Thursday, 11 August 2016

ஆடிப்பூர ஆண்டாள் தேரோட்டம்(கவிதை)

                                        ஆடிப்பூர ஆண்டாள் தேரோட்டம்






     வாரணம் ஆயிரம் சூழ
    நாரணன்நம்பி கைத்தலம் பற்றியவள்
    பாவை பாடிய பாவை
    பரந்தாமன் மாலைசூடிய பூவை

    கடவுளை காதலனாக்கி
    கவிபாடிய பைங்கிளி
    அரங்கனை மணக்க
    ஆடிப்பூரத்தில் அவதரித்த
    அலைமகள் அவள்

    பவித்திர காதலால்
    பக்தி காதலால்
    பள்ளி கொண்ட
    பரந்தாமனுடன் கலந்தவள்

    பெரியாழ்வார் பெண்மகளாகி
    ஆழ்வார்கள் அன்பை
    அகிலம் அறிய செய்தவள்

    ஆண்டாள் அவதரித்த பூமி
    அலங்கரித்து நின்றது
    அவள் தேருக்காக
  
    வானையும் வளைக்கும் போலும்
    தெய்வ ஆண்டாளின் திருத்தேர்


    தேர் நகர நகர
    அலங்கரிப்புகள் அசைய அசைய
    அதுவரை அசைந்த மனம்
    அசையாது நிற்கிறது

    தேரில்
    கொலுவீற்று இருக்கிறாள்
    கோதையவள் கோவிந்தனுடன்

    தேரின் முன்னே
    கோவிந்த கோஷங்கள்
    கோலாட்ட வைபவங்கள்
    பக்தி பாசுரங்கள்

    கலைகள் முன்னே செல்ல
    கவிதாயினி கம்பீரமாய்
    பின்னே வருகிறாள்
    வடம் பிடித்தவர்க்கு
    வாழ்வு அளிக்க
    கை கூப்பியவர்க்கு
    காட்சி கொடுக்க
    பக்தி செய்பவர்க்கு
    பரிவு காட்ட
    பாவை நோன்பிருந்தவள்
    பாரில் வலம் வருகிறாள்

    தேரின் பின்னே
    சேவைக்கு மருத்துவ குழுக்கள்
    தேவைக்கு விரைவு ஊர்திகள்
    அணிவகுக்க சொல்லி
    ஆண்டாள் ஆணை போலும்

    தேரின் அழகு ஆச்சரியம்
    தேரின் அழகு அதிசயம்
    தேரின் அழகு அபூர்வம்
    தேரின் அழகு ஆனந்தம்

  
    காதலின் மறுபெயர் அன்பு
    அன்பின் மறுபெயர் ஆண்டாள்
    அன்று காதலில் ஆண்டவள்
    இன்று அன்பில் ஆளுகிறாள்


    காண கண்கோடி வேண்டும்
    ஆடிப்பூர ஆண்டாளை
    ஆடிப்பூர ஆண்டாள் தேரை

    காண கண்கோடி வேண்டும்
    காண கண்கோடி வேண்டும்
  
          --  இரா.சைலஜா சக்தி

2 comments:

  1. ஆண்டாள் அன்று அரங்கனை ஆண்டாள்
    ஆண்டாள் இன்று அகிலத்தை ஆள்கிறாள்....

    ReplyDelete

.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}