Friday 8 June 2018

அய்யனார் குதிரை (கதை)


அய்யனார் குதிரை


விவேகன், சமீபமா அய்யனார் காடு பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் வந்துகிட்டிருக்கு. அய்யனார் இரவு நேரத்துல குதிரையில வர்றதாகவும், தப்பு பண்ணுறவங்களைத் தண்டிக்கிறதாகவும் மக்கள் சொல்றாங்க. போலீஸ் டிபார்ட்மெண்ட்டும் இன்வெஸ்டிகேட் பண்ணிகிட்டிருக்கு. எனக்கு அய்யனார் காடு பற்றிய ஒரு டீடெய்ல்டு ரிப்போர்ட் நீங்க தரணும்எடிட்டர் சொல்லவும்ஷ்யூர் சார்என்று உற்சாகமானான் விவேகன்.
மயில்சாமி என்பவர் அய்யனார் கோவிலுக்கு மண் குதிரைகள் செஞ்சு கொடுக்குறவர். அவர் உங்களுக்கு உதவி செய்வார். அதற்குரிய ஏற்பாடுகளை நான் பார்த்துக்குறேன். நீங்களும், ப்ரியாவும் க்விக்கா கிளம்புங்க”.
ப்ரியாவின் முகம் மலர்ந்தது. விவேகனைப் பிரிந்து இருக்க வேண்டுமோ என்று கவலைப்பட்டவளுக்கு எடிட்டரின் வார்த்தை தேனாக இனித்தது.
விவேகனும், பிரியாவும் கிளம்பிக் கொண்டிருக்கும்போது நகுல் வந்தான். “ஹேய் என்னை விட்டுட்டு அய்யனார்காடு போறீங்களா? என்று செல்லக் கோபத்துடன் கேட்டான்.
பத்திரிக்கை விஷயமா போறோம். டூர் போற மாதிரி கோச்சுக்கிறியேடா? விவேகன் கேட்க,
அதெல்லாம் தெரியாது. எனக்கும் அந்தக் காட்டைப் பற்றி தெரிஞ்சுக்கணும். உங்களைக் கேட்காமலேயே ஆஃபீஸ்ல லீவ் சொல்லிட்டு வந்துட்டேன். ஸோ இப்போ நானும் உங்க கூட வர்றேன்என்று சொல்லி காரில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.
விவேகனும், பிரியாவும் சிரித்துக் கொண்டே காரில் ஏறினர்.  கார் அய்யனார் காட்டின் அருகில் உள்ள வேப்பங்குளம் கிராமத்தை நோக்கிப் பாய்ந்தது.
விவேகன் துடிப்பான பத்திரிக்கை ரிப்போர்ட்டர். பிரியா ஜர்னலிசம் படித்துவிட்டு விவேகனின் பத்திரிக்கை அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தாள். ஆரம்பத்தில் இருவரும் நல்ல நண்பர்கள். இப்போது காதலர்கள். நகுல் விவேகனின் உயிர் நண்பன். எம்.என்.சி கம்பெனி ஒன்றில் உயர்பதவி வகிப்பவன். விடுமுறை நாட்களில் மூவரும் அடிக்கடி ஊர்சுற்றுவது வழக்கம்.
கார் வேப்பங்குளத்தை அடைந்தது. மயில்சாமியின் வீட்டுக்குள் நுழைந்ததுமே கண்ணில் பட்டது எல்லாமே சுடுமண் சிற்பங்கள்தான். மூவரையும் வரவேற்று உபசரித்தார். விவேகன் வந்த விஷயத்தை சுருக்கமாகச் சொன்னான். மயில்சாமி அவர்களை பக்கத்தில் உள்ள சூளைக்கு அழைத்துச் சென்றார். அங்கே பதிமூணு அடி உயரத்தில் ஊர்க்குதிரை கம்பீரமாய் நின்றது.
இதெல்லாம் எப்படி செய்றீங்க?“ விவேகன்  கேட்டான்.
களிமண்ணை பதப்படுத்தித்தான் செய்யுறேங்கய்யா.“ என்றார்.
சில சிற்பங்கள் தேங்காய் சிரட்டைகள் மற்றும் மரக்கட்டைகளோடு அடுக்கப்பட்டு சுட்டு எடுப்பதற்காக காத்திருந்தன. சிறிது தள்ளி சுட்டு எடுக்கப்பட்ட மண்குதிரைகள் மீது சிறுதானிய கலவை பூசப்பட்டிருந்தது.
விவேகனுக்கு ஆச்சரியமாயிருந்தது.
மண்குதிரை தயார் செய்ய இவ்வளவு புராஸஸா?”.
