Tuesday 10 May 2016

பெண் சேகுவரோ மாலினி(கவிதை))



                  பெண் சேகுவரோ மாலினி



அழகியவள் பெயர் மாலினி
அடையாளப் பெயர் பத்திரிக்கை நிருபர்

தார்மீக எழுத்தினால் தவறுகளுக்கு
தண்டனைவிலாசம் தேடித்தருபவள்
பத்திரிக்கை உலகின் பெண்சேகுவரோ
ஊடக உலகின் வீரமங்கை

மாலினியின் வெற்றிப்பேனா இன்று
மைசிந் துடிப்பது 
கண்ணீர் சிந்தும்
மகளிர் துயர்துடைக்க !!


இடம் செங்கல்சூளை

மடிசுமந்த மகள்களை கரையேற்ற
செங்கல் சுமந்து தள்ளாடும் தாய்மார்கள்

கழுத்தில் தாலியேற கட்டுடல்
கறுத்து சிறுக்கும் கன்னிப்பெண்கள்

பிள்ளைக்கு பாலூட்ட
காய்ந்த வயிறும்
கனத்த நெஞ்சுமாய்
சூளை சூட்டில்
வெந்து அவியும் இளம்தாய்கள்

விதவிதமாய் பேட்டி கண்டாள் மாலினி
அள்ளிவீசினாள் அறிவுரைகளை அப்பெண்களுக்கு
உரிமைக்காக போராட,
ஏய்க்கும் எஜமானர்களை எதிர்க்க

முடிவில் பசித்தது  பத்திரிக்கை வயிறு
கடை இட்லி கசந்தது
சாம்பார் சட்னியோ புளித்தது
பரிசளித்தாள் குப்பைத்தொட்டிக்கு
இட்லியையும் இத்யாதிகளையும்

வேடிக்கை பார்த்த இளம்தாயொருத்தி
நெருங்கி வந்து சுருங்கச் சொன்னாள்


நீயறிந்த போராட்டம் நானறியேன்
நானறிந்த பசி நீயறியாய்
குப்பைத்தொட்டிக்கு உணவளிக்கிறாய் நீ
குப்பையே உணவாகிறது என் பிள்ளைகளுக்கு

சகோதரி !
வறுமையின் வலி அறிவாய் !!
உணவின் புனிதம் உணர்வாய் !!
அறிந்தபின் அழைப்பாயாக எங்களை ...
உன்பின்னே வரச்சொல்லி...

நகர்ந்து சென்றாள்
மீண்டும் செங்கல் சுமக்க...

விழுங்காத உணவுக்காக தொண்டைக்குள்
விக்கித்து நின்றாள் மாலினி ...
இல்லை
பெண்சேகுவரோ !

---   இரா.சைலஜா சக்தி

5 comments:

  1. கவிதை மிகவும் அருமையாக உள்ளது. இன்றைய நவீன அவலத்தை சுட்டிக் காட்டுவது போல் உள்ளது. பணிகள் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிகவும் நன்றி மதினி

    ReplyDelete
  3. Super kavithai... Congrats... Keep it up....

    ReplyDelete

.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}