Friday 8 June 2018

மாமரத்தின் மடியில் (கதை)


மாமரத்தின் மடியில்






இடைவிடாத மழையில் நன்றாக குளித்திருந்தது செங்கமலக்கிழவியின் மாமரம். ரோட்டில் போவோர் வருவோரை எல்லாம் அதன் பங்கனப்பள்ளி மாம்பழங்கள் சுண்டி இழுக்கும். அதைப் பார்த்தவுடன் நாக்கில் நீர் ஊறும். மரத்தின்மேல் உயிரையே வைத்திருந்தாள் செங்கமலக்கிழவி. செடியாக இருக்கும் போதே தண்ணீர் ஊற்றி, உற்று உற்றுப் பார்த்தவள், மரமாய் அது பூத்துக் குலுங்கியதும் அவள் பட்ட பாட்டையெல்லாம் மறந்துதான் போனாள்.


கிழவியின் பேச்சும், மூச்சும் மாமரம்தான். அவள் வீட்டிலிருந்து இருபதடி தூரத்தில்தான் மாமரம் இருந்தது. பொழுது விடிந்ததும் மரத்தை தேடி வருவாள். முதல் வேலையாக சருகுகளை கூட்டி அள்ளி சுத்தம் செய்வாள். காலை உணவும் மாமரத்தடியில்தான். மாமர நிழலில் நார்க்கட்டிலில் படுத்தால் போதும் அப்படியே சொக்கிப்போவாள். கிழவியும், மரமும் எப்போதும் சேர்ந்தே இருப்பார்கள்.


கிழவி நடத்தி வந்த சாப்பாட்டுக்கடை ஒன்றுக்கே இருவரையும் பிரிக்கும் சக்தி உண்டு. காலையில் அவள் சுடச்சுட அவிக்கும் மல்லிப்பூ இட்லிக்கும், பொட்டுக்கடலை சட்னிக்கும் அடிமையான கூட்டங்கள் பல உண்டு. கிழவி தன் வீட்டின் முன்புற கூடத்தை மெஸ் ஆக மாற்றியிருந்தாள். நாற்காலி, மேசை எதுவும் கிடையாது. குண்டும், குழியுமான கட்டாந்தரையில் அமர்ந்து அவள் கைப்பக்குவத்தை ருசித்தால் போதும், ஸ்டார் ஹோட்டல் தோற்றுப் போய்விடும்.


பதினோரு மணிக்கெல்லாம் கடை சாத்திவிடுவாள். மறுபடியும் மறுநாள் காலைதான். ஆப்பம், பணியாரம் என பதார்த்தங்களை, சாப்பிட அடுத்த நாள் கூட்டம் கூடிவிடும். மாமரமும் நார்க்கட்டிலும்தான் அவள் சொர்க்கம். காற்றடிக்கும்போது மரத்தின் இலைகள் அசைவதைப் பார்த்தால் போதும் உற்சாகத்தில் பாட்டு கட்ட ஆரம்பித்துவிடுவாள்.


மழை வெறித்திருந்தது. கிழவியின் மரத்தருகே வந்ததும் கால் டாக்ஸியின் டயர் கிறீச்சிட்டது. வண்டி நகராமல் அடம்பிடித்தது. உள்ளே இருந்து நான்கு இளசுகள் இறங்கினர். அவர்கள் கல்லூரி மாணவர்கள். இதில் சுகந்தியும், வெங்கட்டும் காதலர்கள், திருமணம் செய்ய முடிவெடுத்து கிளம்பிவிட்டார்கள். துணைக்கு நண்பர்கள் நவீன், ரூபா இருவரும் உடன் வந்திருந்தனர். இருட்டும், மழையும் பயமுறுத்தியபோது அவர்களின் கண்களுக்கு எதிரே தெரிந்தது செங்கமலக்கிழவியின் கூரை வீடு. அவள் திண்ணையில் ஒருக்களித்து படுத்து குளிரில் நடுங்கியவாறு மாமரத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.


