Monday 28 December 2015

தலைமறைவாகும் நிர்பயாக்கள் (கவிதை)

தலைமறைவாகும் நிர்பயாக்கள்







பெண்
இந்த இரண்டெழுத்து வார்த்தை
இவளின் அடையாளம்

நிர்பயா
இந்த நான்கெழுத்து வார்த்தை
இவளின் அவலம்

புரிய வைக்கிறாள்
தானொரு குழந்தையென
தன் கடைசிக் கடிதத்தில்

கேட்கும் சப்தமெல்லாம்
பேருந்தின் ஓசையென ஓலமிடுகிறாள்

மிருகங்கள் கடித்துக் குதறியதாய் சொல்லி
உடல் கழுவ நீர் கேட்கிறாள்

அறைக்குள் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு
ஆணைக் கண்டும் அலறுகிறாள்

விடைபெற்று விட்டாள்
நிரந்தரமாய் நம்மிடமிருந்து

தண்டிக்கப்பட்டுவிட்டார்கள்
குற்றவாளிகள்

ஒரு சந்தேகம்

ஓடுகிற பேருந்தில் வேட்டையாடிய
மிருகங்கள் மட்டும்தான் குற்றவாளிகளா?

தேசிய பானமாகிவிட்ட மது
உள்ளே சென்றதும்
வெளியே தள்ளுகிறது
மனித மிருகத்தை
  
மீசை அரும்பும் முன்
அவன் ஆசைக்குள் போதையூற்றும்
இந்த மதுச்சமூகம்
முதல் குற்றவாளி

நாயகனின் இலக்கணம்
மதுவில் குளித்து
மங்கையில் திளைப்பதென
பாடம் நடத்தும் படைப்புகள்
இரண்டாம் குற்றவாளிகள்

உடல் அறிவியல் தெரியாமல்
ஆண் பலவீனம் புரியாமல்
அரைகுறை ஆடை
பெண்ணுரிமை எனப் பிதற்றும்
பெண் கூட்டம்
மூன்றாம் குற்றவாளிகள்

அங்கம் காட்டி
ஆணை மிருகமாக்குகிற
பெண்னே நீ தப்பித்துக் கொள்கிறாய்

நீ வெறியேற்றி அனுப்புகிற
அவன் கையில்
சிக்கி சின்னாபின்னமாவதோ
அப்பாவி நிர்பயாக்கள்தான்

நிர்பயாக்கள் பலியாவது
வக்கிர ஆண்களால்
ஆனால்
நிர்பயாக்கள் உருவாவது
பொறுப்பற்ற சமூகத்தால்

சமூகக் கடமை
ஆணுக்கு மட்டுமல்ல
சரிநிகர் சமானம் பேசும்
பெண்ணுக்கும்தான்

ஆகவே
சமூகம் தன்னைத்
திருத்திக் கொள்ளும்வரை
தலைமறைவாய் வாழுங்கள்
நிர்பயாக்களே!....
தப்பிப்பதற்காக……


   --- இரா. சைலஜா சக்தி.

Wednesday 9 December 2015

மனிதம் என்ன விலை? (கவிதை)



                       னிதம் என்ன விலை?




ஒரு லிட்டர் பால்
ஒன்பது மடங்கு விலை உயர்வில்

குடிக்கிற தண்ணீரில்
கூடுமானவரை லாபம்

ஓட்டுக்காக ஓடிவந்து
தானமளிக்கும் கரை வேட்டிகள்

உன் தவறு! என் தவறு! என
அடித்துக் கொள்ளும் கட்சிகள்

ஏரிகளில் வீடு கட்டியது
யார் குற்றமென பஞ்சாயத்து

அனுமதியளித்தது அரசின் தவறாம்
இல்லை இல்லை
வீடுகட்டி விற்றவர் தவறாம்
இல்லை இல்லை
வாங்கிக் குடியேறியவர் தவறாம்

பஞ்சாயத்து முடிந்தபாடில்லை
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த
வானம் பொங்கியெழுந்து விட்டது

அந்நியன் ஸ்டைலில் அனைவருக்கும்
கருட புராணத் தண்டனை
விதிவிலக்கின்றி!...
ஆர்ப்பாட்டத்தின் முடிவில்
அடையாளம் காட்டியது மழை
அன்பான உள்ளங்களை

பேரழிவில் கூட
ஆதாயத்திற்கு அலையும் மனிதர்களே
மிச்சமிருப்பது பூமி மட்டும்தான்

பூமி தன் பொறுமை மீறுவதற்குள்
பொருள் தேடுங்கள் தமிழகராதியில்
மனிதம் என்ற வார்த்தைக்கு.
                 இரா. சைலஜா சக்தி

Wednesday 2 December 2015

இயற்கையே கோபமா? (கவிதை)

 
                            இயற்கையே கோபமா?




மழையே என்ன கோபம் உனக்கு?

மக்களை மிதக்க வைக்கிறாய்.
ஆற்றங்கரைகளில் மணற்கொள்ளை செய்ததாலா?

வீடுகளை ஆக்கிரமிக்கிறாய்.
ஏரிகளை நாங்கள் ஆக்கிரமித்ததாலா?

உணவுக்காக தவிக்க வைக்கிறாய்.
பாலித்தீன் குப்பைகளை பூமிக்கு உணவளித்ததாலா?

நீருக்காக ஏங்க வைக்கிறாய்.
நிலத்தடி நீர்மட்டத்தை உறிஞ்சுவதாலா?

வாகனங்களை மூழ்கடிக்கிறாய்.
புகை கக்கி உன் வானப்பரப்பை பாழ்படுத்துவதாலா?

