Friday 11 September 2015

திருக்கானப்பேர் என்னும் காளையார்கோவில்

திருக்கானப்பேர் என்னும் காளையார்கோவில்

            பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற பதினான்கு திருத்தலங்களில் முக்கியமான தலம் திருக்கானப்பேர் என்று அழைக்கப்படும் காளையார் கோவில்.
            சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாண்டிய நாட்டுத் திருத்தல யாத்திரையை முடித்து, பகவான் ரமண மகரிஷி பிறந்த ஊரான திருச்சுழியலில் (தற்போது திருச்சுழி) தங்கி இருந்தார்அப்பொழுது இரவில் அவர் கனவில் இறைவன் காளை வடிவு கொண்டு முடியில் பிறை தரித்து காட்சி தந்துயாம் இருப்பது கானப்பேர்என உணர்த்தினார்.
            இத்திருத்தலத்தில் லிங்க வடிவம் தாங்கி மூலமூர்த்திகளாக அருள்பாலிப்பவர்கள்
1)   ஶ்ரீ சோமேஸ்வரர்
2)   ஶ்ரீ ஸ்வர்ண காளீஸ்வரர்
3)   ஶ்ரீ சுந்தரேஸ்வரர்
திருக்கானப்பேரில் மூன்று லிங்கங்கள் ஒரே ஆலயத்தில் அமைந்திருப்பது மிகச் சிறப்பான அம்சமாகும்.


1) ஶ்ரீ சோமேஸ்வரர் - ஶ்ரீ சௌந்தரநாயகி

            இத்திருக்கோவிலில் உள்ள மூன்று சதாசிவ மூர்த்தங்களில் இவரே பெரிய தோற்றப் பொலிவோடு திகழ்பவர். பிரம்மா, குபேரன், சந்திரன் ஆகியோரால் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட சோமேஸ்வரர் ஸ்தாபகலிங்கம் ஆகும்சோமேசரின் ராஜகோபுரம் 18ம் நூற்றாண்டில் மருது சகோதரர்களால் கட்டப்பட்டதுஇதன் உயரம் 155½ அடி அகலம் 93 அடி
            ராஜகோபுரம் வழியாக உள்நுழையும் போது முதலில் அருள் பாலிப்பவர் ஶ்ரீசோமேஸ்வரர். சோமேசர் சன்னதிக்குள் நுழையும் முன் இடது பக்கத்தில் இந்திரனால் பூஜிக்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட சகஸ்ரலிங்கம் அமைந்துள்ளது.

            நந்திகேஸ்வரரையும், கொடிமரத்தையும் தாண்டி உள்ளே சென்றதும், பிரகாத்தில் சூரியன், தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், விநாயகர் இருவர், சுகந்தவனப்பெருமாள், விசுவநாதர், லிங்கோத்பவர், வீரபத்திரர், சப்தமாதர், கெஜலட்சுமி, சுப்பிரமணியர், பிரம்மா தனி சன்னதியுடன் நடராஜர், சண்டீஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், சந்திரன் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.
            சோமேசர் சன்னதிக்கு வலது பக்கம் அமைந்திருப்பது சௌந்தரநாயகி அம்மனின் சன்னதிகருவறை மண்டப திருச்சுவரினை இச்சா சக்தி, ஞான சக்தி மற்றும் கிரியா சக்திகள் அலங்கரிக்கிறார்கள். சோமசருக்கும், சௌந்திரநாயகிக்கும் உரிய தனி பள்ளியறை சன்னதி உண்டு.

2) ஸ்ரீ ஸ்வர்ண காளீஸ்வரர்ஸ்ரீ சொர்ணவல்லி

            உமாதேவிக்கு அருள்பாலிக்க இறைவன் தானே சுயம்புலிங்கமாக எழுந்தருளியவரே ஸ்ரீ சொர்ண காளீஸ்வரர். ஏழாம் நூற்றாண்டில் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் காளீஸ்வரருக்கு ராஜகோபுரம் கட்டப்பட்டது. இதன் உயரம் 90 அடி, அகலம் 57 அடி 8 அங்குலம்.    
            சௌந்தரநாயகி சன்னதிக்கு அடுத்து அமைந்து இருப்பது சொர்ணகாளீஸ்வரர் சன்னதி. இது இரண்டு பிரகாரத்துடன் கூடியது.

