18.06.2016 இரா.சைலஜா சக்தி
ஜென் துறவியும் மல்யுத்தவீரனும்
ஒரு ஊரில் ஒரு டீக்கடைக்காரனும், மல்யுத்தவீரனும் நண்பர்களாயிருந்தனர். மல்யுத்தவீரன் தினமும் பயிற்சிக்கு செல்லும் முன்பு, நண்பனின் கடையில் டீ குடிப்பது வழக்கம். தீடீரென்று ஒருநாள் இருவருக்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் பெரிய சண்டையாய் மாறியது. இறுதியில் மல்யுத்த வீரன் டீக்கடைக்காரனை மல்யுத்தத்திற்கு அழைத்தான். போட்டி நாளும் முடிவு செய்யப்பட்டது.
டீக்கடைக்காரன் இப்போது பயப்பட ஆரம்பித்தான். ஒரு ஜென் துறவியிடம் சென்று நடந்ததைக்கூறி உதவி கேட்டான். அவர் “போட்டிக்கு எத்தனை நாள் உள்ளது?” என்று கேட்டார். ஒரு மாதம் என்றான். “உனக்கு என்ன தெரியும்?” என்று கேட்டார். டீ ஆற்ற மட்டும்தான் தெரியும் என்றான். “அதையே செய்” என்று கூறிவிட்டார். ஒரு வாரம் கழித்து அவன் துறவியிடம் சென்றான். என் பயம் குறையவில்லையே? என்றான். இன்னும் வேகமாய், முனைப்புடன் டீ ஆற்று என்றார். அவனும் வெறித்தனமாய் டீ ஆற்றினான்.
அடுத்தடுத்த வாரங்களுக்கும் அவனுக்கு அதே அறிவுரைதான். போட்டி நாளும் வந்தது. பயந்த டீக்கடைக்காரன் மீண்டும் துறவியிடம் ஓடினான். “நான் என்ன செய்வது?” என்று கேட்டான். “மல்யுத்தத்திற்கு முன் அவனை ஒரு முறை உன் கடையில் டீ குடிக்கச் சொல்” என்றார்.
வீரனும் சம்மதித்தான். டீக்கடைக்காரன் இத்தனை நாள் பெற்ற பயிற்சியின் விளைவாக மிகுந்த வேகத்துடனும், வெறியுடனும் டீ ஆற்றிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த வீரனோ திகைத்துவிட்டான். ஒரு டீயை ஆற்றுவதிலேயே இவனிடம் எத்தனை வேகம், எவ்வளவு முன்னேற்றம், எத்தகைய ஒரு துடிப்பு என வியந்தான். இவனுடன் சண்டையிட்டால் நாம் தோற்றுவிடுவோம் என அஞ்சி மல்யுத்தப் போட்டியே வேண்டாமென்று சென்றுவிட்டான்.
இக்கதை நமக்கு உணர்த்தும் நீதியாதெனில் எந்த ஒரு செயலையும் முழு அர்ப்பணிப்போடும், உத்வேகத்துடனும் செய்தால் வெற்றி நிச்சயம் என்பதேயாகும். ஆம். முழுமையான ஈடுபாட்டுடன் ஒரு காரியத்தில் செயல்பட்டால் நம் திறமை பன்மடங்காக வெளிப்படும். செய்யும் செயல் அழகாகும். செய்பவனின் முழுத்திறமையும், ஆற்றலும் அனைவருக்கும் புலப்படும். இதை அறிந்ததாலேயே ஜென் துறவி டீக்கடைக்காரனை அவன் தொழிலில் முனைப்புடன் செயல்பட அறிவுறுத்தினார். விளைவு மாபெரும் மல்யுத்த வீரன் டீக்கடைக்காரனின் ஆற்றலைக் கண்டு பயந்து ஓடினான்.
செய்யும் தொழிலில் அர்ப்பணிப்பும், ஈடுபாடும் உள்ள ஒருவன் பியூன் வேலையில் சேர்ந்தாலும், படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டு ஒரு நாளில் உயரதிகாரியாக முன்னேறுவான். அத்தகைய ஆர்வம் இல்லாதவன் இறுதிவரை பியூனாகவே பணிபுரிந்து அதிகாரிகளின் கார் கதவுகளைத் திறந்து விட்டுக் கொண்டிருப்பான். செய்வன திருந்தச் செய் என்பதே வரலாற்றில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் அனைவரின் தாரக மந்திரமாகும்.
பதினான்கு வயதில் தன் பார்வையை முற்றிலும் பறி கொடுத்த இருபத்தி இரண்டு வயது ஜஸ்டின் சலாஸ் என்ற அமெரிக்கர் தன் கடின முயற்சியால் மிகச்சிறந்த மலையேறும் வீரராக உருவாகியுள்ளார். கண் நன்றாகத் தெரிந்தும் நடக்கும்போதே விழும் நமக்கு சலாஸ் மேலும் ஒரு அதிர்ச்சி தருகிறார். இவர் ஒரு தொழில்முறை புகைப்படக் கலைஞரும் கூட. இவர் எடுக்கும் புகைப்படங்கள் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன. கேட்கும் போதே தலை சுற்றுகிறதல்லவா?
No comments:
Post a Comment