மின்சாரத்தை துண்டிக்கிறாய்.
குளிரூட்டும் ஏ.சிகள் ஓசோனை ஓட்டை போடுவதாலா?

வீடுகளை அழிக்கிறாய்.
நாங்கள் காடுகளை அழித்ததாலா?

மொத்தத்தில் பூமியை உனக்குள் அமிழ்த்துகிறாய்.
நாங்கள் பூமியை வெப்பமயமாக்கியதாலா?

நீ வற்றினால் மனித இனம் வற்றும்…
நீ முற்றினால் மனித இனம் அழியும்…


புரிந்து கொள்ள வேண்டியது
நீ அல்ல…. மனிதர்கள்தான்…

இயற்கை மனிதன் வாழ தன்னையே தாரை வார்க்கும்.
எல்லை மீறும் மனிதனை தனக்குள் தாரை வார்க்கும்…..

மனிதனே!... பூமி காத்து உன் சந்ததி காப்பாயா?
அல்லது பூமி சிதைத்து உன் வேரறுப்பாயா?

உன் பதிலை எதிர்பார்ப்பது…. நானல்ல….
பழிவாங்க காத்திருக்கும்
உன்னால் பாதிக்கப்பட்ட இயற்கை.

                       -இரா. சைலஜா சக்தி

Friday 27 November 2015

ஷீரடி மண்ணில் புனித பயணம்



     ஷீரடி - மகான் பாபாவின் புண்ணிய பூமி. பாபாவின் பாதம் பதிந்திட்ட பெருமை பெற்ற புனித பூமி. பாபாவின் மகிமையை அனுபவித்து உணர்ந்த அவர்தம் பக்தர்களுக்கு ஷீரடி பயணம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மீகப் பயணமாகும்.

        ஒரு முறை ஷீரடியில் பாதம் பதித்தால் மறுமுறை நம்மை அழைக்கும் திவ்ய பூமி. 

  சென்னை விமான நிலையத்தில் சோதனைகளை முடித்துவிட்டு விமானத்திற்காக காத்திருந்தோம். சரியாக 8.15 மணிக்கு ஏர் இண்டிகோ விமானம் எங்களை ஏற்றிக்கொண்டது. உள்ளே தீட்டிய புருவங்களும், லிப்ஸ்டிக் நிரம்பிய உதடுகளுமாய் ஏர்ஹோஸ்டஸ் பணிப்பெண்கள் விமானப் பயணத்திற்கான பாதுகாப்புக் குறிப்புகளை எடுத்துக் கூறினர். 

     விமானம் எங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு ரன்வேயிலிருந்து கிளம்ப ஆரம்பித்திருந்தது. விமானம் ரன்வேயில் படிப்படியாக வேகத்தைக் கூட்டி மேலே எழும்புவதை ஜன்னல் வழியாகப் பார்த்தேன். ஏதோ வீர சாகசம் புரிந்துவிட்ட திருப்தியில் திரும்பினேன்.

      உள்ளே ஏர்ஹோஸ்டஸ் திடீரென்று விமானம் விபத்துக்குள்ளானால் எப்படி தப்பிப்பது என்று பாடம் நடத்திக் கொண்டிருந்தாள். வயிறு பத்து கிலோ புளியைக் கரைத்தது. கடவுளே!!!!..... என்று முனகிவிட்டு அப்போதுதான் பாடம் நடத்திய பெண்ணை உற்று கவனித்தேன். அவளது பாப் தலை கருகருவென்று காட்சியளித்தது. அவள் முடியைக் கவனித்ததில் அவள் சொன்ன அறிவுரைகள் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டேன். பயம் போயே….. போச்சு……

      விமானம் மேகங்களுக்கு நடுவே பயணிக்க ஆரம்பித்தது. அழகழகான விமான பணிப்பெண்கள் அவ்வப்போது தலைகாட்டி, உதடு சிரித்து குசலம் விசாரித்தனர். விமானம் முப்பதாயிரம் அடி உயரத்தில் பறப்பதாக அறிவிக்கப்பட்டது. அது ஒரு அதிசயமான ஆனந்த அனுபவம். மேகங்களைத் தொட்டு சிலிர்க்கப் போவது போன்ற பூரிப்பு. மொத்தத்தில் இனிமையான விமானப் பயணமாக இருந்தது.

   சரியாக ஒன்றரை மணி நேரத்தில் புனே விமான நிலையத்தை வந்தடைந்தது ஏர் இண்டிகோ விமானம். பைலட் முகத்திலும் அதே மாறாத புன்னகை. பத்திரமாக கொண்டு வந்து இறக்கிவிட்ட அவருக்கு மனதில் நன்றி சொல்லிவிட்டு இறங்கினோம். 

       புனே - பாபாவை நெருங்கிவிட்டோம் என்ற உணர்வை எங்களுக்குத் தந்தது. புனே விமான நிலையத்திலிருந்து கார் மூலம் ஷீரடி நோக்கி புறப்பட்டோம். பசி வயிற்றைக் கிள்ளியது. சப்பாத்தி தேசத்தில் தோசை தேடி அலைந்தோம். சிறுகுடல் பெருங்குடலை விழுங்கத் தயாரானபோது தோசை தந்து ரட்சித்தது ஷிக்ராபூர் ஹோட்டல். தோசையை உள்ளே தள்ளியவுடன் ஒரு வழியாய் வயிறு அமைதியடைந்தது. 