            கொடிமரம், நந்தீஸ்வரர் தாண்டி உள்ளே முதலில் அதிகார நந்தி, வல்லப கணபதி, நால்வர், அறுபத்து மூவர், பைரவர், சப்தமாதர், விநாயகர், சந்திரசேகரருக்கு தனி சன்னதி, பஞ்சலிங்கங்கள், அஷ்டலட்சுமிகள், தனி சன்னதியில், செந்தில் முருகன், அவரைத் தொடர்ந்து வருணனால் பூஜிக்கப்பட்ட வருணலிங்கம், தனி சன்னதியில் நடராஜர், அடுத்து பைரவர் என வெளிப்பிரகாரம் முடிவடைகிறது.
            உட்பிரகாரத்தில் விநாயகர் தொடங்கி பைரவர் முடிய எழுந்தருளியுள்ளனர்தட்சிணமூர்த்தி தனிச்சிறப்பு வாய்ந்தவர்லிங்கோத்பவர் கருவறை சுவற்றிலும் அதற்கு எதிரிலுமாக இருவர் உள்ளனர்
            கருவறை சுவற்றில் பிரம்மா, துர்க்கை, சண்டீஸ்வரர், சுப்பிரமணியர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர்முருகனுக்கும், சண்டீஸ்வரருக்கும் தனித்தனி சன்னதி உள்ளனசனீஸ்வரரும் அருள் புரிகிறார்.
            ஸ்வர்ணவல்லி அம்பாளுக்கு தனிச்சன்னதிசுவாமி, அம்பாள் இருவரின் கருவறையும் கருங்கல்லில் மிக நுட்பமான கலை வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளன.
            இங்குள்ள பள்ளியறை தங்கத்தினாலான ஊஞ்சலோடு கூடியது. தங்கத்தாலும், தந்தத்தாலும் ஆன இப் பொன்னூசல் மிகச் சிறப்பு வாய்ந்தது.

3) ஸ்ரீ சுந்தரேஸ்வரர் – ஸ்ரீ மீனாட்சி அம்மன்


            வேட்டைக்கு வந்த வரகுண பாண்டியன் இரவு வர, மதுரைக்குத் திரும்ப முடியாமல் தவித்ததால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அவருக்காக திருக்கானப்பேரில் வந்து காட்சி கொடுத்த அதிசயத்தை நினைவு கூறும் வண்ணம் எழுப்பப்பட்டது சுந்தரேஸ்வரர் மீனாட்சி கோவில் ஆகும்.
            மானுட லிங்கமான சுந்தரேஸ்வரர் காரணலிங்கமும் ஆவார்

காளீஸ்வரர் சன்னதிக்கும், சொர்ணவல்லி சன்னதிக்கும் இடையில் அமைந்திருப்பது சுந்தரேஸ்வரர் - மீனாட்சி திருக்கோவில்இங்கு பரிவார தேவதைகள், தனி சன்னதியில் நடராஜர், நவக்கிரகங்கள் அனைவரும் அருள் பாலிக்கின்றனர்
சுவாமி சன்னதியை நோக்கியவாறு பிரகாரச் சுவரில் வரகுண பாண்டியன் கூப்பிய கரங்களுடன் நிற்கிறார்

