்டு மீண்டும் தியானத்தை தொடர்ந்தார். வீணாக சண்டையிட விரும்பவில்லை.
இது நம்மால் முடியுமா? புத்திகூர்மை நம் அனைவரிடமும் உள்ளது. ஆனால் புத்தி வேலை செய்வதற்குள், உணர்ச்சிகள் நம்மை ஜெயித்து விடும். அந்த குரு இடத்தில் நாம் இருந்தால் முதலில் சீடர்களை துவம்சம் செய்து விட்டுதான் மறுவேலை. விழுந்த அறையில் அவர்கள் ஆசிரமத்தை விட்டே ஓடி இருப்பார்கள். தேவையில்லாமல் தொந்தரவு செய்யும்போது உணர்ச்சிவசப்படுவதுதானே மனித இயல்பு?
இலக்கை நோக்கி பயணிப்பவன் இடையூறுகளை கண்டு அஞ்சமாட்டான். இடையூறுகளுக்கு செலவிடும் ஆற்றல் வெற்றிப்பாதையின் வேகத்தைக் குறைக்கும். இதை அறிந்ததால்தான் அந்த குரு அலட்டிக் கொள்ளவில்லை. காந்தியடிகள் அகிம்சையால் ஆங்கிலேயர்களை விரட்டியதும் இப்படித்தான். உடல்நோய் என்ற மாபெரும் இடையூறு தொடர்ந்த போதும் புகழ்பெற்ற பாஸ்கல் விதியை உருவாக்கினார் கணிதவியல் வல்லுநரான பாஸ்கல். வறுமை துரத்தியபோதும் கவிதை பாடிக் குவித்தார் பாரதி. இடையூறுகள் வாழ்வில் எந்த வடிவில் வந்தாலும் அதை தங்கள் அறிவால் உதறித்தள்ளுபவர்களே இறுதியில்  வெற்றி பெறுகிறார்கள்.
ஒரு கல்லூரியின் பெண்கள் விடுதிக்குள் மாணவர்கள் சென்று வருவது அக்கல்லூரி முதல்வரின் கவனத்துக்கு வந்தது. அவர் மாணவர்களை அழைத்தார். விடுதிக்குள் ஒருமுறை நுழைந்தால் அபராதம் ரூ500,இரண்டாம் முறை எனில் ரூ1000,மூன்றாம் முறை எனில் ரூ1500 என கட்டணம் வசூலிக்கப்படும் என்றார். அதைக்கேட்ட ஒரு மாணவன் எழுந்து “அப்போ சீசன் டிக்கெட் எவ்வளவு சார்?” என்றான். என்னே நமது மாணவனின் புத்திகூர்மை!!!.  


Thursday, 23 June 2016

மாலைப்பொழுதின் மயக்கத்திலே(கவிதை)

       



23.06.2016                                                    இரா.சைலஜா சக்தி

                  மாலைப்பொழுதின் மயக்கத்திலே


மயங்கும் மாலைப்பொழுது
பச்சை புல்வெளி மெத்தைகள்
அணிவகுப்பு நடத்தும் மரங்கள்
புன்னகை பூக்கும் மலர்கள்
கிளை விரித்த ஆலமரம்
மவுனத்தில் கல்யானைகள்
உச்சியில் ஏழுகலசம் தாங்கிய கோபுரம்
உள்ளே நுழைந்து பாரக்கிறேன்
காதலன் தோளில் தலைசாய்த்த காதலி
களைப்பில் உறங்கும் பிச்சைக்கார அன்பர்கள்
புதுமனைவியின் முந்தானைக்குள்
ஒளிந்துகொள்ள துடிக்கும் புதுமாப்பிள்ளை
நெட்டை காதலனின் உயரத்தை
தூணில்செதுக்கும் குட்டை காதலி
செல்ஃபி எடுக்கும் செல்லுலாய்ட் அழகிகள்
லேப்டாப் இளைஞர்களின் வட்டமேசைமாநாடு
அரட்டையடிக்கும் மாணவகண்மணிகள்
ஓய்வெடுக்கும் அயல்தேச அம்மணி
புளியோதரையை பகுத்துண்ணும் குடும்பம்
மாமியார்கொடுமை பேசும் மல்லிகைப்பூ பெண்கள்
ஆங்காங்கே கையேந்தும் டஸ்ட்பின்கள்
அனைவரையும் பார்த்து விட்டேன்
ஒருவரைத் தவிர
ஆமாம்
அவருக்குத்தான் வாசலில் நின்று
வழியனுப்பும் வேலை தரப்பட்டிருக்கிறதே??
கடமை ஆற்றுகிறார் தேசபிதா
இடம்
காந்தி மண்டபம், சென்னை