Mahaganapathi at Ranjangaon

       முதலில் ரஞ்சன்கான் என்ற கிராமத்தை அடைந்தோம். இங்கு அஷ்ட விநாயகர் கோவில்களில் ஒன்றான மகாகணபதி ஆலயம் உள்ளது. வரிசையில் அரை மணி நேரம் நின்றிருப்போம். உள்ளே பெரிய பெரிய உண்டியல்கள். அழகான வேலைப்பாடுகள் உள்ள வெள்ளி மற்றும் வெண்கலத்தாலான பெரிய யானை சிலைகள் அணிவகுத்திருந்தன. விநாயகர் நமது விநாயகரிலிருந்து மாறுபட்டிருக்கிறார். சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். நிதானமாக அவர் முன்பு விழுந்து வழிபடவும், அமரவும் அனுமதிக்கின்றனர். 

Silver Elephant Statue

           பிரசாதத்துடன் வெளியே வந்தபோது மனதில் அமைதி தவழ்வதை உணர முடிந்தது. பிரதான வாயிலில் இரண்டு பிரம்மாண்ட யானை சிலைகள் எங்களை வழியனுப்பின. கருப்பு உடலும், சிவப்பு வண்ண அலங்காரங்களுமாக காட்சியளித்த கல் யானைகளின் கலை வேலைப்பாடுகள் பிரமிக்க வைத்தது. பிறகென்ன வளைத்து வளைத்து போட்டோ எடுத்துக் கொண்டோம்.

Ashta Vinayagar Temple Entrance
Large Elephant Statue

        அஷ்ட விநாயகர் கோவிலில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் எங்களை வரவேற்றது சனிசிக்னாபூர். இங்கு முற்காலத்தில் வீடுகளுக்கு கதவுகள் இருந்திருக்கவில்லை. அதாவது திருட்டு பயமே இல்லை. எனவே கதவுகளுக்கான அவசியமும் அவர்களுக்கு இருக்கவில்லை. இது சனி பகவானின் அருளாக கருதப்படுகிறது. கால மாற்றத்தில் இப்போது கட்டப்படும் வீடுகள் மட்டுமே கதவுகளுடன் அமைக்கப்படுகின்றது. இரண்டு விதமான வீடுகளையும் பார்த்துக்கொண்டே சென்றோம். 

Shaneeshwar Temple
           சனிசிக்னாபூரில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சனைஷ்வரர் கோவில். இங்கு மூலவர் சனீஸ்வரர். கருங்கல்லில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். இருபுறமும் கடைவீதிகள். ஜே ஜே என்று கூட்டம். நம்மூர் திருநள்ளாறு போன்று இவர்களுக்கு இந்த சனைஷ்வரர் கோவில் என்பதை தெரிவித்தது அங்கிருந்த மக்கள் வெள்ளம். தீவிர கண்காணிப்பில் ஆண்களும், பெண்களும் தனித்தனி வரிசைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் தாம் வாங்கிச் சென்ற எண்ணெயை துளைகளுடன் கூடிய தொட்டியில் ஊற்றுகிறார்கள். எண்ணெய் துளைகள் வழியே கீழிறங்கி குழாய்கள் வழியாக வந்து நேரே சனீஸ்வரர் சிரசின் மீது விழுந்து கொண்டேயிருக்கிறது. 

Lord Shaneeshwar
            சனீஸ்வரரை தரிசித்து விட்டு வெளியே வந்தோம். சுற்றிலும் நம்மை நெருங்கி வரவேற்றார்கள் யாசகர்கள். அவர்கள் பன்மொழித் திறமையுடன் முடிந்தவரை நம்மைப் பின்தொடர்கிறார்கள். ஒருவழியாக காரில் ஏறினோம். மதியமாகிவிட்டதை நினைவுபடுத்தியது வயிறு. ரொட்டியும், நாணும் எங்கள் பசியைப் போக்கின. மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம். 

         ஒரு மணி நேரத்தில் கார் ஷீரடியைத் தொட்டது. பாபா வாழ்ந்த பூமி எங்களை மழையுடன் வரவேற்றது. மனதெங்கும் பரவசம் ததும்பி வழிந்தது. சுமார் 20 ஏக்கர் பரப்பில் பக்தர்களுக்கென அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட ”சாய் பக்தநிவாஸ்” தங்கும் விடுதிக்கு சென்றோம். வியாபார நோக்கில்லாமல் பக்தர்களுக்காக நடத்தப்படும் இந்த விடுதி குறைவான கட்டணத்தில் மிகத் தரமான நவீன வசதிகளோடு அமைந்துள்ளது. குறைந்த விலையில் பக்தர்களுக்கு உணவையும் விநியோகம் செய்கிறது.

Sri Sai Bhaktaniwas

          மழை சற்று ஓய்வெடுத்தது. நாங்களும் நிம்மதியாக பாபாவின் ஆலயம் நோக்கி விரைந்தோம். ஷீரடி – பாபா எத்தனையோ அற்புதங்களை தினம் தினம் நிகழ்த்திய பூமி அல்லவா? பாபாவை தரிசிக்கும் ஆர்வத்தில் ஆலயத்திற்குள் நுழைந்தோம். 

Sai Temple Entrance
          நீண்ட வரிசை என்றாலும் நிற்காமல் நகர்ந்து கொண்டிருந்தது மிகப்பெரிய சந்தோஷம். குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள், கர்ப்பிணிகள் என அனைவரும் வயது வித்தியாசமின்றி பாபாவை தரிசிக்க உற்சாகத்துடன் நகர்ந்து சென்று கொண்டிருந்தனர். ஆரத்தி துவங்கியது. ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பெரிய மானிட்டர்கள் பாபாவின் ஆரத்தியை ஒளிபரப்பின. பக்தர்கள் அதைப் பார்த்தபடியே வரிசையில் சென்று கொண்டிருந்தார்கள். 