சந்திரசேகர மூர்த்தி

            ஈசனின் சிறப்பு மிகுந்த ஆறு திருமூர்த்தங்கள் திருக்கானப்பேர் சிவாலயத்தில் அமைந்துள்ளனர்அவற்றில் முக்கியமானவர் சந்திரசேகரர்.
தக்கனின் 27 பெண்களை சந்திரன் மணந்து கொண்டார். ஆனால் அவர்களில் கார்த்திகை, ரோகிணி இருவரிடம் மட்டுமே மிகுந்த அன்பு கொண்டார்இதனால் கோபம் கொண்ட தக்கன், சந்திரன் ஒவ்வொரு கலையாக தேயவும், சயரோகம் பற்றவும் சாபமிட்டார்
சந்திரன் சிவனை வணங்கியதால், அவரின் கலைகள் மீண்டும் வளர அருளியதோடு அவரது சயரோகத்தையும் ஈசன் நீக்கி அருளினார்சந்திரனை தன் திருமுடியில் அலங்கரிக்கும் வண்ணம் அணிந்து கொண்டார்.
திருப்பாற்கடலைக் கடையும்போது இலக்குமியுடன் தோன்றிய சந்திரனுக்கு அருள்பாலித்த மூர்த்தமே சந்திரசேகரமூர்த்தம்நோய்களால் பீடிக்கப்பட்டு வருந்துவோர் சந்திரசேகரரை வணங்கினால் நோய் நீங்கி நலம் பெறுவர்.

தலச்சிறப்பு

இத்திருத்தலத்திற்கு பல திருநாமங்கள் உண்டு
இடபம் பூஜித்ததால்இடப புரிஎன்றும்,
காளி பூஜித்ததால்காளிபுரிஎன்றும்
மகாகாளன் பூஜித்ததால்கணபுரிஎன்றும்
பிரம்மன் பூஜித்ததால்பிரம்மபுரிஎன்றும்
குபேரன் பூஜித்து திருப்பணிகள் செய்ததால்தென்னளகாபுரிஎன்றும்
ஆதிசேடன் பூஜித்ததால்சேடபுரிஎன்றும்
இந்திரனின் ஐராவதம் பூஜித்ததால்அயிராவதபுரிஎன்றும் எல்லவற்றிற்கும் மேலாக
இறைவி உமாதேவியார் இத்திருத்தலத்தில் தேவதாரு மரத்தின்கீழ் சுயமாய் எழுந்தருளியுள்ள காளீஸ்வர மூர்த்தியை பூஜித்தமையால், இத்தலம்தேவதாரு வனம்என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
            அகலிகை காரணமாக கௌதம முனிவரால் சாபம் பெற்ற இந்திரன் சிவகங்கையில் மூழ்கி ஆயிரத்தெட்டு சிவலிங்கம் அமைத்து வழிபட்டார்அந்த ஆயிரத்தெட்டு லிங்கமே இன்று நமக்கு சகஸ்ரலிங்கமாக காட்சியளிக்கிறதுகருடன் தன் தாயின் வேதனையை போக்க இத்தலத்தில் வழிபட்டார்வருணன், திக்குபாலர், அகத்தியர், சேரமான் பெருமாள் நாயனார் உட்பட இத்திருத்தலத்தில் வழிபட்டு உய்தவர்கள் எண்ணிடலங்காதவர்கள்.

தீர்த்தச் சிறப்பு
         திருக்கானப்பேர் ஆலயத்தின் தீர்த்தங்கள் வரலாற்றுச் சிறப்புடையவை.