Tuesday, 21 June 2016

சைலஜாவின் ஹைக்கூ கவிதைகள் – 2


21.06.2016                                                                                                         இரா.சைலஜா சக்தி                                                  

                              சைலஜாவின் ஹைக்கூ கவிதைகள் – 2






1.    உனை கண்டதும்
   உருகி கரைகிறேன்
   ஐஸ்கிரீம்

 2.    கண்ணாடியில் முகம்பார்த்தேன்
   லேசான அழுக்கு
   கழுவித் துடைத்தேன்
   பளிச்சென்றிருந்தது கண்ணாடி

 3.   ஆணும்
     பிரசவிக்கிறான்
     கவிஞனாகும்போது

 4.   விடலைப் பையன்கள்
     வீரம் காட்டும்
     சுயம்வரம்
     ஊர்த்திருவிழா

 5.   குண்டு குழியும்
     குறுக்கு சந்தும்
     ஹைவேக்களாகி விட்டன
     ஆட்டோக்களுக்கு

 6.   குழந்தை விழுகிறது
     அதிகமான அழுகை
     அம்மாவிடமிருந்து





Monday, 20 June 2016

ஆடுக ஊஞ்சல்(கவிதை)

20.06.2016                                                                                               இரா.சைலஜா சக்தி                                                                                                                                

                      ஆடுக ஊஞ்சல்



ஆலமரக் கிளையிலே
அம்மாவின் சேலைத்தொட்டிலிலே

காற்றின் தாலாட்டில்
நிம்மதியான நித்திரை

துயில் கலையாதே கண்ணே !!!

பஞ்சு மெத்தை இல்லை
பால்பழமோ இல்லவே இல்லை

அள்ளிச்செல்ல பள்ளிவேன் இல்லை
அடைத்துப்போட பிளேஸ்கூல் இல்லை

மூச்சுவிட ஏசி காற்று இல்லை
முதுகுச்சுமை இல்லவே இல்லை

உறங்குவாய் கண்ணே
அன்பான ஆலமரநிழலில்
அழகான சேலைஊஞ்சலில்

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே


Sunday, 19 June 2016

ஹைக்கூ கவிதைகள்

19.06.2016                                                இரா.சைலஜா சக்தி

                   ஹைக்கூ கவிதைகள்






1.   ஈமெயிலால் 
        விலாசம் இழந்தது
        தபால் துறை

2.   முத்துக்களை பிரிந்த
        சோகத்தில் மௌனமாகிவிட்டது
        வெள்ளிக்கொலுசு.

3.   அவள்
        அவனில் சமைத்தாள்
        மைக்ரோவேவ் அவன்.

4.    நாயகி தலையணையில்
        முகம் புதைத்தாள்
        மூச்சுத் திணறியது
        தலையணைக்கு.

5.   மாணவனுக்கும்
        மதிப்பெண்களுக்கும்
        நடுவே மறக்கப்படுவது
        தேர்வெழுதிய பேனா.

6.   கரடியுடன் குடியிருந்தும்
        பயம் இல்லை
        டெடிபியர்

7.   சுடிதாரில்
        தலைமறைவாகிவிட்டது
        தாவணி அழகு

8.   பனை விசிறிக்கு
        மவுசு கொடுத்திருக்கிறது
        பவர்கட்

Saturday, 18 June 2016

தருமனின் வெள்ளிக்கிண்ணம் (கதை)

நாள் – 17.06.2016                                                                                                     இரா.சைலஜா சக்தி

தருமனின் வெள்ளிக்கிண்ணம்



ஒரு முறை பாண்டவர்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது ஏழை ஒருவன் அருகில் வந்து தான் வறுமையில் வாடுவதாகக்கூறி உதவி வேண்டினான். உடனே தருமர் தனது இடது கையால் அருகில் இருந்த வெள்ளிக் கிண்ணத்தை எடுத்து அவனிடம் கொடுத்தார். அவன் சென்றதும் பீமன், “இடது கையால் தருமம் செய்தால் பலனில்லையே? சாஸ்திரம் அறிந்த தாங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?” எனக் கேட்டான்.