                                      

              சிலர் பாபாவின் நாமங்களை ஜெபித்துக் கொண்டே சென்றார்கள். வரிசை ஒவ்வொரு அறையாக கடந்தது. பாபாவை நெருங்கும் தருணத்தில் ஓரிடத்தில் அனைவருக்கும் தலா ஒரு பூந்தி பாக்கெட் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதோ பாபாவை நெருங்கிவிட்டோம். சற்று தொலைவில் பாபா தெரிகிறார். நெருங்க, நெருங்க பெரிய கோவில்களுக்கே உரிய நடைமுறை. இரண்டு பக்கத்திலிருந்தும் வருபவர்களை ஒன்றாக உள்ளே தள்ளும் முறை. இதுவரை ஆனந்தமாக வந்த எங்களுக்கு சிறிய அதிர்ச்சி. மக்கள் வெள்ளத்தில் மிதந்தே பாபாவை அடைந்தோம். நல்லவேளையாக பாபாவின் அருகே வந்தவுடன் மீண்டும் அதே அமைதி. அதே நிதானம். ஒருவர் பின் ஒருவராக அனுமதிக்கப்பட்டோம். 

Sri Sai Baba
            நிதானமாக பாபாவை அருகில் தரிசிக்கும் வாய்ப்பு தரப்பட்டது. கண் குளிர தரிசித்தோம். பட்டாடை பளபளக்க, மலர் மாலைகளுடன் தெய்வீகப் புன்னகை சிந்தும் பாபாவை மிக அருகில் பார்த்தவுடன் கண்கள் கலங்கின. ஒருவாறு நெகிழ்ச்சியை அடக்கியவாறே பாபாவின் பாதங்களை கண்ணீர் மல்க வணங்கினோம். மலர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. 

       பாபாவின் அருகில் நின்ற ஒவ்வொரு நிமிடமும் வாழ்வில் மறக்க முடியாதது. இனம் புரியாத பரவசம் ஆன்மாவை, உடலை ஊடுருவிய கணம் அது. நினைக்குந்தோறும் உள்ளத்தில் நன்றி பெருக்கெடுக்கும் தருணமும் அதுவே. ஆம், தூரங்கள் பல கடந்து அவரை தரிசிக்க வந்த எங்களுக்கு அவர் அருகில் நிதானமாக நின்று அவர் அழகைக் கண்ணாரக் கண்டு உளமாற மகிழ வைத்த நிமிடம் அது. நன்றி பாபா!!!.

           சந்தோஷமாக வெளியே வந்தோம். அன்றைய இரவு உணவு ஆலயத்தின் அருகிலேயே நாங்கள் விரும்பிய தென்னிந்திய உணவாய் அமைந்தது. மனமார, வயிறார உண்டோம். பாபாவை தரிசித்த மகிழ்ச்சியில் விடுதிக்குத் திரும்பினோம். இரவு நிம்மதியான உறக்கம். 

           மறுநாள் காலையில் துவாரகாமாயியை அடைந்தோம். “துவாரகாமாயி”, பாபா 60 வருடங்களுக்கும் மேலாக தங்கிய மசூதியாகும். துவாரகாமாயிக்குள் பாபா ஏற்படுத்திய “துனி” என்னும் புனித நெருப்பு அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. துனியை தொட்டு வணங்கும் வாய்ப்பு கிடைத்தது. பாபா தங்கியிருந்த புனித துவாரகாமாயிக்குள் செல்லும் பாக்கியம் கிடைத்ததற்கு நன்றி கூறி வணங்கினோம். 

                             
Dwarakamai Entrance
 
                        
Holy Fire - Dhuni

             பாபா தனது கடைசி பத்தாண்டுகளில் இரவு நேரங்களில் ஓய்வெடுத்த இடம் “சாவடி” எனப்படுகிறது.  அங்கு ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே சென்று வழிபட வசதி செய்துதரப்பட்டுள்ளது

Shree Chavadi
Holy Neem Tree
             பாபா அமர்ந்து அற்புதம் புரிந்த வேப்பமரத்தையும் வணங்கினோம். புனித சாம்பலான ”உதி” எங்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மிகுந்த மனநிறைவுடன் கடை வீதிகளில் ஷீரடி நினைவாக சில பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் விடுதி அடைந்தோம்.

                  மழை வெறித்து எங்கள் வழிபாட்டை மிகச் சுலபமாக்கியது. பாபாவின் அருளால் எங்கள் ஷீரடி பயணம் இனிமையான நினைவுகளைத் தந்தது. வார்த்தைகளால் விவரிக்க இயலாத பேரானந்தத்தோடு ஷீரடியிலிருந்து கிளம்பினோம் புனே விமான நிலையத்தை நோக்கி. 

                                                                      ”ஜெய் சாய்ராம்! ஜெய் சாய்ராம்”

Sunday 13 September 2015

பாகுபலி (திரை விமர்சனம்)

