Saturday 12 March 2016

கற்கை நன்றே...(கவிதை)

கற்கை நன்றே






அக்கா சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு
என்று கையேந்தினான்
அந்த அழுக்குச் சிறுவன்

எண்ணெய் பார்த்தறியா கேசம்
கிழிந்த கால்சட்டைக்குள்
ஒளிந்து வாழும் மெலிந்த தேகம்

பத்திருபது பேரிடம் யாசகத் தொழில்
முடித்து பறக்கிறான் சிட்டாய்

டீயும் பன்னும் வாங்கி
இருமுகிற தாய்க்கும்
அழுகிற தங்கைக்கும் அன்னமளிக்கிறான்

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு
கந்தல்களுக்குள் கைவிடுகிறான்
வெளியில் வருகிறது
அவ்வையின் ஆத்திச்சூடி

உரத்துப் படிக்கத் தொடங்குகிறான்
ஆனால்
என் காதில் விழுவது என்னவோ
அவனறியாத நானறிந்த வரிகள்

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே. 

--- இரா. சைலஜா சக்தி




அமுது படைக்கும் குப்பைகள்...(கவிதை)

அமுது படைக்கும் குப்பைகள்




கத்திரி வெயில் காய்த்தெடுத்தது என்னை
பாதுகாப்பு கவசமாய் என்னுடன்
பவனி வந்த குடையோ
சூட்டைக் குடித்து கொப்பளித்தது

வீட்டை நெருங்குகையில்
மூளை மணியடித்துவிட்டது
போய் சமைக்க வேண்டும் என

பற்றி விட்ட எரிச்சலில்
பத்தடி தூரம் பாதம் பதித்தேன்

ஏதோ உறுத்தியது
திரும்பிப் பார்த்தேன்

குப்பைகளுக்கு நடுவே
பிளாஸ்டிக் பாட்டில்களை
கண்டெடுத்த பரவசத்துடன்

மதிய வெயிலில் மண் தரையில்
உட்கார்ந்திருக்கும் அந்த முதியவர்

மனம் உள்ளுக்குள்ளே கூவியது

செருப்பின் சூடு
பாதம் வருடியதால்
பதறிய நானெங்கே?

நாம்
கசக்கி எறிந்த காப்பிக் கப்புகளுக்கும்
வீசி எறிந்த கூல்டிரிங்ஸ் பாட்டில்களுக்கும்
நடுவே வெற்றுக் கால்களை அண்டக்கொடுத்து
காய்த்துப் போன விரல்களால்
களைகளுக்குள் களையெடுக்கும் அவரெங்கே?


அவரின்
பசி வெயிலை வென்றுவிட்டது
உழைப்பு முதுமையை வென்றுவிட்டது

வெட்கி தலைகுனிந்தேன்
வேகமாய் நடந்தேன்
ரைஸ் குக்கரில் சாதம் வைக்க.

             --- இரா. சைலஜா சக்தி

                

வல்லமை தாராயோ? - கவிதை

வல்லமை தாராயோ?




டாஸ்மாக்குகள் நர்த்தனமாடும் மண்ணில்
மதுவிரட்டி மகாத்மாவை உயிர்ப்பிக்க
தேசமே உன் மாணவனுக்கு
வல்லமை தாராயோ?

ரோட்டுக் குடிமகனை மேட்டுக் குடிமகனாக்கும்
அரசியல் தொழிலுக்குள் தொலைந்து போன
காமராசனையும், கக்கனையும் மீட்டெடுக்க
தேசமே உன் பிள்ளைகளுக்கு
வல்லமை தாராயோ?

வெள்ளைக்காரன் சவைத்து துப்பிய ஆங்கிலத்தில்
நுரைத்துக் குளிக்கும் உன் மக்கள்
பாவேந்தனின் பைந்தமிழைத் தேடித் திரிய
தேசமே நீ
வல்லமை தாராயோ?

எதிர்ப்புகளை எதிர்த்து தள்ளி
அன்பில் தெரசாக்களையும்,
அறிவில் மலாலாக்களையும்
மட்டுமே ஈன்றெடுக்க
தேசமே உன் பெண்ணினத்திற்கு
வல்லமை தாராயோ?

கல்வியை கரும்பாக்கி
கற்றலை இனிமையாக்கி
கலாம்களைக் கண்டறிய
தேசமே உன் கல்விச் சாலைகளுக்கு
வல்லமை தாராயோ?
                     --- இரா. சைலஜா சக்தி
.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}