மண்குதிரைன்னு சாதாரணமா சொல்லிட்டீங்களேய்யா? இதெல்லாம் எங்க புள்ளங்க மாதிரிதான். எத்தனை கஷ்டப்பட்டு செஞ்சாலும் கடைசியில சாயம் பூசி அய்யனார் கோவிலுக்குப் போகும்போது பார்த்தா கண்ணுல தண்ணி வந்துரும்யா. அம்புட்டு அழகா இருக்கும்”.
ப்ரியா விவேகன், மயில்சாமி இருவரின் உரையாடலையும் குறித்துக் கொண்டே வந்தாள். “இந்தக் குதிரை மேல ஏறிதான் உங்க அய்யனார் நைட் சவாரி பண்றாரா?” நகுல் நக்கலாய் கேட்கவும் மயில்சாமி முறைத்தார்.  அதற்குள் விவேகன் கண்களால் நகுலை அடக்கினான்.
தேவையான விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பின் மயில்சாமியுடன் அய்யனார் காட்டை நோக்கி பயணித்தனர். அடா்ந்த காடு என்பதால் வனத்துறையினரின் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தனர். குறிப்பிட்ட தூரத்திற்குப் பின் வாகனத்துக்கு அனுமதியில்லை. நால்வரும் இறங்கி நடந்தனர். மூன்று கிலோமீட்டர் நடந்த பின்பே அய்யனார் கோவிலை நெருங்க முடிந்தது.
முதலில் அவர்களை வரவேற்றது ராட்சத சுடுமண் குதிரைகள்தான். கோவிலுக்கு முன்பு இருபுறமும் இருபதடி உயர பிரம்மாண்ட குதிரைகள் கோவிலைக் காவல் காப்பது போல் நின்றன. அதுவரை கிண்டலடித்த நகுலுக்கும் லேசாக பயம் வர ஆரம்பித்தது. ப்ரியா விவேகனின் கையைப் பிடித்துக் கொண்டாள். குதிரைகளின் பிடரியில் உள்ள வேலைப்பாடுகள் அவற்றுக்கு கம்பீரம் சேர்த்தன. பெரிய கண்கள், காண்பவர்களை சற்று அச்சுறுத்தியது. புடைத்த காதுகள் வர்ணங்களால் மெருகூட்டப்பட்டிருந்தன. நெற்றியில் வரையப்பட்ட சேணத்தில் கலையழகு மிளிர்ந்தது. திறந்த வாயில் கடிவாளம் இடப்பட்டிருந்தது. அய்யனார் எந்த நேரத்தில் வந்தாலும், அவரை ஏற்றிக்கொள்ள வசதியாக இருப்பதுபோல் நிமிர்ந்த முதுகுடன் கம்பீரமாக காத்துக் கொண்டு நின்றன.

குதிரைகளை வியப்புடன் பார்த்துக் கொண்டே மூவரும் மயில்சாமியின் பின்னே சென்றனர். நடுவில்  இருந்த கோவிலுக்குள் குதிரை மேல் வீற்றிருந்த அய்யனார் பெரிய மீசையும், உருட்டிய கண்களுமாய் அரிவாளுடன் நடுங்க வைத்தார். அவர் முகத்தில் ஆக்ரோஷம் கலந்த புன்னகை வெளிப்பட்டது. 
 ஐயா, இந்த அய்யனார் ரொம்ப சக்தி வாய்ந்தவரா?” விவேகன் கேட்க
அய்யனாரு பாசக்காரருங்க. கேட்டதெல்லாம் கொடுப்பாரு. மனசு சுத்தம் தான் அய்யனாருக்கு காணிக்கையே. மனசுல அழுக்கு புடிச்சவன், தப்புத்தண்டா பண்ணுறவன் அவரு மண்ணை மிதிச்சா அவன் உசுரோட திரும்ப முடியாது.  வெட்டி சாய்ச்சிருவாரு”.
எப்படிகையில வச்சிருக்காறே அந்த அரிவாளை வச்சா வெட்டுவாரு?”  இம்முறை நகுலின் கிண்டலை மயில்சாமியால் பொறுக்க முடியவில்லை.
தம்பி. உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னா விட்டுருங்க. அய்யனாரைச் சீண்டிப் பார்க்கிறதுக்குத்தான் இவ்வளவு தூரம் வந்தீங்களா?”
நகுல் மௌனமானான் மயில்சாமி தொடர்ந்தார்
தம்பி அய்யனாரை வேண்டிக்கிட்டா உடனே நம்ம வேண்டுதலை நிறைவேற்றுவார். ஆனா நம்ம ஆசை நியாயமா இருக்கணும். அய்யனார்கிட்ட சொன்னா சொன்னபடி வேண்டுதலை நிறைவேத்திடணும். இந்தக் குதிரைங்க எல்லாமே குதிரையெடுப்பு நேர்ச்சைக்காக கொண்டு வந்து விட்டதுதான்”.