பாகுபலி


பாகுபலி இந்திய சினிமாவின் மிகப்பெரிய தலைநிமிர்வு. பல ஹாலிவுட் திரைப்படங்களுடன் ஒப்பிட்டு பாகுபலி, அவ்வளவு பெரிய சாதனை அல்ல என்று சுட்டிக்காட்டியவர்களுக்கு, இதோ சில விஷயங்கள்.
ஹாலிவுட் திரைப்படங்களுடன் இந்தியத் திரைப்படங்களை ஒப்பீடு செய்வது என்பது எத்துணை ஆரோக்கியமான விமர்சனமாக இருக்க முடியும் என்பதுதான் கேள்வி.
இந்தியத் திரைப்படங்கள் ஒரு குறிப்பிட்ட இலக்கணத்துடன் தயாரிக்கப்படுபவை. பலதரப்பட்ட மக்களையும் திருப்திப்படுத்தினால் மட்டுமே, இங்கு வெற்றி என்பது சாத்தியம். இதில் டெக்னாலஜியையும் பயன்படுத்தி, அடுத்தகட்ட வளர்ச்சியையும் நோக்கி திறமையாகப் பயணிக்கும் ஒரு இயக்குநரே தயாரிப்பாளரின் நம்பிக்கையாக இருக்க முடியும்.
அந்த வகையில் ராஜமவுலி, இந்திய சினிமாவை வேறொரு தளத்திற்கு லாவகமாக, மிகத்திறமையாக நகர்த்தியிருக்கிறார்.
டெக்னாலஜி இங்கு கிராபிக்ஸ்களாகத் தட்டுப்படவில்லை. காட்சிகளோடு, அவைகளின் ஓட்டங்களோடு பின்னிப்பிணைந்து பிரம்மாண்டத்தின் மிகப்பெரிய தூணாக மாறியிருக்கிறது.
கேமிரா (சினிமேட்டோகிராபி) கண்களுக்கு தரும் குளுமை உயிர்வரை உள்ளே சென்று சில்லிட வைக்கிறது. சில சமயங்களில் நாமும் அருவிக்கருகில் இருப்பது போன்ற குளிர்வான உணர்வைத் தருவது நமது கலைஞர்களின் அசாத்திய திறமை.
ஒப்பனைகள் (மேக்கப்) சரித்திர உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.பிரம்மாண்டமான அரண்மனை செட்கள், போர்க்களக் காட்சிகள் உட்பட அனைத்துமே இந்தியன், உலக சினிமாவோடு போட்டி போடத்தயாராகிவிட்டான் என்பதன் அறிவிப்பு.
சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் இருவரின் நடிப்பே அதிகம் சுட்டிக்காட்டப்பட்டது. அவர்கள் மட்டுமல்ல ஒவ்வொருவருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை மிக அழகாகச் செய்திருக்கிறார்கள்.
நட்சத்திர தேர்வே ஒரு இயக்குநரின் பாதி வெற்றி. அந்த வகையில் ராஜமவுலி முழு வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் தேர்ந்தெடுத்த பிரபாஸ், ராணா இருவருமே பாகுபலிக்கு உயர்ந்த கம்பீரத்தை வழங்கியிருக்கிறார்கள்.

குதிரையில் இரண்டு கைகளிலும் ஆயுதம் சுழற்றி பாகுபலி வரும் காட்சி, பாகுபலியின் பெயரைக் கேட்டதும் சோகங்கள் சந்தோஷங்களாகும் காட்சிமாற்றம், அருவியில் ஏறி விழும் பிரபாஸிடம் லாஜிக்கை யோசிக்க விடாமல், அடுத்த காட்சிக்கு நம்மை அழைத்துச் செல்லும் இயக்குநரின் சாமர்த்தியம், நீருக்கு மேல் குழந்தையைத் தூக்கிச் செல்லும் ரம்யாகிருஷ்ணனின் கை போன்ற வித்தியாசமான காட்சியமைப்பு, வண்ண வண்ண மலர்களின் மத்தியில் பிரபாஸ், தமன்னா பாடல் காட்சி, ராணாவின் பார்வையில் தெறிக்கும் வில்லத்தனம் என ரசிக்க வைக்கும், பிரம்மிக்க வைக்கும் காட்சிகள் ஏராளம்.
அக்கம்பக்கம் திரும்ப விடாமல் சீட்டின் நுனிக்கு நம்மைக் கொண்டு வந்து, நம்மையறியாமல் கைதட்ட வைத்து, முடிவையும் சொல்லாமல், வெற்றிக்கனியைத் தட்டியிருப்பதுதான் திரைக்கதையின் சுவாரஸ்யம்.
ஹாலிவுட் படங்களுடன் பாகுபலியை ஒப்பீடு செய்வது முற்றிலும் தவறு. கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டும் ஒரு தயாரிப்பாளரின் நலனை உத்தேசித்தே ஒரு இயக்குநர் செயல்பட முடியும். இந்திய மக்களின் ரசனை, எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய வேண்டிய நிர்பந்தமும் இயக்குநருக்கு மிக அதிகமாகவே உண்டு.
இரண்டையும் கருத்தில் கொண்டே பாகுபலி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்திய மண்ணின் தன்மை மாறாமல், அதன் உலகளாவிய வளர்ச்சியை நோக்கி பாகுபலி, முதல் அடி எடுத்து வைத்திருக்கிறது. எனவே பாகுபலி வெற்றிப்படம் மட்டுமல்ல, இந்தியனின் கவுரவமும் கூட. 
                                   ---இரா. சைலஜா சக்தி

Saturday 12 September 2015

பைலட்டின் பாற்கடல் கோபம் (கவிதை)


பைலட்டின் பாற்கடல் கோபம்
பல லட்சம் கோடி மைல்கள் என
வானின் தொலைவை பூகோளம்
விவரித்த ஞாபகம்
ஆனால் நானோ
மேகங்களின் மேல் அமர்ந்திருக்கிறேன்
நட்சத்திரங்களை அணைக்கத் துடிக்கிறேன்
நீலவானத்தை முத்தமிடுகிறேன்
இதோ புகை மண்டலத்தின் நடுவே
நாரதர் தம்புரா மீட்டுகிறார்
திருவிளையாடல் கைலாயத்தில்
ஞானப்பழத்திற்கு சண்டை நடக்கிறது
பாற்கடலில் பரந்தாமன்
பள்ளி கொண்டிருக்கிறார்
புகை நடுவே பிரம்மாவும்
சரஸ்வதியும் புன்னகைக்கின்றார்கள்
நானோ மெய் மறக்கிறேன்.
முப்பதாயிரம் அடி உயரத்தில்
பறக்கிறோம் என்று
புள்ளிவிவரம் கொடுத்தார் பைலட்
என் பக்தி பரவசம் புரியாமல்
நிமிடத்தில் கைலாய வைகுண்டங்கள்
காணாமல் போய்விட்டன.
நாரதரும் தலைமறைவாகிவிட்டார்
கற்பனைகள் உபயம்
ஏர் இண்டிகோ ஏர்லைன்ஸ்.

