Saturday 12 March 2016

கற்கை நன்றே...(கவிதை)

கற்கை நன்றே






அக்கா சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு
என்று கையேந்தினான்
அந்த அழுக்குச் சிறுவன்

எண்ணெய் பார்த்தறியா கேசம்
கிழிந்த கால்சட்டைக்குள்
ஒளிந்து வாழும் மெலிந்த தேகம்

பத்திருபது பேரிடம் யாசகத் தொழில்
முடித்து பறக்கிறான் சிட்டாய்

டீயும் பன்னும் வாங்கி
இருமுகிற தாய்க்கும்
அழுகிற தங்கைக்கும் அன்னமளிக்கிறான்

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு
கந்தல்களுக்குள் கைவிடுகிறான்
வெளியில் வருகிறது
அவ்வையின் ஆத்திச்சூடி

உரத்துப் படிக்கத் தொடங்குகிறான்
ஆனால்
என் காதில் விழுவது என்னவோ
அவனறியாத நானறிந்த வரிகள்

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே. 

--- இரா. சைலஜா சக்தி




No comments:

Post a Comment

.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}