நாள் – 16.06.2016 இரா. சைலஜா
சக்தி
புத்தரின் சீடன்
புத்தர் தனது சீடர்களுடன் காட்டுவழியே சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தாகம் ஏற்பட்டது. சீடன் ஒருவன் அருகிலிருந்த நீர்நிலைக்குச் சென்றான். அது கலங்கிய நிலையில் இருந்தது. இதில் நீர் எடுக்க வேண்டாம் என்று திரும்பிவிட்டான். சிறிது நேரம் கழித்து மீண்டும் அங்கு சென்றான். இப்போது கொஞ்சம் கலங்கிய நிலையில் இருந்தது. திரும்பி வந்துவிட்டான். வெகு நேரம் கழித்து மீண்டும் சென்றான். நீர்நிலை தெளிந்த நிலையில் இருந்தது. சீடனும் மகிழ்ச்சியுடன் நீர் எடுத்து வந்தான். இப்போது புத்தர் சொன்னார், மனமும் இந்த நீர்நிலையைப் போன்றதே. அது குழம்பிய நிலையில் இருக்கும்போது நீ எதுவும் செய்யாமல் இருந்து விடு. தானாகவே தெளிவடைந்து விடும் என்றார்.
மனம் அப்படிப்பட்டதுதான். வாசலில் கோலம் போடும்போதே தினமும் லேட்டாக வரும் பேப்பர்காரனை திட்டிக் கொண்டிருக்கும். பத்து மணி பஸ்ஸைப் பிடிக்க ஓடிக்கொண்டிருப்போம். மனமோ “பஸ் போயிருக்குமோ” என்ற பதட்டத்தை உண்டு பண்ணும். ஏறக்குறைய விழாத குறையாய் ஓடிப்போய் பஸ்ஸில் ஏறியபோது, அய்யய்யோ ஸீட் இருக்குமோ என்று தெரியலையே என்று நமக்கு அடுத்த பயத்தை உண்டு பண்ணும். பல நேரங்களில் மனமே நமது அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம். நமக்குப் பிடிக்காதவர்களைப் பார்த்தால் எரிச்சலை அள்ளி கொண்டுவந்து கொட்டும். நமக்கோ பிரஷர் அதிகமாகிவிடும். பிடித்தவர்களைப் பார்த்தால் மனம் துள்ளிக் குதிக்க ஆரம்பிக்கும்.
இந்த மனதை அடக்குவது எப்படி? மனம் பதட்டமடையும்போது உடலும் பதட்டமடையும். கூர்ந்து கவனித்தால் நம் சுவாசம் தாறுமாறாய் எகிறிக்கொண்டிருக்கும். இதுவே பல வியாதிகளுக்கு வித்திடுகிறது. மனமும், சுவாசமும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையது. ஆக மனம் அமைதிப்படுவதற்கு முதலில் செய்ய வேண்டியது நமது சுவாசத்தை சீராக்குவதுதான். தியானங்களில் கூட முதலில் ஆழமான சுவாசமே வலியுறுத்தப்படுகிறது. தியானம் மட்டுமல்ல யோகக்கலையும் சுவாசத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.
மொத்தத்தில் நமது சுவாசம் சீரானதாக இருந்தால் மனமும் சீராக இருக்கும். மனம் சீராக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த ரகசியத்தை நமது முன்னோர்கள் அறிந்ததாலேயே சீரான சுவாசத்தின் மூலம் மனதைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். நாமோ மனதை ரிமோட் கண்ட்ரோலாக மாற்றிவிட்டோம். ரிமோட்டுக்குத்தக்கபடி மாறும் டிவி சானல் போல நாமும் மனதின் உத்தரவிற்கு அடிமையாகி விட்டோம்.
மனதிற்கு அடிமையாகிவிட்டதாலேயே தீவிரவாதி ஒருவன் திடீரென பள்ளிக்குள் நுழைந்து கண்ணில்படும் குழந்தைகளை எல்லாம் சுட்டுக் கொன்றான். மனதைப் பக்குவப்படுத்தியதாலேயே திருடனாக இருந்த வால்மீகி இராமாயணம் என்னும் இதிகாசத்தை இயற்றினார். நம்மை மகானாக்குவதும், மிருகமாக்குவதும் மனமே. ஆகவே மனதை வென்று மகிழ்வுடன் வாழ்வோமாக.
No comments:
Post a Comment