                    ---இரா. சைலஜா சக்தி

Friday 11 September 2015

திருக்கானப்பேர் என்னும் காளையார்கோவில்

திருக்கானப்பேர் என்னும் காளையார்கோவில்

            பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற பதினான்கு திருத்தலங்களில் முக்கியமான தலம் திருக்கானப்பேர் என்று அழைக்கப்படும் காளையார் கோவில்.
            சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாண்டிய நாட்டுத் திருத்தல யாத்திரையை முடித்து, பகவான் ரமண மகரிஷி பிறந்த ஊரான திருச்சுழியலில் (தற்போது திருச்சுழி) தங்கி இருந்தார்அப்பொழுது இரவில் அவர் கனவில் இறைவன் காளை வடிவு கொண்டு முடியில் பிறை தரித்து காட்சி தந்துயாம் இருப்பது கானப்பேர்என உணர்த்தினார்.
            இத்திருத்தலத்தில் லிங்க வடிவம் தாங்கி மூலமூர்த்திகளாக அருள்பாலிப்பவர்கள்
1)   ஶ்ரீ சோமேஸ்வரர்
2)   ஶ்ரீ ஸ்வர்ண காளீஸ்வரர்
3)   ஶ்ரீ சுந்தரேஸ்வரர்
திருக்கானப்பேரில் மூன்று லிங்கங்கள் ஒரே ஆலயத்தில் அமைந்திருப்பது மிகச் சிறப்பான அம்சமாகும்.


1) ஶ்ரீ சோமேஸ்வரர் - ஶ்ரீ சௌந்தரநாயகி

            இத்திருக்கோவிலில் உள்ள மூன்று சதாசிவ மூர்த்தங்களில் இவரே பெரிய தோற்றப் பொலிவோடு திகழ்பவர். பிரம்மா, குபேரன், சந்திரன் ஆகியோரால் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட சோமேஸ்வரர் ஸ்தாபகலிங்கம் ஆகும்சோமேசரின் ராஜகோபுரம் 18ம் நூற்றாண்டில் மருது சகோதரர்களால் கட்டப்பட்டதுஇதன் உயரம் 155½ அடி அகலம் 93 அடி
            ராஜகோபுரம் வழியாக உள்நுழையும் போது முதலில் அருள் பாலிப்பவர் ஶ்ரீசோமேஸ்வரர். சோமேசர் சன்னதிக்குள் நுழையும் முன் இடது பக்கத்தில் இந்திரனால் பூஜிக்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட சகஸ்ரலிங்கம் அமைந்துள்ளது.

            நந்திகேஸ்வரரையும், கொடிமரத்தையும் தாண்டி உள்ளே சென்றதும், பிரகாத்தில் சூரியன், தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், விநாயகர் இருவர், சுகந்தவனப்பெருமாள், விசுவநாதர், லிங்கோத்பவர், வீரபத்திரர், சப்தமாதர், கெஜலட்சுமி, சுப்பிரமணியர், பிரம்மா தனி சன்னதியுடன் நடராஜர், சண்டீஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், சந்திரன் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.
            சோமேசர் சன்னதிக்கு வலது பக்கம் அமைந்திருப்பது சௌந்தரநாயகி அம்மனின் சன்னதிகருவறை மண்டப திருச்சுவரினை இச்சா சக்தி, ஞான சக்தி மற்றும் கிரியா சக்திகள் அலங்கரிக்கிறார்கள். சோமசருக்கும், சௌந்திரநாயகிக்கும் உரிய தனி பள்ளியறை சன்னதி உண்டு.

2) ஸ்ரீ ஸ்வர்ண காளீஸ்வரர்ஸ்ரீ சொர்ணவல்லி

            உமாதேவிக்கு அருள்பாலிக்க இறைவன் தானே சுயம்புலிங்கமாக எழுந்தருளியவரே ஸ்ரீ சொர்ண காளீஸ்வரர். ஏழாம் நூற்றாண்டில் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் காளீஸ்வரருக்கு ராஜகோபுரம் கட்டப்பட்டது. இதன் உயரம் 90 அடி, அகலம் 57 அடி 8 அங்குலம்.    
            சௌந்தரநாயகி சன்னதிக்கு அடுத்து அமைந்து இருப்பது சொர்ணகாளீஸ்வரர் சன்னதி. இது இரண்டு பிரகாரத்துடன் கூடியது.