அதற்கு தருமர், “வலது கையைக் கழுவிவிட்டு வருவதற்குள் என் மனம் மாறிவிட்டால் என்ன செய்வேன்? வெள்ளிக் கிண்ணத்திற்குப் பதில் வேறு பொருள் கொடுக்கத் தோன்றினால் என்ன செய்வது? அதனால்தான் உடனேயே வெள்ளிக் கிண்ணத்தைக் கொடுத்துவிட்டேன். எனக்கு பலன் கிடைக்காவிடினும் அவனுக்கு நன்மை கிடைத்தால் போதும்என்று கூறினார்
.
இந்த மனம் இன்று நம்மில் எத்தனை பேருக்கு வரும்? கோவில் பூசாரி தட்டில் நூறு ரூபாய் வைத்துவிட்டு சாமி கழுத்தில் உள்ள மாலையை அவர் தருவாரா? மாட்டாரா? என்ற  குழப்பத்துடனேயே காத்துக் கிடப்போம். கூட்டம் குறைந்தபின் பூசாரி நம்மை ஸ்பெஷலாகக் கவனிப்பார். மாலை மரியாதைகள் கிடைத்ததும்தான் நிம்மதிப் பெருமூச்சே வரும். அப்பாடா கொடுத்த நூறு ரூபாய்க்கு பலனிருக்கிறது என்று சொல்லிப் பூரிப்போம். நமக்கெல்லாம் தருமர் வெள்ளிக் கிண்ணம் கொடுத்தது வேடிக்கையாகத் தெரிவதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது?

தானம் கொடுப்பதில் கூட சில நியதிகள் உண்டு. ஒரு தாம்பாளத்தில் வைத்து கொடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். அப்போதுதான் கொடுப்பவர் கை கீழேயும், வாங்குபவர் கை மேலேயும் இருக்குமாம். இதனால் நான் கொடுத்தேன் என்ற கர்வம் கொடுத்தவருக்கும், பெற்றுவிட்டோமே என்ற தாழ்வு மனப்பான்மை வாங்கியவருக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான்.
வருமானத்தில் ஒரு பகுதியை தர்மம் செய்யுங்கள் என அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. துரியோதனனுடன் சேர்ந்திருந்தாலும் கர்ணன் இன்றுவரை உலகால் அறியப்படுவது அவனது ஈகை குணத்தாலேயே.

செல்வந்தனான கருமி ஒருவன் தன் நண்பனுடன் கோவிலுக்குச் சென்றான். இன்று அவனுக்குக் கிடைக்கும் பணத்தில் சரி பாதியை கடவுளுக்குத் தருவதாக கூறி வேண்டினான். இருவரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். வழியில் ஐநூறு ரூபாய் நோட்டு கிடந்தது. கருமி அதை எடுத்து தன் சட்டைப்பையில் வைத்துக் கொண்டான். அதைப் பார்த்த நண்பன்கடவுளிடம் பாதி கொடுப்பதாகச் சொன்னாயே?” என்று கேட்டான். அதற்கு கருமியோகடவுள் எவ்வளவு அன்பு மிக்கவர். எனக்கு சிரமம் வைக்க வேண்டாம் என்று ஆயிரம் ரூபாயில் பாதியை அவர் எடுத்துக் கொண்டு மீதி ஐநூறு ரூபாயை எனக்குத் தந்து விட்டார்என்று கூறினான்.


 நம்மில் பலர் இப்படித்தான் கிடைப்பதைச் சுருட்டிக் கொள்ளும் மனப்பான்மையோடு வாழ்கிறோம். அதனால்தான் நம்மை யாருக்கும் அடையாளம் தெரிவதில்லை. ஆனால் தருமரும், கர்ணணும் அவர்களின் ஒப்பற்ற கொடைப்பண்பால் காலம் உள்ளவரை வாழ்வார்கள்.   
.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}