நாள்
– 17.06.2016 இரா.சைலஜா சக்தி
தருமனின் வெள்ளிக்கிண்ணம்
ஒரு முறை பாண்டவர்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது ஏழை ஒருவன் அருகில் வந்து தான் வறுமையில் வாடுவதாகக்கூறி உதவி வேண்டினான். உடனே தருமர் தனது இடது கையால் அருகில் இருந்த வெள்ளிக் கிண்ணத்தை எடுத்து அவனிடம் கொடுத்தார்.
அவன் சென்றதும் பீமன்,
“இடது கையால் தருமம் செய்தால் பலனில்லையே?
சாஸ்திரம் அறிந்த தாங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?” எனக் கேட்டான்.
அதற்கு தருமர், “வலது கையைக் கழுவிவிட்டு வருவதற்குள் என் மனம் மாறிவிட்டால் என்ன செய்வேன்? வெள்ளிக் கிண்ணத்திற்குப் பதில் வேறு பொருள் கொடுக்கத் தோன்றினால் என்ன செய்வது? அதனால்தான் உடனேயே வெள்ளிக் கிண்ணத்தைக் கொடுத்துவிட்டேன். எனக்கு பலன் கிடைக்காவிடினும் அவனுக்கு நன்மை கிடைத்தால் போதும்”
என்று கூறினார்
.
இந்த மனம் இன்று நம்மில் எத்தனை பேருக்கு வரும்?
கோவில் பூசாரி தட்டில் நூறு ரூபாய் வைத்துவிட்டு சாமி கழுத்தில் உள்ள மாலையை அவர் தருவாரா?
மாட்டாரா? என்ற குழப்பத்துடனேயே காத்துக் கிடப்போம்.
கூட்டம் குறைந்தபின் பூசாரி நம்மை ஸ்பெஷலாகக் கவனிப்பார்.
மாலை மரியாதைகள் கிடைத்ததும்தான் நிம்மதிப் பெருமூச்சே வரும். அப்பாடா கொடுத்த நூறு ரூபாய்க்கு பலனிருக்கிறது என்று சொல்லிப் பூரிப்போம்.
நமக்கெல்லாம் தருமர் வெள்ளிக் கிண்ணம் கொடுத்தது வேடிக்கையாகத் தெரிவதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது?
தானம் கொடுப்பதில் கூட சில நியதிகள் உண்டு.
ஒரு தாம்பாளத்தில் வைத்து கொடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். அப்போதுதான் கொடுப்பவர் கை கீழேயும், வாங்குபவர் கை மேலேயும் இருக்குமாம்.
இதனால் நான் கொடுத்தேன் என்ற கர்வம் கொடுத்தவருக்கும்,
பெற்றுவிட்டோமே என்ற தாழ்வு மனப்பான்மை வாங்கியவருக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான்.
வருமானத்தில் ஒரு பகுதியை தர்மம் செய்யுங்கள் என அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன.
துரியோதனனுடன் சேர்ந்திருந்தாலும் கர்ணன் இன்றுவரை உலகால் அறியப்படுவது அவனது ஈகை குணத்தாலேயே.
செல்வந்தனான கருமி ஒருவன் தன் நண்பனுடன் கோவிலுக்குச் சென்றான். இன்று அவனுக்குக் கிடைக்கும் பணத்தில் சரி பாதியை கடவுளுக்குத் தருவதாக கூறி வேண்டினான். இருவரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். வழியில் ஐநூறு ரூபாய் நோட்டு கிடந்தது. கருமி அதை எடுத்து தன் சட்டைப்பையில் வைத்துக் கொண்டான். அதைப் பார்த்த நண்பன்
“கடவுளிடம் பாதி கொடுப்பதாகச் சொன்னாயே?”
என்று கேட்டான். அதற்கு கருமியோ “கடவுள் எவ்வளவு அன்பு மிக்கவர். எனக்கு சிரமம் வைக்க வேண்டாம் என்று ஆயிரம் ரூபாயில் பாதியை அவர் எடுத்துக் கொண்டு மீதி ஐநூறு ரூபாயை எனக்குத் தந்து விட்டார்” என்று கூறினான்.
நம்மில் பலர் இப்படித்தான் கிடைப்பதைச் சுருட்டிக் கொள்ளும் மனப்பான்மையோடு வாழ்கிறோம். அதனால்தான் நம்மை யாருக்கும் அடையாளம் தெரிவதில்லை. ஆனால் தருமரும், கர்ணணும் அவர்களின் ஒப்பற்ற கொடைப்பண்பால் காலம் உள்ளவரை வாழ்வார்கள்.
No comments:
Post a Comment