இவ்வளவு குதிரையுமா?” ஆச்சர்யம் மாறாமல் கேட்டாள் ப்ரியா.
ஆமாம்மா. இங்க இருக்கிறதுல நூறு நூத்தம்பது வருஷ பழமையான குதிரைகளும் இருக்குது. அதுல இருக்கிற சித்திர வேலைப்பாடுகளை இப்போ எங்களாலயே செய்ய முடியல”.
இங்கே இரவு நேரத்துல அய்யனார் குதிரை மேல வர்றதாக சொல்றது உண்மையா?” விவேகனின் கேள்விக்கு
தம்பி….. இது எங்க நம்பிக்கை….. அய்யனார் காவல் தெய்வம்…. இந்த காட்டையும், எங்களையும் அவர்தான் காப்பாத்துறாருன்னு நாங்க நம்புறோம்…. அவ்வளவுதான்….. இது உண்மையா, பொய்யான்னு நாங்க ஆராய்ச்சி பண்ணல.”
 ஐயா, தப்பா எடுத்துக்காதீங்க. ஒருவேளை அய்யனார் பேரைச் சொல்லி வேற யாராவது கொலைகளைப் பண்ணலாமில்ல”.
கொலையா?” என்று அதிர்ந்தார்.
எதுப்பா கொலை?….. நேர்மையில்லாத போலீஸ்காரன் ஒருத்தன் அய்யனார் மண்ணுல வந்து குடிச்சான் குடிபோதையில கைபட்டு துப்பாக்கி தோட்டா அவன் நெஞ்சுலயே பாஞ்சு உசுர விட்டான். கோயில் சிலைய திருடுனவன், ஒழுக்கங்கெட்ட பொம்பள…….இவுங்கதாய்யா இங்க செத்தவுங்க. இதெல்லாம் அவங்கவங்க செஞ்ச தப்புக்கு அய்யனார் கொடுத்த தண்டனை”.  என்று ஆவேசமாய் சொல்லிவிட்டு ஒரு புத்தகத்தை விவேகனிடம் கொடுத்தார். “இது எங்க பாட்டன் காலத்துல உள்ள  அய்யனாரைப் பத்தின புஸ்தகம் உங்களுக்கு உதவியா இருக்கும்னு நினைச்சு எடுத்துட்டு வந்தேன்”.
விவேகனும், ப்ரியாவும் மகிழ்ச்சியடைந்தனர்.
பிரியா புத்தகத்தை ஷோல்டர் பேக்கிற்குள் வைத்துவிட்டு திரும்பினாள். நகுல் திடீரென்று பாய்ந்து பிரியாவின் கையை பின்னால் வளைத்து அவள் நெற்றிப்பொட்டில் ரிவால்வரை வைத்தான்.
விவேகனும், மயில்சாமியும் அதிர்ந்தனர். நகுலின் நடவடிக்கை புரியாமல் விவேகன் குழம்பினான். பிரியாவுக்கு வியர்த்து கொட்டியது. அவளால் நகுலின் பிடியில் இருந்து விடுபடமுடியவில்லை.
நகுல்….. என்ன பண்ற….”
ஸாரி விவேகன். நேற்றுவரை நான் உன் ஃபிரெண்ட். இன்று உன்னை கொல்லணும்னு நினைக்கிற எதிரி
என்ன நடந்தது நகுல்? நீ கொல்லுற அளவுக்கு நான் என்ன செஞ்சேன்?”
என்னுடைய எம்.என்.சி கம்பெனிக்கும் இங்க உள்ள சில ஆளுங்கட்சி மந்திரிகளுக்கும் உள்ள தொடர்பை நீ கண்டுபிடிச்சிட்ட. அந்த மினிஸ்டர்கள்  மூலமாதான் எங்க கம்பெனியில நடக்குற பல இல்லீகல் விஷயங்கள் வெளியே வராம மறைக்கப்படுது. இதை புரூவ் பண்ற வீடியோ எவிடெண்ஸ், ஃப்போட்டோஸ் உன்கிட்ட இருக்கு. அது கூடிய சீக்கிரம் மீடியாவுக்கு வரப்போகுது…. அப்படித்தானே
விவேகன் எதுவும் சொல்லாமல் தலைகுனிந்தான்.