            கொடிமரம், நந்தீஸ்வரர் தாண்டி உள்ளே முதலில் அதிகார நந்தி, வல்லப கணபதி, நால்வர், அறுபத்து மூவர், பைரவர், சப்தமாதர், விநாயகர், சந்திரசேகரருக்கு தனி சன்னதி, பஞ்சலிங்கங்கள், அஷ்டலட்சுமிகள், தனி சன்னதியில், செந்தில் முருகன், அவரைத் தொடர்ந்து வருணனால் பூஜிக்கப்பட்ட வருணலிங்கம், தனி சன்னதியில் நடராஜர், அடுத்து பைரவர் என வெளிப்பிரகாரம் முடிவடைகிறது.
            உட்பிரகாரத்தில் விநாயகர் தொடங்கி பைரவர் முடிய எழுந்தருளியுள்ளனர்தட்சிணமூர்த்தி தனிச்சிறப்பு வாய்ந்தவர்லிங்கோத்பவர் கருவறை சுவற்றிலும் அதற்கு எதிரிலுமாக இருவர் உள்ளனர்
            கருவறை சுவற்றில் பிரம்மா, துர்க்கை, சண்டீஸ்வரர், சுப்பிரமணியர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர்முருகனுக்கும், சண்டீஸ்வரருக்கும் தனித்தனி சன்னதி உள்ளனசனீஸ்வரரும் அருள் புரிகிறார்.
            ஸ்வர்ணவல்லி அம்பாளுக்கு தனிச்சன்னதிசுவாமி, அம்பாள் இருவரின் கருவறையும் கருங்கல்லில் மிக நுட்பமான கலை வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளன.
            இங்குள்ள பள்ளியறை தங்கத்தினாலான ஊஞ்சலோடு கூடியது. தங்கத்தாலும், தந்தத்தாலும் ஆன இப் பொன்னூசல் மிகச் சிறப்பு வாய்ந்தது.

3) ஸ்ரீ சுந்தரேஸ்வரர் – ஸ்ரீ மீனாட்சி அம்மன்


            வேட்டைக்கு வந்த வரகுண பாண்டியன் இரவு வர, மதுரைக்குத் திரும்ப முடியாமல் தவித்ததால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அவருக்காக திருக்கானப்பேரில் வந்து காட்சி கொடுத்த அதிசயத்தை நினைவு கூறும் வண்ணம் எழுப்பப்பட்டது சுந்தரேஸ்வரர் மீனாட்சி கோவில் ஆகும்.
            மானுட லிங்கமான சுந்தரேஸ்வரர் காரணலிங்கமும் ஆவார்

காளீஸ்வரர் சன்னதிக்கும், சொர்ணவல்லி சன்னதிக்கும் இடையில் அமைந்திருப்பது சுந்தரேஸ்வரர் - மீனாட்சி திருக்கோவில்இங்கு பரிவார தேவதைகள், தனி சன்னதியில் நடராஜர், நவக்கிரகங்கள் அனைவரும் அருள் பாலிக்கின்றனர்
சுவாமி சன்னதியை நோக்கியவாறு பிரகாரச் சுவரில் வரகுண பாண்டியன் கூப்பிய கரங்களுடன் நிற்கிறார்

சந்திரசேகர மூர்த்தி

            ஈசனின் சிறப்பு மிகுந்த ஆறு திருமூர்த்தங்கள் திருக்கானப்பேர் சிவாலயத்தில் அமைந்துள்ளனர்அவற்றில் முக்கியமானவர் சந்திரசேகரர்.
தக்கனின் 27 பெண்களை சந்திரன் மணந்து கொண்டார். ஆனால் அவர்களில் கார்த்திகை, ரோகிணி இருவரிடம் மட்டுமே மிகுந்த அன்பு கொண்டார்இதனால் கோபம் கொண்ட தக்கன், சந்திரன் ஒவ்வொரு கலையாக தேயவும், சயரோகம் பற்றவும் சாபமிட்டார்
சந்திரன் சிவனை வணங்கியதால், அவரின் கலைகள் மீண்டும் வளர அருளியதோடு அவரது சயரோகத்தையும் ஈசன் நீக்கி அருளினார்சந்திரனை தன் திருமுடியில் அலங்கரிக்கும் வண்ணம் அணிந்து கொண்டார்.
திருப்பாற்கடலைக் கடையும்போது இலக்குமியுடன் தோன்றிய சந்திரனுக்கு அருள்பாலித்த மூர்த்தமே சந்திரசேகரமூர்த்தம்நோய்களால் பீடிக்கப்பட்டு வருந்துவோர் சந்திரசேகரரை வணங்கினால் நோய் நீங்கி நலம் பெறுவர்.

தலச்சிறப்பு

இத்திருத்தலத்திற்கு பல திருநாமங்கள் உண்டு
இடபம் பூஜித்ததால்இடப புரிஎன்றும்,
காளி பூஜித்ததால்காளிபுரிஎன்றும்
மகாகாளன் பூஜித்ததால்கணபுரிஎன்றும்
பிரம்மன் பூஜித்ததால்பிரம்மபுரிஎன்றும்
குபேரன் பூஜித்து திருப்பணிகள் செய்ததால்தென்னளகாபுரிஎன்றும்
ஆதிசேடன் பூஜித்ததால்சேடபுரிஎன்றும்
இந்திரனின் ஐராவதம் பூஜித்ததால்அயிராவதபுரிஎன்றும் எல்லவற்றிற்கும் மேலாக
இறைவி உமாதேவியார் இத்திருத்தலத்தில் தேவதாரு மரத்தின்கீழ் சுயமாய் எழுந்தருளியுள்ள காளீஸ்வர மூர்த்தியை பூஜித்தமையால், இத்தலம்தேவதாரு வனம்என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
            அகலிகை காரணமாக கௌதம முனிவரால் சாபம் பெற்ற இந்திரன் சிவகங்கையில் மூழ்கி ஆயிரத்தெட்டு சிவலிங்கம் அமைத்து வழிபட்டார்அந்த ஆயிரத்தெட்டு லிங்கமே இன்று நமக்கு சகஸ்ரலிங்கமாக காட்சியளிக்கிறதுகருடன் தன் தாயின் வேதனையை போக்க இத்தலத்தில் வழிபட்டார்வருணன், திக்குபாலர், அகத்தியர், சேரமான் பெருமாள் நாயனார் உட்பட இத்திருத்தலத்தில் வழிபட்டு உய்தவர்கள் எண்ணிடலங்காதவர்கள்.