1) இலக்குமி தீர்த்தம்
            வாலகில்லியார் சாபத்தால் மானுட உருப்பெற்ற இலக்குமி, இத்தலத்தில், தீர்த்தம் உருவாக்கி வழிபட்டு உண்மை உருப் பெற்றதால், இத் தீர்த்தம் இலக்குமி தீர்த்தம் எனப்பெயர் பெற்றது.
2) சுதர்சன தீர்த்தம்.
            திருமாலின் சுதர்சன சக்கரம் தன் கூர் மழுங்கியபோது இங்கு வழிபட்டு ஒளிபெற்றதால் உருவான தீர்த்தமே சுதர்சன தீர்த்தம்.
3) திக்குபாலகர் தீர்த்தம்
            திக்குபாலகர்கள் வழிபட்டதன் நினைவாக ஏற்படுத்திய தீர்த்தமே திக்குபாலகர் தீர்த்தமாகும்.
4) உருத்திர தீர்த்தம்
            ஆயிரம் கோடி உருத்திரர்கள் அன்னையின் சினத்தால் அயிரை மீன்களாகி அடைக்கலம் புகுந்த தீர்த்தம் உருத்திர தீர்த்தம் ஆகும்.
            வீரசேன பாண்டியன் குழந்தைப்பேறுக்காக தங்கத்தால் செய்த பொய் குழந்தையை இத்தீர்த்தத்தில் நீராட்ட அது உயிர் பெற்று உண்மைக் குழந்தையான வரலாறு உண்டு
            மார்கழிப் பவுர்ணமியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் இந்த உருத்திர தீர்த்தத்தில் வந்து கலந்து புண்ணியம் தேடிக் கொள்வதாக ஐதீகம்
5) சிவகெங்கை தீர்த்தம்
            தேவதாச பாண்டியன் காசிக்குச் சென்று கங்கை நீர் கொண்டு, இறைவனை நீராட்ட விரும்பினார்ஆனால் காளீசரோ சிவகெங்கைத் தீர்த்த நீரின் புனிதத்தன்மையை உணர்த்தியதால் அந்நீரால் இறைவனை நீராட்டி மன்னன் மகிழ்ந்து வணங்கினார்.
6) ஆனைமடு தீர்த்தம்
            தேவேந்திரனின் வெள்ளை யானை ஐராவதம் தனது கொம்பினால் தோண்டிய தீர்த்தமே ஆனைமடு தீர்த்தம்இத்தீர்த்தத்தில் நீர் எடுத்தே திருக்கானப்பேர் மூர்த்திகள் நீராட்டப்படுகின்றனர்.
            ஸ்ரீ ராமபிரான் தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க, இந்த தீர்த்தத்தில் நீராடினார்.
            சுகரிதனின் சய ரோகத்தை நீக்கிய இத்தீர்த்தத்தில் நீராடி தனது பேயுரு நீங்கப் பெற்றார் வேதகன் என்ற அந்தணர்.
            இந்த ஆனைமடு தீர்த்தத்தில் நீராடி காளீசரையும், சோமேசரையும் வழிபடும் பக்தர்கள் பிணிகள் நீங்கி நன்மை பெறுகின்றனர்.

அருளாளர்கள்

            திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி சுவாமிகள், கல்லாட தேவர், கபிலதேவர், பரண தேவர், சேக்கிழார், அருணகிரிநாதர், வள்ளலார் முதலிய அருளாளர்களால் போற்றப்பட்ட புண்ணிய ஸ்தலம் திருக்கானப்பேர்

லிங்கச் சிறப்பு



சுயமாய் உண்டானது சுயம்பு லிங்கம்.
தேவர்களால் செய்யப்பட்டது திவ்ய லிங்கம்.
தேவ, பிரம்ம ரிஷிகளாலும், யோகிகளாலும் பூஜிக்கப்பட்ட லிங்கம் ஆர்ஷ லிங்கம்.
மனிதர்களால் ஸ்தாபிக்கப்பட்டது மானுட லிங்கம்.

திருக்கானப்பேரில்
1)   காளீஸ்வரர்சுயம்புலிங்கம்
2)   சேமேசலிங்கம், சகஸ்ரலிங்கம், வருணலிங்ம்திவ்ய லிங்கம்
3)   சுந்தரேஸ்வரர்மானுட லிங்கம்
4)   அகத்தியர் முதலிய ரிஷிகளும், யோகிகளும் வழிபட்டதால் சோமேசர்ஆர்ஷ லிங்கம்.

இந்த நால்வகை லிங்கங்களும் இத்தலத்தில் அமைந்துள்ளது தனிப்பெரும் சிறப்பாகும்ஆகவே மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் மூன்றிலும் சிறந்ததும், மூன்று சிவாலயங்கள் அமையப் பெற்றதுமான புண்ணிய ஸ்தலமே திருக்கானப்பேர் என்னும் காளையார் கோவில்

            இத்தகைய பெருமை வாய்ந்த ஆலயத்திற்காகவே மருது சகோதரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர் என்பதால் ஆன்மீகத்தலமான திருக்கானப்பேர் காளையார் கோவிலாக புகழ்பெற்ற வீர வரலாற்றை உள்ளடக்கி கம்பீரமாக காட்சியளிக்கிறது.
                                                                       --- இரா. சைலஜா சக்தி





No comments:

Post a Comment

.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}