கிழவியின் வீட்டை நெருங்கினர். வண்டி பழுதடைந்த காரணத்தைச் சொல்லி அவள் வீட்டில் தங்க இடம் கேட்டனர். கிழவியும் பெரிய மனதுடன் சம்மதித்தாள். இதற்குள் டிரைவர் வந்து “விடிந்ததும் மெக்கானிக்கை அழைத்து வந்துதான் ரிப்பேர் பார்க்கணும். நாளை மாலைவரை ஆகும்” என்று சொல்லிவிட்டு காருக்குள் சென்று படுத்துக்கொண்டார்.


நால்வரும் கிழவியின் வீட்டுக்குள் படுத்துக் கொண்டனர். பொழுது விடிந்தது. தூக்கம் வராமல் சுகந்தியும், வெங்கட்டும் விடிகாலையிலையே எழுந்துவிட்டனர். கிழவி வழக்கம் போல மாமரத்தடியை சுத்தம் செய்துவிட்டு வந்தாள். ஆப்பக்கடை சூடு பிடித்தது. கூட்டம் குறைந்தபின் நால்வரும் பேருக்கு ஆப்பத்தை சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்து உட்கார்ந்தனர். அப்போது கிழவி மாமரத்திடம் ஏதோ பேசிக்கொண்டிருப்பது போல் தெரிந்தது. திரும்பி வந்த கிழவி ரசம், பாகற்காய் வைத்து சோறாக்கினாள். வேண்டாமென்று மறுத்த பிள்ளைகளை கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தாள். மதிய ஓய்வுக்குப்பின், மாலையில் மரத்தடியில் கட்டிலைப் போட்டு அமர்ந்துவிட்டாள். நால்வரும் அவளருகில் வந்தனர். கிழவி மரத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்த ரூபா, “இந்த மரம் உண்மையிலேயே பேசுமா பாட்டி?” என்று கேட்டாள்.


“அது வெறும் மரம் இல்ல கண்ணு, என் மவராசன்”.


நால்வரும் ஆச்சரியமாக பார்த்தனர்..


“ஒரு நாள் சந்தையில என் மாமன் பங்கனப்பள்ளி மாம்பழம் வாங்கியாந்துச்சு. சாப்புட்டு போட்டு கொட்டைய நட்டு வச்சு தெனைக்கும் கருத்தா அதை கவனிச்சுகிட்டே இருந்துச்சு. மாஞ்செடி பச்சைப்பசேல்னு தழுத்து வந்ததும் என் மாமனுக்கு அம்புட்டு சந்தோசம். அது வேலைக்குப் போன பெறவு நாந்தான் மாஞ்செடிய பார்த்துக்கிருவேன். மாமன் சாயங்காலம் வந்ததும் மொதசோலியா மாஞ்செடி எப்படி இருக்குன்னுதான் பாக்கும்”.


“மாமன்னா யாரு?” அதுவரை அமைதியிருந்த சுகந்தி கேட்டாள். “வேற யாரு, என் தாய்மாமன்தேன். என் ஆத்தாவுக்கு தம்பி. ஆனா என்னைவிட ஏழேட்டு வயசு மூப்பு. சின்ன வயசுலயே என் அப்பாரு போய் சேர்ந்துட்டாரு. ஆத்தாதான் என்னையும், மாமனையும் வளத்துச்சு” என்று கூறிய கிழவி கொஞ்சம் பெருமூச்சு விட்டாள்.


”இப்போ உங்க மாமா எங்க பாட்டி?” நவீன் கேட்டான்


“.அது ஒரு பெரிய்ய கதை……...வளர வளர ரெண்டு பேரும் ஒருத்தரு மேல ஒருத்தரு ஆசைப்பட்டோம். நானும், மாமனும் சேர்ந்து சுத்தாத வாய்க்கா, வரப்பு கிடையாது. சந்தைக்கு வண்டி கட்டி போவோம். நான் கேக்குறதெல்லாம் என் மாமன் வாங்கித்தரும். மாமரத்தில காய்க்கிற முதல் பழத்தை தன் கையால பறிச்சு எனக்கு குடுப்பேன்னு மாமன் சொல்லிச்சு. மாமன் நல்ல செவப்பா, உசரமா இருக்கும். அது சிரிச்சா பாத்துக்கிட்டே இருக்கலாம் தாயி”. சுகந்தி கண்கள் விரிய ஆச்சரியமாய் கேட்டுக் கொண்டிருந்தாள்.