தீர்த்தச் சிறப்பு
         திருக்கானப்பேர் ஆலயத்தின் தீர்த்தங்கள் வரலாற்றுச் சிறப்புடையவை.


1) இலக்குமி தீர்த்தம்
            வாலகில்லியார் சாபத்தால் மானுட உருப்பெற்ற இலக்குமி, இத்தலத்தில், தீர்த்தம் உருவாக்கி வழிபட்டு உண்மை உருப் பெற்றதால், இத் தீர்த்தம் இலக்குமி தீர்த்தம் எனப்பெயர் பெற்றது.
2) சுதர்சன தீர்த்தம்.
            திருமாலின் சுதர்சன சக்கரம் தன் கூர் மழுங்கியபோது இங்கு வழிபட்டு ஒளிபெற்றதால் உருவான தீர்த்தமே சுதர்சன தீர்த்தம்.
3) திக்குபாலகர் தீர்த்தம்
            திக்குபாலகர்கள் வழிபட்டதன் நினைவாக ஏற்படுத்திய தீர்த்தமே திக்குபாலகர் தீர்த்தமாகும்.
4) உருத்திர தீர்த்தம்
            ஆயிரம் கோடி உருத்திரர்கள் அன்னையின் சினத்தால் அயிரை மீன்களாகி அடைக்கலம் புகுந்த தீர்த்தம் உருத்திர தீர்த்தம் ஆகும்.
            வீரசேன பாண்டியன் குழந்தைப்பேறுக்காக தங்கத்தால் செய்த பொய் குழந்தையை இத்தீர்த்தத்தில் நீராட்ட அது உயிர் பெற்று உண்மைக் குழந்தையான வரலாறு உண்டு
            மார்கழிப் பவுர்ணமியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் இந்த உருத்திர தீர்த்தத்தில் வந்து கலந்து புண்ணியம் தேடிக் கொள்வதாக ஐதீகம்
5) சிவகெங்கை தீர்த்தம்
            தேவதாச பாண்டியன் காசிக்குச் சென்று கங்கை நீர் கொண்டு, இறைவனை நீராட்ட விரும்பினார்ஆனால் காளீசரோ சிவகெங்கைத் தீர்த்த நீரின் புனிதத்தன்மையை உணர்த்தியதால் அந்நீரால் இறைவனை நீராட்டி மன்னன் மகிழ்ந்து வணங்கினார்.
6) ஆனைமடு தீர்த்தம்
            தேவேந்திரனின் வெள்ளை யானை ஐராவதம் தனது கொம்பினால் தோண்டிய தீர்த்தமே ஆனைமடு தீர்த்தம்இத்தீர்த்தத்தில் நீர் எடுத்தே திருக்கானப்பேர் மூர்த்திகள் நீராட்டப்படுகின்றனர்.
            ஸ்ரீ ராமபிரான் தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க, இந்த தீர்த்தத்தில் நீராடினார்.
            சுகரிதனின் சய ரோகத்தை நீக்கிய இத்தீர்த்தத்தில் நீராடி தனது பேயுரு நீங்கப் பெற்றார் வேதகன் என்ற அந்தணர்.
            இந்த ஆனைமடு தீர்த்தத்தில் நீராடி காளீசரையும், சோமேசரையும் வழிபடும் பக்தர்கள் பிணிகள் நீங்கி நன்மை பெறுகின்றனர்.

அருளாளர்கள்

            திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி சுவாமிகள், கல்லாட தேவர், கபிலதேவர், பரண தேவர், சேக்கிழார், அருணகிரிநாதர், வள்ளலார் முதலிய அருளாளர்களால் போற்றப்பட்ட புண்ணிய ஸ்தலம் திருக்கானப்பேர்

லிங்கச் சிறப்பு



சுயமாய் உண்டானது சுயம்பு லிங்கம்.
தேவர்களால் செய்யப்பட்டது திவ்ய லிங்கம்.
தேவ, பிரம்ம ரிஷிகளாலும், யோகிகளாலும் பூஜிக்கப்பட்ட லிங்கம் ஆர்ஷ லிங்கம்.
மனிதர்களால் ஸ்தாபிக்கப்பட்டது மானுட லிங்கம்.

திருக்கானப்பேரில்
1)   காளீஸ்வரர்சுயம்புலிங்கம்
2)   சேமேசலிங்கம், சகஸ்ரலிங்கம், வருணலிங்ம்திவ்ய லிங்கம்
3)   சுந்தரேஸ்வரர்மானுட லிங்கம்
4)   அகத்தியர் முதலிய ரிஷிகளும், யோகிகளும் வழிபட்டதால் சோமேசர்ஆர்ஷ லிங்கம்.

இந்த நால்வகை லிங்கங்களும் இத்தலத்தில் அமைந்துள்ளது தனிப்பெரும் சிறப்பாகும்ஆகவே மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் மூன்றிலும் சிறந்ததும், மூன்று சிவாலயங்கள் அமையப் பெற்றதுமான புண்ணிய ஸ்தலமே திருக்கானப்பேர் என்னும் காளையார் கோவில்

            இத்தகைய பெருமை வாய்ந்த ஆலயத்திற்காகவே மருது சகோதரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர் என்பதால் ஆன்மீகத்தலமான திருக்கானப்பேர் காளையார் கோவிலாக புகழ்பெற்ற வீர வரலாற்றை உள்ளடக்கி கம்பீரமாக காட்சியளிக்கிறது.
                                                                       --- இரா. சைலஜா சக்தி





.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}