உன் ஃப்ரெண்டான என்கிட்டயே என் கம்பெனி பற்றிய மேட்டர்ஸை நாசூக்கா கறந்துட்ட விவேகன்.  பத்திரிக்கைக்காரன் புத்திய காட்டிட்டல்ல…”
உன் கம்பெனி தப்பு பண்ணுதுடா…”
டோண்ட் டாக்…. அதைப் பற்றி உனக்கென்ன கவலை?.... எனக்கு அந்த எவிடென்ஸ் எல்லாமே வேணும். இல்லன்னா பிரியா பொணமாயிடுவா…..”
நகுல்…. இதனால உனக்கென்னடா லாபம்?”
அப்படிக் கேளு. இன்னும் பத்து வருஷம் கழிச்சு கிடைக்கிற புரமோஷன் எனக்காக இப்பவே காத்துகிட்டுருக்கு. மில்லியன் டாலர்ஸ் பணம், கனடாவுல ராஜ வாழ்க்கை…. இதுதான் கம்பெனி எனக்கு கொடுத்திருக்குற ஆஃபர்”… நகுல் சிரித்தான்.
தம்பி….. தப்பு பண்ணுறீங்க. அய்யனார் பார்த்துக்கிட்டிருக்காருமயில்சாமி எச்சரித்தார்.
ஷட் அப்…” நகுல் கத்தினான்.
விவேகன்…. எல்லா எவிடென்ஸையும் எடிட்டர்கிட்ட கொடுத்து வச்சிருக்கன்னு தெரியும். உன் எடிட்டர் இப்போ எங்க கஸ்டடியிலதான் இருக்காரு. அந்த ஃபைல்க்கு பாஸ்வேர்ட் சொல்லு. இல்லன்னா அட் டைம்ல எடிட்டர், பிரியா ரெண்டு பேர் தலையும் சிதறிடும்”.
விவேகன் திகைத்தான். வினாடிகள் கடந்தன. எல்லோர் மனதிலும் படபடப்பு. பிரியாவுக்கு இதயம் திக்திக் என்றது. மயில்சாமி அய்யனாரைக் கையெடுத்து கும்பிட்டார்.
திடீரென்று புதருக்குள் இருந்து புலி ஒன்று நகுல், பிரியா இருவர் மீதும் பாய்ந்தது கீழே தள்ளியது. பிரியா எழுந்து விவேகனிடம் ஓடினாள். நகுல் சுதாரிப்பதற்குள் புலி அவனைப் பந்தாடியது. அவன் மேல் ஏறி, வாயால் அவன் கழுத்தைக் கவ்வியது. குரல்வளையைக் கடித்து குதறியது. நகுலின் அலறல் காட்டில் எதிரொலித்தது. வெறிபிடித்த புலி நகுலை தரதரவென்று இழுத்துச் சென்றது. திடீரென்று வனத்துறையினரின் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அதைக் கேட்டதும் நகுலை வீசிவிட்டு புதருக்குள் சென்று ஓடி மறைந்தது. வீசப்பட்ட நகுல் அய்யனார் குதிரையின் காலடியில் வந்து விழுந்தான். குற்றுயிரும், குலையுயிருமாகக் கிடந்தவன், அண்ணாந்து பார்த்தான். குதிரையின் மேல் அய்யனார் உட்கார்ந்து சிரிப்பது போல் தெரிந்தது. கண்களை திறந்தவாறே நகுல் உயிரை விட்டான்.
சில நிமிடங்களுக்குள் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது. விவேகனும், பிரியாவும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. மயில்சாமி அய்யனாரய்யாஉன் கருணையே கருணைஎன்று சொல்லி கண்ணீர் வடித்தார். வனத்துறையினர் அவர்களைப் பத்திரமாக காட்டுக்கு வெளியே அழைத்து வந்தனர்
எல்லாமே கனவு போலிருந்தது விவேகனுக்கு. மேஜை மீது மயல்சாமி கொடுத்த அய்யனார் வரலாறு புத்தகத்தைப் புரட்டினான். ஏதோ பழைய சித்தர் பாடல் போல் ஒன்று கண்ணில் பட்டது.
தப்புக்குத் தலையெடுப்பான்
உண்மைக்கு உயிர்கொடுப்பான்
எங்கப்பன் அய்யனாரு
அரசாளும் காட்டினிலே…”
விவேகன் எழுதினான்.
நம்புகிறவர் கண்களுக்கு இரவில் அய்யனார் குதிரைமேல் வலம் வருகிறார்.. ஆனால் நம்பாதவர்களின் கண்களுக்கு கலைநயமிக்க அவரின் மண்குதிரைகள் மட்டும் காட்சியளிக்கின்றன. எது எப்படியோ அய்யனாரின் மண்ணை மிதிக்கும் எந்த ஒரு தவறான மனிதனும் உயிருடன் திரும்புவது அசாத்தியமே

.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}