Thursday 27 August 2015

கலாமென்னும் இளைஞன் (கவிதை)

                                                          


                                                                      கலாமென்னும் இளைஞன்



நீ பூமியில் தடுமாறி விழுந்தாய்
பாரத பூமியே பதறி எழுந்தது

நீ பிழைத்திருக்க இந்திய தேசம்
இறைவனை யாசித்தது

நீயோ கோடிக்கணக்கான இதயங்களில்
விருட்சமாய் முளைத்து
மரணிக்கவில்லையென புன்னகைக்கிறாய்

நீ செலுத்திய ஏவுகணைகள்
வானைக் கிழித்து
வலம் வந்திருக்கலாம்

ஆனால்
நீ உதிர்த்த வார்த்தைகள்
இன்று பல
மனங்களைக் கிழித்து
மனிதமாய் மலர்ந்திருக்கின்றது

ஆசான்களை ஆண்டவன்களாக்கினாய்
குழந்தைகளை தெய்வங்களாய் கொண்டாடினாய்
பறவைகள் கூட உன் பாசப்
பிணைப்பிலிருந்து தப்பவில்லை
மதங்கள் கடந்து நின்றாய்

அதனால்தான்

அனைத்து மதங்களும் உனக்காக
ஆண்டவனிடம் சரணடைந்தன

இந்தியாவை உயிர் மூச்சென்றாய்
அதனால்தான்
இந்தியர்களின் உயிர்மூச்சில் நீ
நிரந்தரமாய் கலந்து விட்டாய்

சாமான்யன் சரித்திரம் படைக்கலாம் என்றாய்
சரித்திரம் படைத்த பின்னும் சாமான்யனாய் நின்றாய்

இளைஞர்களை உன் வசப்படுத்தி
என்றும்
முதிர்ந்த இளைஞனாய் ஜொலிக்கிறாய்

அணு ஆய்வு உன் அறிவானது
அன்பு உன் மொழியானது
எளிமை உன் வாழ்வானது
உன் வாழ்வே எங்கள் வழியானது

பயணிப்போம் இனி
வழித்துணைக்கு நீ வருவாய்
என்ற நம்பிக்கையில்!....

                                                       இரா.சைலஜாசக்தி
.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}