. திடீர்னு எங்காத்தாவுக்கு ஒடம்பு சரியில்லாம போச்சு. செத்துப் போயிடுவோம்னு பயந்து எங்களுக்கு தைமாசத்தில கண்ணாலத்துக்கு நாள் குறிச்சிருச்சு. நானும் கனாக் கண்டுகிட்டு இருந்தேன். அப்போதான்…….” என்று இழுத்தாள்.


“என்னாச்சு பாட்டி?” வெங்கட் கேட்டான்.


“என் மாமனுக்கு பட்டாளத்துல வேலை கெடைச்சுருக்குன்னு தபால் வந்துருச்சு. அதுக்கு பட்டாள வேலைன்னா ரொம்ப இஷ்டம். பாவிமக நாந்தேன் மனசைத் தேத்திக்கிட்டு மாமனை கட்டாயப்படுத்தி வேலைக்கு அனுப்பி வச்சேன்.. ரெயிலேறும் போது கூட “எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வந்து உன்னைக் கண்ணாலம் பண்ணிக்கிடுவேன். பத்திரமா இரு புள்ளன்னு சொல்லி கைகாட்டிகிட்டே போச்சு”. சொல்லும் போதே கிழவியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துவிட்டது.


“. ஒரு நா சண்டையில மாமன் மேல குண்டு பாஞ்சு …… உசிரு போச்சுதுன்னு சொல்லி, கம்பீரமா ராசா மாதிரி போன என் மாமனை பொணமா கொண்டு வந்து போட்டாக.


மாமன் போன பெறவு இருந்து என்ன செய்ய? செத்துரலாம்னு நெனைச்சேன். நோவுல கெடக்குற ஆத்தா அனாதையாயிருமே? மாமன் பொணமா வந்த அன்னிக்குத்தான் இந்த மரத்துல மொத மாம்பழம் பழுத்துச்சு.


மாமன் நெனப்பு வரும்போதெல்லாம் இங்கன வந்திருவேன். இந்த மரத்தை பார்க்கும்போது மாமனையே பாக்குற மாதிரி இருக்கும். காத்துல மரம் அசையும் போது மாமன் சிரிக்கிற மாதிரியே இருக்கும். அப்படியே கிறங்கிப்போய் கெடப்பேன்.


கூடப்பொறந்தவன் போன கவலையிலேயே ஆத்தாவும் செத்துப்போச்சு. மாமன் வச்ச மரத்தை அனாதையா விட்டுட்டு சாக விருப்பம் இல்ல. என் மாமன் மனசு கஷ்டப்படுமில்ல. அதான் இட்லிகடை அது இதுன்னு ஏதோ வேலை செஞ்சு என் பொழப்பை ஓட்டுறேன். சாயங்காலம் ஆனா மரத்தடிக்கு வந்துருவேன். இங்க இருந்தா என் மாமன்கூட இருக்கிற மாதிரியே இருக்கும் என்று கிழவி சொல்லி முடித்தாள்.


சுகந்தி தயங்கியபடியே கேட்டாள், “அப்போ நீங்க வேற கல்யாணமே பண்ணிக்கலையா பாட்டி?”.


“என்ன தாயி இப்படி கேட்டுபுட்ட”. என் மாமனை நெனச்ச உசுரு இன்னொருத்தரை நெனைக்குமா கண்ணு?. ஆணோ, பொண்ணோ ஆசைப்பட்டவுகளை உசுருல சொமக்கணும் தாயி. நான்போயி என் மாமன் உசுரோட இருந்தாலும் அதுவும் இன்னிக்கு தனிக்கட்டையாத்தேன் நிக்கும். இந்த மரத்துல இத்தனை காய் காய்ச்சு தொங்குதே, ஊர்க்காரவுக எல்லாரும் சாப்பிட்டு சொல்லுவாக அம்புட்டு ருசி, இம்புட்டு ருசின்னு. ஆனா எனக்குத் தெரியாது. மொதப்பழம் பறிச்சுத் தாரேன்னு சொன்ன மாமனே உசுரோட இல்லயே, அந்தப் பழம் எனக்கு மட்டும் எதுக்குன்னு இதுநா வரைக்கும் ஒத்தைப் பழத்தைக்கூட நான் சாப்பிட்டதில்ல தாயி. இது மத்தவுகளுக்கு வெறும் மரம். ஆனா எனக்கு இது என் மவராசன்தான். அவுக உசுரு இதுக்குள்ளதான் இருக்கு. அந்த நெனப்புலதான் என் உசுரு உடம்புல தங்கிட்டு இருக்கு கண்ணுகளா. கிழவி கண்ணீர் மல்க கூறிய வார்த்தைகள் நான்கு பேரின் மனதையும் கலங்கடித்துவிட்டது. அதற்குள் இருட்டி விட்டது. டிரைவரும் வந்து விட்டார்.


கிழவி ஒருவாறு தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு சொன்னாள், “விடிஞ்சதும் ஊருக்குப் போங்க. வூட்டுக்குப் போய் படுத்துக்கோங்க”.


“நீங்க வரலையா பாட்டி?” என்றார்கள் பிள்ளைகள்.


“கொஞ்ச நேரம் என் ஐயாவோட பேசிகிட்டு இருந்துட்டு வாரேன் தங்கங்களா. நீங்க போங்க” என்றாள். சரி என்று அவர்களும் கிளம்பிச் சென்றனர்.


செங்கமலக்கிழவிக்கு உறக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள். மரத்தை அண்ணாந்து பார்த்தாள். பழைய கதைகளைப் பேசியதாலோ என்னவோ மனம் பாரமாக இருந்தது. நீண்ட நேரம் கண்ணீர் வடித்தாள். அப்படியும் தூக்கம் வரவில்லை. எழுந்து மரத்தடியில அமர்ந்து மரத்தில் சாய்ந்து கொண்டாள். சிறிது நேரத்திலேயே உறங்கி விட்டாள்.


கிழவியின் வீட்டுக்குள் சுகந்தி கூறினாள். “அந்த பாட்டியோட கம்பேர் பண்றப்போ நம்ம லவ்வெல்லாம் ஒண்ணுமே இல்லன்னு தோணுது. உண்மையான காதல்னா என்னன்னு இப்போதான் புரிஞ்சுக்கிட்டேன், வெங்கட்”.


“உண்மைதான் சுகந்தி. நாம அவசரப்பட்டுட்டோம். நான் படிப்பை முடிச்சுட்டு நல்ல வேலை தேடிக்கிறேன். அப்புறம் உங்க அப்பாகிட்ட வந்து பேசுறேன்”


“யெஸ். நானும் என்னைப் படிக்க வச்ச அம்மா, அப்பாவுக்கு ஏதாவது திருப்பி செய்யணும்”, வெங்கட். நாம பொறுமையா இருப்போம். இப்போ ஹாஸ்டலுக்கு போயிடுவோமா?”.


“ஷ்யுர். கண்டிப்பா போயிடுவோம்” என்றார்கள் நவீனும், ரூபாவும்.


அப்போதுதான் பாட்டி இன்னும் வரவில்லை என்ற நினைவு வந்தது. பாட்டியை அழைத்து வர நாலுபேரும் மரத்தடிக்கு வந்தார்கள். கிழவி நல்ல தூக்கத்திலிருந்தாள். சுகந்தி பாட்டி என்று கூப்பிட்டாள். பதில் இல்லை. வெங்கட் கிழவியின் தோளில் கைவைத்தான். கிழவி சரிந்தாள்.  அனைவரும் அழ ஆரம்பித்தனர். அழுகைக்கு நடுவில் சுகந்தி அவளின் சடலத்தைப் பார்த்தாள். “ஆசைப்பட்டவுகளை உசுருல சொமக்கணும் தாயி” என்ற அவளின் வார்த்தைகள் இப்போது வானில் ஒலிப்பது போல் தெரிந்தது. ஆம். செங்கமலக்கிழவி காற்றோடு காற்றாய் கலந்து விட்டாள். காற்றில் கலந்திருக்கும் மாமனைச் சேர உடலை விட்டு புறப்பட்டு விட்டாள். காதலின் மகத்துவத்தை உணர்த்தியவள் மண்ணில் சாய்ந்ததைக் கண்டு சுகந்தி மண்டியிட்டு கதற ஆரம்பித்திருந்தாள்.


--- இரா. சைலஜா சக்தி

No comments:

Post a Comment

.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}